கட்டுரைகள்
பேட்டிகள்
Published:Updated:

வீடே பள்ளி... வீடியோவில் வகுப்பறை! - எப்படியிருக்கும் இந்தக் கல்வியாண்டு?

வீடே பள்ளி... வீடியோவில் வகுப்பறை!
பிரீமியம் ஸ்டோரி
News
வீடே பள்ளி... வீடியோவில் வகுப்பறை!

ஆன்லைன் வகுப்புகளால் அதிகமான பாதிப்புகளே ஏற்படும்

ஊரடங்கின் நான்காம் கட்டத்தை எட்டியிருக்கிறோம். தற்போது அனைத்துக் குடும்பங்களின் கவனமும் தம் குழந்தைகளின் கல்விமீது குவிந்துள்ளது.

ஜூன் மாதம் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலம். தமிழகத்தில் ஜூன் 15-ம் தேதி, 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. நோய்த்தொற்றின் தீவிரம் முழுமையாகக் குறையாத சூழலில், தேர்வுகளை நடத்தக்கூடாதெனக் கல்வியாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் வரும் கல்வியாண்டு குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழு ஒன்றும் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. கொரோனாத் தொற்றின் தீவிரம் குறைய வேண்டும். நோய்த் தொற்று குறைந்தாலும் பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ‘ இரண்டு மாதங்களாக வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்கிற குழந்தைகளை உளவியல் ரீதியில் தயார்ப்படுத்த வேண்டும். எளிய மக்கள் பலரின் குழந்தைகளுக்கு வருமானமற்ற குடும்பச் சூழல் காரணமாகப் போதிய ஊட்டச்சத்து கிடைத்திருக்காது’ என்கின்றனர் மருத்துவர்கள். பள்ளிகள் தொடங்கினாலும் பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை கல்வியாளர்களால் முன்வைக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் ‘ஆன்லைன்’ வகுப்புகுறித்துத் திட்டமிடத் தொடங்கியிருக்கின்றன. பல தனியார் பள்ளிகள் இப்போதே கட்டணம்குறித்து பெற்றோர்களுக்கு அறிவுறுத்தத் தொடங்கியிருக்கின்றன. பணமில்லாத சூழலில் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை நிறைய பெற்றோர்கள் சேர்க்க வாய்ப்புள்ளது.

வீடே பள்ளி... வீடியோவில் வகுப்பறை! - எப்படியிருக்கும் இந்தக் கல்வியாண்டு?

இப்படிப் பல சவால்கள், கேள்விகளுடன் தொடங்கவுள்ளது வரும் கல்வியாண்டு. அரசு எப்படி இதைத் திட்டமிட வேண்டும்? என்ன அவசியமான மாற்றங்கள் வரும் கல்வியாண்டில் தேவைப்படும்?

`வகுப்பறைக் கல்விக்கு மாற்று எதுவும் கிடையாது’  - ப்ரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்:

“வரும் கல்வியாண்டைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரையில் விரைவாகப் பள்ளிகளைத் திறக்கக் கோரிக்கை வைத்துள்ளன. இந்தக் காலம்தான் தனியார் பள்ளிகளால் கல்விக் கட்டணங்களை வசூல் செய்ய முடியும். எனவே பள்ளிகளை உடனடி யாகத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று ஒரு வாதம். இல்லையென்றால் ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி வேண்டும் என்பது மற்றொரு வாதம். இதற்கிடையில் அரசாங்கம் ஒரு கமிட்டி உருவாக்கியுள்ளது. பள்ளிகள் திறக்கப்படுமா அல்லது ஆன்லைன் வகுப்புகளுக்கு ஒப்புதல் தரப்படுமா என்பதுபோன்ற முடிவுகளை‌ இந்தக் கமிட்டி அறிவிக்கும். பள்ளிக்கல்வித்துறை உருவாக்கியுள்ள கமிட்டியில், கல்வியாளர்கள் என்றழைக்கப்படும் பள்ளி, கல்லூரி முதல்வர்கள், துணைவேந்தர்கள், பாடத்திட்டத்தை உருவாக்கியவர்கள், வகுப்புகளில் பாட மெடுத்தவர்கள் யாரும் இல்லை. வெறும் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் மட்டுமே இந்தக் கமிட்டியில் உள்ளனர். தொடக்கக் கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர், மெட்ரிக் கல்வி இயக்குநர், ஐ.ஐ.டியில் பணிபுரிபவர், தமிழ்நாடு அரசின் E- GOV அமைப்பிலிருந்த சில பேர் இந்தக் கமிட்டியில் உள்ளனர். இதையெல்லாம் பார்க்கையில் ஆன்லைன் வகுப்புகளை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கமிட்டிபோலத் தோன்றுகிறது. இந்தக் குழு நிர்வாக ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக முடிவுகளை எடுக்குமே தவிர மாணவர்களின் கல்வி ரீதியாக முடிவுகளை எடுக்காது என்பது தெளிவாகிறது.

