Published:Updated:

பழங்குடியின சிறார்களின் கல்விக்காக `வீதி வகுப்பறைகள்' - தன்னார்வலர்களின் புதிய முயற்சி!

பாடம் படிக்கும் பழங்குடியினக் குழந்தைகள்
பாடம் படிக்கும் பழங்குடியினக் குழந்தைகள்

``வெறுமனே புத்தகத்திலுள்ள பாடங்கள் மட்டுமல்லாது, இயற்கை, வனம், சுற்றுச்சூழல், சுகாதாரம், உடற்கல்வி போன்றவற்றையும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க உள்ளோம். இந்த 10 இடங்களிலும் சிறிய நூலகங்களையும் அமைக்கவுள்ளோம்."

கொரோனா வைரஸ் பரவலையொட்டி நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு, பள்ளிக் குழந்தைகளின் கல்வியில் பெரும் பாதிப்புகளை உண்டாக்கியிருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் பள்ளிகளால், குழந்தைகளுக்குக் கல்வியின் மீதான ஆர்வம் வெகுவாகக் குறைந்து வருவதாகக் கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சிக்கலான சூழலில் ஆன்லைன் வகுப்புகளும், கல்வித் தொலைக்காட்சியும்தான் மாணவர்களின் கல்விக்கு ஓரளவு உதவிகரமாக இருந்தன. ஆனால், இவையனைத்தும் தமிழகத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் சென்று சேர்ந்தனவா என்றால் அது கேள்விக்குறிதான். குறிப்பாக, இந்த ஊரடங்கால் இன்டர்நெட், மின்சாரம் மற்றும் தொலைக்காட்சி வசதியில்லாத மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினக் குழந்தைகளின் கல்வியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

வீதி வகுப்பறைகள் திட்டம் தொடக்க நிகழ்வு
வீதி வகுப்பறைகள் திட்டம் தொடக்க நிகழ்வு
முதல் பருவமே முடியப் போகுது, இன்னும் நோட்டுகள் வழங்கல!- லாக் டெளனில் அரசுப் பள்ளிகள்

ஏற்கெனவே கல்வியில் பின்தங்கியுள்ள பழங்குடியினக் குழந்தைகளுக்கு இந்தக் கொரோனா சூழல் மேலும் பின்னடைவைத் தந்தது. பழங்குடியினக் குழந்தைகள் பலரும் குழந்தைத் தொழிலாளர்களாகும் சூழல் உண்டானது. குழந்தைத் திருமணங்கள் அதிகரித்தன. இப்படியான சூழலில் பழங்குடியினக் குழந்தைகளை மீண்டும் கல்வியை நோக்கிக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் வகையில் `வீதி வகுப்பறைகள் திட்டம்’ ஒன்றை ஆரம்பித்து அசத்தியுள்ளார் ஈரோட்டைச் சேர்ந்த சுடர் நடராஜ். சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி ஈரோடு மாவட்டத்திலுள்ள 10 பழங்குடியின கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டு இந்த வீதி வகுப்பறைகள் திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்த வீதி வகுப்பறைகள் திட்டத்தை முன்னெடுத்திருக்கும் சுடர் நடராஜிடம் பேசினோம். ``கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகப் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சமவெளிப் பகுதிகளிலுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள், டியூஷன், பெற்றோர்கள் சொல்லிக்கொடுப்பது எனக் கல்வி கற்பதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், மலைப்பகுதி மாணவர்களுக்கு இப்படியான வாய்ப்புகள் எதுவும் இல்லை. செல்போன் சிக்னலுக்கே வழியில்லாத பல பழங்குடியின மலைக்கிராமங்களில் எப்படி இன்டர்நெட் வசதி கிடைக்கும்? இதனால் ஆன்லைன் வகுப்புகள் என்பது மலைப்பகுதி மாணவர்களுக்கு சாத்தியமில்லாமல் போனது.

வீதி வகுப்பறைகள் திட்டம்
வீதி வகுப்பறைகள் திட்டம்

இதனால் கல்வி மீது அவர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஆர்வமும் குறைய ஆரம்பித்தது. குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமானது. அதேபோல குழந்தைத் திருமணங்களும் அதிகரித்து வருவதைப் பார்த்து அதிர்ந்துபோனோம்.

இந்தச் சூழலில்தான் பழங்குடியினக் குழந்தைகள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று பாடங்களைக் கற்பிக்கும் வகையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த `வீதி வகுப்பறைகள் திட்டம்’ என்பதை முன்னெடுத்துள்ளோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கெனவே எங்களுடைய `சுடர்' தொண்டு நிறுவனத்தின் மூலம், ஈரோடு மாவட்டத்திலுள்ள 6 மலைக் கிராமங்களில் மத்திய அரசின் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளை நடத்தி வருகிறோம். அந்த அனுபவத்திலும், எங்களுடைய பள்ளிகளில் படித்த இளைஞர்கள், உள்ளூரிலுள்ள பட்டதாரி இளைஞர்களை வைத்து மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க முடிவெடுத்துள்ளோம். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் பர்கூர் மலையில் கொங்காடை, அக்னிபாவி ஆகிய கிராமங்களிலும், கடம்பூர் மலைப்பகுதியில் பெரியகுன்றி, அனில்நத்தம், இந்திரா நகர், மாகாளிதொட்டி, உகினியம், நகலூர் மற்றும் ஆசனூர் மலைப்  பகுதியில் கெத்தேசால், கானக்கரை உள்ளிட்ட 10 பழங்குடியின கிராமங்களில் வீதி வகுப்பறைகளை ஆரம்பித்துள்ளோம்.

பழங்குடியினக் குழந்தைகள்
பழங்குடியினக் குழந்தைகள்
அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை! தயார் நிலையில் இருக்கின்றனவா அரசுப் பள்ளிகள்?

வெறுமனே புத்தகத்திலுள்ள பாடங்கள் மட்டுமல்லாது, இயற்கை, வனம், சுற்றுச்சூழல், சுகாதாரம், உடற்கல்வி போன்றவற்றையும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க உள்ளோம். இந்த 10 இடங்களிலும் சிறிய நூலகங்களையும் அமைக்கவுள்ளோம். மேலும், இயற்கை வழி வேளாண்மையை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் வகையில் காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை விதைக்கச் சொல்லிக் கொடுக்கவிருக்கிறோம்.

மலைக்கிராமங்களில் பெருகிவரும் சமகாலப் பிரச்னைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் போன்றவற்றையும் மாணவர்களிடம் பேசவிருக்கிறோம். தமிழக அரசும் மலைப்பகுதியிலுள்ள குழந்தைகளுக்கு அவர்களுடைய வாழ்வு முறை, கற்கும் திறன் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இதேபோன்று சிறப்பு கல்வித் திட்டங்களை உருவாக்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு