Published:Updated:

நிதி ஆயோக் கல்வித் தரவரிசை: முன்னணியில் கேரளா, தமிழகம் - காரணம் இதுதான்!

கேரளத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 50 லட்சம். தமிழகத்தில் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம்.

NITI Aayog
NITI Aayog

தேசிய கல்விக்கொள்கை செயலாக்கத்துக்கு முன்பான மாநில அளவிலான கல்வித் தரநிலை ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது, நிதி ஆயோக். அதில், முதல் இடத்தில் கேரள மாநிலமும் இரண்டாம் இடத்தில் தமிழகமும் இடம் பெற்றுள்ளன. அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசம் மிகவும் பின்னடைந்து, தரவரிசையில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது.

கேரளத்தில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம். தமிழகத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம்.  கேரள அரசு, முழுக்கமுழுக்க கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதும், தமிழக அரசு திராவிடக் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதும் ஒருவகையில் கல்விச்சூழல் மேம்பாட்டுக்குக் காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள்.

அரசுப்பள்ளி மாணவர்கள் இந்தி கற்பதற்கான ’சுருளி இந்தி’ என்கிற தனி அப்ளிகேஷனையே கேரள மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை கல்வியில் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வலுவடைந்திருக்கிறது எனலாம். அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு பிள்ளையின் கற்றல் திறன் அடிப்படையில், அவர்களுக்கான பாடம் கற்பிக்கப்படுகிறது. அந்த மாநில அரசு அறிமுகப்படுத்திய 'ஷ்ரத்தா' திட்டத்தின்படி சராசரிக்கும் கீழான திறன்கொண்ட மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள், பயிற்சிப் பட்டறைகள், உரையாடல் வகுப்புகள் ஆகியன தனியே நடத்தப்படுகின்றன. அது, மாணவர்களிடம் நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார், அந்த மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத்.  

C. Raveendranath, Kerala Education Minister
C. Raveendranath, Kerala Education Minister

கல்வியில் இந்தியைத் திணிப்பதை தமிழகத்துடன் சேர்ந்து கேரளமும் கைகோத்து எதிர்த்தாலும், அரசுப்பள்ளி மாணவர்கள் இந்தி கற்பதற்கான ’சுருளி இந்தி’ என்கிற தனி அப்ளிகேஷனையே அந்த மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

`இனி ஆன்லைன் மூலமே விடைத்தாள் திருத்தம்!' -அமெரிக்கக் கல்வி நிறுவனங்களோடு கைகோக்கும் அண்ணா பல்கலை

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இந்தி மொழிப் பயிற்சி கொடுக்க இந்த அப்ளிகேஷன் அரசுப் பள்ளிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. வேற்றுமொழிக்கு அப்ளிகேஷன் இருக்கும்போது, தாய்மொழியைக் கற்பதற்கு அப்ளிகேஷன் இருக்காதா?

’மதுரம் மலையாளம்’ என்கிற அப்ளிகேஷனை அதற்காக உருவாக்கியுள்ளது, கேரள அரசு. மாணவர்களிடையே மலையாளப் பேச்சு வழக்கு மற்றும் எழுத்து வழக்கை அதிகரிக்க இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தப்படுகிறது.

 niti.gov.in
niti.gov.in

இவை அத்தனையும் தவிர, மாணவர்களுக்கு எளிமையான வழியில் கணிதப் பாடத்தைக் கற்றுத்தரும் 'கணித விஜயம்' என்னும் சிறப்பு அப்ளிகேஷன், அங்கே அரசுப் பள்ளிகளில் கையாளப்படுகிறது. மேலும், குளிர்சாதனப் பெட்டியுடன்கூடிய மதிய உணவு அறை, தமிழகப் பள்ளிகளைப் போலவே ஸ்மார்ட் வகுப்பறைகள் என அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது, கேரள அரசு.

தமிழகத்தைப் பொறுத்தவரை மதிய உணவுத் திட்டம் தேசிய அளவில் மாநிலத்துக்கான அடையாளமாக இருக்கிறது.
K. A. Sengottaiyan, Minister for School Education
K. A. Sengottaiyan, Minister for School Education

தமிழகத்தைப் பொறுத்தவரை மதிய உணவுத்திட்டம் தேசிய அளவில் மாநிலத்துக்கான அடையாளமாக இருக்கிறது. தவிர புத்தகப்பை, மடிக்கணினி, ஜியோமெட்ரி பாக்ஸ், நோட்டுப் புத்தகங்கள், பஸ் பாஸ், மிதிவண்டி, சீருடை என மாணவர்களின் ஒட்டுமொத்த கல்வித் தேவைக்கான பொருள்கள் அத்தனையும் விலையில்லா வகையில் விநியோகிப்பது, கல்வியில் பின்தங்கிய பகுதிகளிலிருந்து அதிக மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வர காரணிகளாக இருக்கின்றன. இவைதவிர, நாட்டிலேயே முதன்முறையாகப் பாலின உறுதித்தன்மையற்ற மாணவர்களையும் உள்ளடக்கிய கல்வி முறை குறித்து, யுனெஸ்கோவுடன் சேர்ந்து ஆய்வு முடிவுகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது, மாபெரும் சமூக மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

UP Education Minister Dinesh Sharma
UP Education Minister Dinesh Sharma

36.4 சதவிகிதத்துடன் தரவரிசைப் பட்டியலில் இறுதியில் இருக்கும் உத்தரப்பிரதேசத்தில், அரசு பல நல்ல கல்வித் திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. 1,13,000 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 84 லட்சம் மாணவர்களுக்காக தரநிலைப்படுத்தப்பட்ட கற்றல் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகளின் மற்றொரு மாதிரியாகவே இந்தத் திட்டம் பார்க்கப்பட்டாலும், அந்த மாநிலத்தை அச்சுறுத்தும் பல்வேறு சமூக சாதியப் படிநிலைச் சிக்கல்கள், பெண்பிள்ளைகள் மீதான வன்முறைகள், அவர்களுக்கு மறுக்கப்படும் கல்வி எனப் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதும் குறைந்திருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

காலைச் சிற்றுண்டியில், வரட்டி போன்ற காய்ந்த ரொட்டியைத் தொட்டு உண்ண உப்பு கொடுக்கப்பட்ட சம்பவம், சமீபத்தில் சர்ச்சைக்குள்ளானது நினைவிருக்கலாம். இந்தச் சம்பவத்தை அடுத்து, அந்த மாநிலத்தின் பல்வேறு தொடக்கப் பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அதிகார மட்டத்திலிருந்து அங்கன்வாடி வரை நடைபெறும் ஊழல்களும் சமூக வன்முறைகளுமே, உத்தரப்பிரதேசத்தின் இந்தப் பின்னடைவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

கல்வித்தரத்தில் கேரளா முதலிடம்... தமிழகத்திற்கு எந்த  இடம்?- நிதி ஆயோக் அறிக்கை