Published:Updated:

`அப்போ 2 மாணவர்கள்; இப்போ 66 மாணவர்கள்!' - அரசுப்பள்ளி சாதித்தது எப்படி?

நடுப்பாளையம் பள்ளி கல்விச்சீர்
நடுப்பாளையம் பள்ளி கல்விச்சீர்

`ஊர் கூடித் தேர் இழுத்தல் ’ என்பதை நிரூபிக்கும் வகையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் போன்ற பலருடைய முயற்சியால் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது நடுப்பாளையம் தொடக்கப்பள்ளி.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ளது நடுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. 1990-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொடக்கப்பள்ளியின் ஆரம்ப காலகட்டத்தில் 50 முதல் 60 மாணவர்கள் வரை படித்து வந்துள்ளனர். காலப்போக்கில் தனியார் பள்ளிகளின் வருகை, ஆங்கில வழிக் கல்வி மோகம் போன்றவற்றால் நடுப்பாளையம் தொடக்கப்பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய ஆரம்பித்திருக்கிறது. ஒருகட்டத்தில் வெறும் 2 மாணவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளி என்கின்ற நிலை உருவாக, பள்ளிக்கூடத்தை மூடும் சூழல் உண்டாகியிருக்கிறது.

`பல குழந்தைகளின் அறிவைத் திறந்த பள்ளிக்கு மூடுவிழா நடத்துவதா...’ என ஆசிரியர்கள், ஊர்மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சிலர் முன்னின்று கரம்கோக்க, மூடவிருந்த நடுப்பாளையம் தொடக்கப்பள்ளியில் இன்று 66 மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர்.

நடுப்பாளையம் தொடக்கப்பள்ளி
நடுப்பாளையம் தொடக்கப்பள்ளி
அட்மிஷன் போட்டால் ₹1,000 ஊக்கத்தொகை, வகுப்பறையில் உண்டியல்; அசத்தும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்!

``எப்படி இது சாத்தியமானது?'' என்ற கேள்வியுடன் பள்ளியின் தலைமையாசிரியர் இரா.சக்திவேலிடம் பேசத் தொடங்கினோம்.

``நடுப்பாளையம் தொடக்கப்பள்ளி ஆரம்பிச்ச சில வருஷத்துலயே பக்கத்து ஊர்கள்ல நிறைய தனியார் பள்ளிகள் வர ஆரம்பிச்சது. மாரனூரில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றும் வந்தது. `என் குழந்தைங்களை இங்கிலீஷ் மீடியத்துல சேர்த்தாதான் கௌரவம்’ என்ற நினைப்புல ஒரு சில பெற்றோரும், `மாரனூர் ஸ்கூல்ல ஒண்ணாவது சேர்த்து விட்டுட்டா அங்கயே 8-வது வரைக்கும் படிக்கலாம்’ அப்படீங்கிற நினைப்பு இருந்ததாலும், பெற்றோர் பலர் நடுப்பாளையம் ஸ்கூல்ல அவங்க குழந்தைகளைச் சேர்க்கலை. அதனால மாணவர்களோட எண்ணிக்கை படிப்படியா குறைஞ்சு போய் 2008-ல வெறும் 2 மாணவர்கள் மட்டுமே படிக்கிற பள்ளியா ஆகிடுச்சு. பள்ளியை மூடக்கூடிய சூழல். அந்தச் சமயத்துலதான் நான் இந்த ஸ்கூலுக்கு வந்தேன். பள்ளி மேலாண்மைக் குழுவோட சேர்ந்து வீடு வீடாகப் போய் பெற்றோர்கள்கிட்ட, `உங்க குழந்தைங்களை எங்க ஸ்கூல்ல கொண்டு வந்து சேருங்க’னு கடுமையா பிரசாரம் செஞ்சோம்.

இங்கிலீஷ் மீடியத்தை பெற்றோர்கள் விரும்பியதால, அரசிடம் விஷயத்தைச் சொல்லி பள்ளிக்கு ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டு வந்தோம். தனியார் ஸ்கூல் மாதிரி உங்க குழந்தைகளுக்குத் தேவையான எல்லாத்தையும் நாங்க செஞ்சி கொடுக்குறோம்னு சொல்லி கூட்டிட்டு வந்தோம். அந்த வகையில் 2 மாணவர்கள் மட்டுமே இருந்த ஸ்கூல்ல 2018-ல் 29 பேர் படிக்க வந்தாங்க. 2 மாணவர்களுக்கு நான் ஒரு ஆசிரியர் மட்டும்தான் இருந்தேன். ஆசிரியர்கள் போதாதுன்னு என்னோட சம்பளத்துல இருந்து 2 தற்காலிக ஆசிரியர்களை பள்ளிக்கு நியமனம் செஞ்சேன்.