வீடே பள்ளி... வீடியோவில் வகுப்பறை! - எப்படியிருக்கும் இந்தக் கல்வியாண்டு?

ஒருவேளை ஆன்லைன் வகுப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் குழந்தைகளுக்கு அதுமிகப் பெரிய சிக்கல். இரண்டு மணிநேரம் மொபைல்/லேப்டாப் திரை முன்பு குழந்தைகளை உட்கார வைக்க முடியுமா? அப்படி உட்காரவைக்கும் பட்சத்தில் குழந்தைகள் தொடர்ந்து மொபைல் திரையைப் பார்ப்பதால் கண்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. பள்ளிகளில் அளிக்கப்படும் சத்துணவு, முட்டை ஆகியவற்றை ஆன்லைன் வகுப்புகள்மூலம் வழங்க முடியாது. குழந்தைகளின் சத்துக்குறைபாட்டை எவ்வாறு கையாள்வது என உணவு நிபுணர்களிடமும், லாக்டௌனால் வீட்டிலேயே உள்ள குழந்தைகளின் மனநிலை, குடும்பப் பிரச்னைகளால் உளவியல் பாதிப்படையும் குழந்தைகளை எவ்வாறு சரிசெய்வதென மனநல மருத்துவரிடமும் பரிந்துரைகளைக் கேட்டுச் செயல்படுத்த வேண்டும். மேலும், குழந்தைகள் நல மருத்துவரின் பங்களிப்பும் அவசியமானது.

இந்நிலையில் கொரோனாவைக் காரணம் காட்டி ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறினாலோ, பள்ளிகளை இப்போதே திறக்க முடிவு எடுத்தாலோ அதை மனிதத் தன்மையற்ற செயலாகக் கருதுகிறேன். சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க ஆன்லைன் வகுப்புகள் தேவைப்படுகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் லாபம் அதிகரிக்கும். கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறையும். பள்ளி வளாகம், பேருந்து‌ இயக்கம் எதுவும் தேவையில்லை. வீட்டிலிருந்தபடியே குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கப் பணம் அதிகமாக வசூலிக்கப்படும். வகுப்பறையில் உள்ள குழந்தைகள், ஆசிரியர் சொல்வதை மறுக்கும். எதிர்க்கேள்விகள் கேட்கும். அதிகமாய்ப் பேசும். அதுதான் குழந்தைகளின் சுபாவம். ஆனால் இப்படியான‌ செயல்களை ஆன்லைன் வகுப்புகளில் செய்ய முடியாது. குழந்தைகளின் க்ரிட்டிகல் திங்கிங் (Critical thinking) ஆன்லைன் வகுப்புகளில் இல்லாமல் போக வாய்ப்புள்ளது.

வீடே பள்ளி... வீடியோவில் வகுப்பறை! - எப்படியிருக்கும் இந்தக் கல்வியாண்டு?

லாக்டௌனைக் காரணம் காட்டி நடைமுறையில் உள்ள கல்விமுறையை ஒழிக்கச் சதி நடந்துவருகிறது.‌ இதை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது. பள்ளிகளைச் செப்டம்பரில் திறக்கலாம். ஏப்ரல் வரை பாடம் நடத்தி முழு ஆண்டுத்தேர்வை மே மாதம் நடத்தலாம். மே மாதம் வெயில் தாக்கம் அதிகமிருக்கும். அதற்குத் தகுந்தாற்போலக் குடிநீர், கழிவறை வசதிகள், தடையில்லா மின்சாரம் ஆகியவற்றைப் பள்ளிகளுக்கு வழங்கலாம். இரண்டு வாரங்களுக்குள் தேர்வுகளை முடித்து விடலாம்.

வீடே பள்ளி... வீடியோவில் வகுப்பறை! - எப்படியிருக்கும் இந்தக் கல்வியாண்டு?

மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான பாடத்தில் 10%, 8- 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 20%, முதல் வகுப்பிலிருந்து 8-ம் வகுப்புவரை 30% பாடங்களைக் குறைக்கலாம். பொருளாதாரத் தேக்கம் நிலவும் சூழலில் எப்படி தனியார் பள்ளிகளுக்குக் கட்டணம் செலுத்திப் படிக்க வைக்க முடியும்? அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, உள்கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளைச் செய்ய வேண்டும். வழக்கமான வகுப்பறைக் கல்விக்கு மாற்றாக எதுவும் ஈடாக முடியாது. இரண்டு, மூன்று மாதங்கள் தள்ளிப்போனாலும் சரி, ஒட்டுமொத்தப் பள்ளிக் கல்விமுறையைச் சிதைத்துவிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.”

`மாணவர்களின் நலன் அவசியம்’ - பிரியசகி, ஆசிரியை மற்றும் ‘நிறைவகம்’ குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் தலைவர்.

“இந்த அசாதாரண சூழலில் குழந்தைகள் பாடங்களோடு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இருக்கிறார்கள். பள்ளி திறந்ததும் அவர்களுக்குப் பாடங்கள்மீதான அழுத்தம் ஏற்பட வாய்ப் புள்ளது. வரும் கல்வியாண்டில் பாடத்திட்டத்தைக் கண்டிப்பாக அரசு குறைக்க வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே மன அழுத்தத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுக்கும் நிலை ஏற்படும். அடுத்ததாக, தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களை இரண்டு வகுப்பறைகளில் பிரித்து உட்கார வைக்கலாம். அல்லது நடுநிலை வகுப்புகள் காலை, உயர்நிலை வகுப்புகள் மாலையெனப் பிரித்து வகுப்புகளை நடத்தலாம்.

வீடே பள்ளி... வீடியோவில் வகுப்பறை! - எப்படியிருக்கும் இந்தக் கல்வியாண்டு?

ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதால் மாணவர்களின் உடல்நலம் கண்டிப்பாக பாதிப்படையும். கூடவே, மனநல பாதிப்புகளும் ஏற்படும். இரண்டாவது, மாணவர்கள் இணையப் பயன்பாட்டைத் தவறாகப் பயன்படுத்தினாலும் அதைக் கவனிக்க முடியாத சூழல் ஏற்படும். அதற்கான வாய்ப்புகளை மாணவர்களுக்கு நாம் உருவாக்கிடக்கூடாது. எனவே, கொரோனா பாதிப்புகள் முடிந்தபிறகு பாடங்களைக் குறைத்து வகுப்புகளைத் தொடர்வது நல்லது. ஆன்லைன் வகுப்புகளால் அதிகமான பாதிப்புகளே ஏற்படும்.

பத்தாம் வகுப்புத் தேர்வுகளையும் ரத்து செய்வதுதான் நல்லது. குறிப்பாக, சென்னையில் பாதிப்பு தொடர்ந்து அதிகமாகி வருகிறது. எனவே, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை. அடுத்த கல்வியாண்டிற்கான தேவையைச் சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவுசெய்து கொள்ளலாம்.”

6 ஆம் வகுப்புக்கு மேல்தான் ஆன்லைன் கல்வி! - ஜி.ஆர். ஸ்ரீசதர், தமிழ்நாடு தனியார் மெட்ரிகுலேசன் மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்

“1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கூடாது என்பதுதான் எங்களுடைய முடிவும். வேறு வழியில்லாத பட்சத்தில்தான் 6 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி அளிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் இந்த ஆன்லைன் வகுப்புக்கு தேவை இருப்பதாக நம்பப்படுவதால் அதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்பதே எங்கள் கருத்து.

வீடே பள்ளி... வீடியோவில் வகுப்பறை! - எப்படியிருக்கும் இந்தக் கல்வியாண்டு?

அரசு தனியார் பள்ளிகளுக்கான வாகன வரி, கட்டட வரி போன்றவற்றைச் செலுத்த ஜூன் மாத இறுதிவரை கெடு கொடுத்திருக்கிறது. அதற்காகத்தான் நாங்கள் கல்விக் கட்டணம் வசூலிக்கிறோம். நாங்கள் வசூலிக்கக்கேட்பது கடந்த கல்வியாண்டில் செலுத்தாத மீதிக் கட்டணத்தைத்தான். வரும் கல்வியாண்டுக்கான கட்டணத்தைப் பள்ளி தொடங்கிய பிறகுதான் வசூலிப்போம். எங்கள் பள்ளி ஊழியர்களுக்கான ஊதியம் வழங்க, அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி, வங்கிக் கடன் போன்றவற்றைச் செலுத்த எங்களுக்கு நிதி வேண்டுமல்லவா. அரசிடம் எங்களுக்கு ஒரே கோரிக்கைதான்: வரும் கல்வியாண்டில் எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான புத்தகங்களை அரசு இலவசமாக வழங்க வேண்டும். மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே மானியமாக வழங்க முன்வர வேண்டும். மேலும், பாடத்திட்டத்தைக் குறைத்து சரியான, குழப்பமற்ற புளூப்ரின்ட் வழங்கவேண்டும். அது மாணவர்களின் கல்விக்கு உதவி புரியும்.”

பள்ளிக் கல்வித்துறை அதிகாரியிடம் பேசினோம். “ இது குறித்து அரசின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கமிட்டியின் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். அதன் அடிப்படையிலேயே இந்தக் கல்வியாண்டின் நடைமுறைகள் இருக்கும்” என்றார்.

வீடே பள்ளி... வீடியோவில் வகுப்பறை! - எப்படியிருக்கும் இந்தக் கல்வியாண்டு?

பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துகளைக் கவனத்தில்கொண்டு, குழந்தைகளின் நலனும் திறனும் மேம்படும்வகையிலேயே முடிவெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.