Published:Updated:

புதிய கல்விக் கொள்கை `அனைவருக்கும் கல்வி டு எம்.பில் நிறுத்தம்!’ - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே
மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே

``2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுப்படுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.”

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. பல்வேறு விஷயங்கள் குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, 21-ம் நூற்றாண்டுக்கான புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது மத்திய கல்வி அமைச்சகம் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை சுமார் 22 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்புகளை மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களை இன்று சந்தித்து வெளியிட்டுள்ளார்.

புதிய கல்விக் கொள்கை
புதிய கல்விக் கொள்கை
விகடன்

அமித் கரே பேசும்போது, ``கல்விக் கொள்கையில் கடந்த 34 ஆண்டுகளாக எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து தற்போது முக்கியத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கைகளின்படி, 3 முதல் 18 வயது வரை கட்டாயக் கல்வி அளிக்கப்பட உள்ளது. புத்தகம் வழியாக மட்டுமன்றி விளையாட்டுகளின் மூலமாகவும் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது. பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் தங்களது படிப்பைத் தொடர வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எம்.பில் படிப்புகள் நிறுத்தப்படுவதாகவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

கல்வி நிலையம்
கல்வி நிலையம்
மாதிரிப்படம்

தொடர்ந்து அவர் பேசுகையில், `` தமிழ் உட்பட பல மாநில மொழிகளிலும் இணையவழியில் கல்விசார் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. பாடத்திட்டங்களின் சுமைகளைக் குறைக்கவும் தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவும் புதிய கல்விக்கொள்கையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறன் மாணவர்களின் கற்றலுக்கு பயன்படும் வகையில் புதிய மென்பொருள்கள் உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளுக்கு கிரேடுகளின் அடிப்படையில் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும். உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும். தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணங்கள் வெளிப்படையாகவும் முழுமையாகவும் வெளியிடப்படும். கல்வியில் அனைவருக்குமான வாய்ப்புகள் உறுதி செய்யப்படுவதோடு நாடு முழுவதும் கல்வித்தரம் என்பது ஒரே மாதிரியாக இருக்கும். நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவிகிதத்தை கல்வித்துறைக்கு ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

`உரிமை பறிபோகும்; கல்வி சிதைந்துபோகும்!'- புதிய கல்விக் கொள்கை பற்றி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி
அடுத்த கட்டுரைக்கு