டைரி, டை, ஐடி கார்டு, ஸ்டேஷனரீஸ் எனத் தனியார் பள்ளிக்கூடத்தில் என்னென்ன கொடுக்குறாங்களோ அதையெல்லாம் எங்க பள்ளி மாணவர்களுக்கும் கொடுத்தோம். ரொம்ப பழசா இருந்த ஸ்கூல் கட்டடம் முழுக்க பெயின்ட் அடிச்சோம். 2018-ல முதல் முறையாக ஸ்கூல்ல ஆண்டு விழா நடத்துனோம். அதுல பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடைய பெற்றோர்கள் எல்லாரையும் மேடையேத்தி, பொன்னாடை போற்றி மரியாதை செஞ்சோம். அதேபோல ஆண்டு விழா மேடையில் எல்லா மாணவர்களுக்கும் பரிசு கொடுத்து உற்சாகப்படுத்துனோம்.

நடுப்பாளையம் தொடக்கப்பள்ளி
நடுப்பாளையம் தொடக்கப்பள்ளி

ஒருகட்டத்துல ஊர்மக்களே பள்ளிக்குத் தேவையானவற்றை `பள்ளிச் சீர்' மாதிரி கொண்டு வந்து கொடுத்தாங்க. அதன் பிறகு, 2019-ல 43 மாணவர்கள், 2020-ல 53 மாணவர்கள் எனப் பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இன்னைக்கு அந்த எண்ணிக்கை 66 ஆக உயர்ந்திருக்கு. ஒவ்வொரு வருஷமும் என்னோட சொந்தப் பணம் பல ஆயிரங்களை இந்தப் பள்ளிக்காகச் செலவழிச்சிட்டிருக்கேன். போன வருஷம் லாக்டெளன் சமயத்துல ஸ்கூல்ல படிச்ச 43 குழந்தைகளோட குடும்பத்துக்கும் ரூ.20,000 செலவுல மளிகைப் பொருள் கொடுத்தேன். கொரோனா சூழல்ல மாணவர்கள் இருக்குமிடத்துக்கே போய் பாடம் நடத்துனேன்.

ஊர்மக்கள் அவங்க குழந்தைகளை எங்க ஸ்கூலை நம்பி சேர்க்கலைன்னா, என்னைக்கோ இந்த நடுப்பாளையம் தொடக்கப்பள்ளியை மூடியிருப்பாங்க. பொதுமக்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர் மற்றும் பள்ளிக் கட்டமைப்புக்காக உதவிய ஒருசில நல்ல உள்ளங்களால்தான் இன்னைக்கு நடுப்பாளையம் ஸ்கூல் திறந்திருக்கு” என்றார் நெகிழ்ச்சியுடன்.

பழங்குடியின மாணவர்களின் கல்விக்காக சிறப்புப் பள்ளிகளை நடத்திவரும் `சுடர்' அமைப்பின் இயக்குநரான எஸ்.சி.நட்ராஜிடம் பேசினோம். ``ஊர் கூடி தேர் இழுத்தல் என்ற கூற்றினை நிரூபிக்கும் வகையில் இன்றைக்கு பலருடைய முயற்சிகளாலும், பங்களிப்பாலும் நடுப்பாளையம் பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது. 2 மாணவர்கள் மட்டுமே படித்த பள்ளியில் இன்றைக்கு 66 மாணவர்கள் சேர்ந்திருப்பது பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

பள்ளிக்கு சீர் கொண்டு வரும் ஊர்மக்கள்
பள்ளிக்கு சீர் கொண்டு வரும் ஊர்மக்கள்
`அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்தால், ₹1000 பரிசு!' - அசத்தும் தலைமை ஆசிரியர்

ஒற்றை இலக்க மாணவர்கள் மட்டுமே பயிலும் பள்ளிகளை மூடுவதைப் பற்றி நினைக்காமல், அதில் மாணவர் சேர்க்கையை எப்படி அதிகப்படுத்துவதென அரசு ஆக்கபூர்வ மாகச் சிந்திக்க வேண்டும். குறிப்பாக, இப்படியான பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். முதற்கட்டமாக நடுப்பாளையம் தொடக்கப்பள்ளியை நோக்கி நம்பிக்கையுடன் வந்துள்ள, வரவிருக்கின்ற மாணவர்களைத் தக்க வைப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும், தேவையான ஆசிரியர்களையும் நியமித்து பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும். மேலும், மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் பள்ளிக்குக் கூடுதலாக ஒரு வகுப்பறைக் கட்டடம் தேவைப்படுகிறது. அரசு செய்து கொடுக்குமென நம்புகிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு