Published:Updated:

`பள்ளி மேலாண்மைக்குழுவில் பெற்றோர்கள்; பெண்களுக்கு முன்னுரிமை!' - இக்குழு எவ்வாறு செயல்படும்?

Government school

அரசுப் பள்ளிகளை நடத்துவதில் அரசுக்கு மிகப் பெரிய முக்கியப் பங்கு இருந்தாலும்கூட, உள்ளூர் சமூகம் அந்தப் பள்ளியின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தும்போது மேலும் சிறப்பாக மேம்படுத்த முடியும். அரசுப் பள்ளிகள் நம் பள்ளிகள். அதன் வளர்ச்சி நமது சமுதாயத்தின் வளர்ச்சியாக இருக்கும்.

`பள்ளி மேலாண்மைக்குழுவில் பெற்றோர்கள்; பெண்களுக்கு முன்னுரிமை!' - இக்குழு எவ்வாறு செயல்படும்?

அரசுப் பள்ளிகளை நடத்துவதில் அரசுக்கு மிகப் பெரிய முக்கியப் பங்கு இருந்தாலும்கூட, உள்ளூர் சமூகம் அந்தப் பள்ளியின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தும்போது மேலும் சிறப்பாக மேம்படுத்த முடியும். அரசுப் பள்ளிகள் நம் பள்ளிகள். அதன் வளர்ச்சி நமது சமுதாயத்தின் வளர்ச்சியாக இருக்கும்.

Published:Updated:
Government school

தமிழக அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பெற்றோரது பங்களிப்புடன் அமைக்கப்படவிருக்கும் `பள்ளி மேலாண்மைக்குழு'வில் தலைவர் மற்றும் உறுப்பினர் பொறுப்புகளுக்கு பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஒரு குழந்தைக்குத் தாயே முதன்மையானவள் என்ற அடிப்படையில் ஜனநாயக முறைப்படி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கப்படும் இக்குழுவில் அங்கம் வகிக்க பெண்கள் முன் வர வேண்டும்.

பள்ளி மேலாண்மைக்குழு குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ``அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக அமைக்கப்படும் பள்ளி மேலாண்மைக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும் அதில் பெற்றோர் மற்றும் பொது மக்களின் பங்கேற்பு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி மார்ச் 20-ம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. தமிழகம் முழுவதுமுள்ள 37,391 அரசுப் பள்ளிகளில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மொத்தம் 52 லட்சம் பெற்றோர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இது ஒரு மைல் கல்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழக அரசின் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டு, புதிய பள்ளி மேலாண்மைக் குழு செயல்படத் தொடங்கும். இக்குழுவில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பள்ளிகளில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்பது பள்ளிகளின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள ஓர் அமைப்பு. பள்ளி மேலாண்மைக் குழு என்பது 2009-ம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஒட்டுமொத்த பள்ளியின் வளர்ச்சிக்காக இயங்கும் குழுவாகும். பள்ளியில் என்ன நடக்கிறது, குழந்தைகள் எப்படிப் படிக்கிறார்கள் என்பது பெற்றோருக்குத் தெரிய வேண்டும். குழந்தைகளின் குடும்பச் சூழல் என்ன, அவர்களின் உடல், மன, அறிவு வளர்ச்சிக்கு என்ன தேவைப்படுகிறது என்பது ஆசிரியர்களுக்குத் தெரிய வேண்டும். இதற்காக ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தையின் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டியது அவசியம். இதை மனதில் கொண்டுதான் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009 , பள்ளி மேலாண்மைக் குழுவை அமைக்க வேண்டியதைச் சட்டபூர்வமாக்கியுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தாயின் அரவணைப்பில் குழந்தைகள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வரலாற்றுப் பார்வையின் அடிப்படையில்தான், பெற்றோர்களின் பங்களிப்பில் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்படுகிறது. இதுவரையிலும், பள்ளிகளில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் 20 உறுப்பினர்கள் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழுவும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் 5 உறுப்பினர்கள் கொண்ட பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுவும் என இரண்டு குழுக்கள் செயல்பட்டு வந்தன. தற்போது ஒவ்வொரு பள்ளியிலும் 20 உறுப்பினர்கள் கொண்ட ஒரே பள்ளி மேலாண்மைக் குழு செயல்படுவதற்கான ஆணையை தமிழக அரசு ஏற்கெனவே பிறப்பித்துள்ளது. அதன்படி, பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் போன்றோர் பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம்பெறுவார்கள்.

School
School
Venkatesan.C

பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையின் பெற்றோர்தான் பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவராக இருக்க வேண்டும். அவர்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்கிற விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் பெற்றோர் துணைத் தலைவராக இருக்க வேண்டும். இப்படியாக இக்குழுவின் அனைத்து படிநிலைகளிலும் உறுப்பினர்களாகவதற்குப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மைக்குழுவின் செயல்பாடுகள் சார்ந்தும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``கட்டாயக் கல்வி என்கிற அடிப்படையில் 14 வயதிற்குட்பட்ட பள்ளிகளில் சேர்க்கப்படாத அல்லது படிப்பை இடையிலேயே விட்டுவிட்ட குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் வயதிற்கு ஏற்ற வகுப்புகளில் சேர்த்து அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதிசெய்வது பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியப் பணியாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனைத்து வகை வன்முறைகளிலிருந்தும் குறிப்பாக பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் இக்குழு செயல்படும். அனைத்துக் குழந்தைகளும் தங்களின் உரிமைகளைப் பெறவும், அவர்களுக்குப் பாதுகாப்பான குழந்தை நேயச்சூழலை பள்ளிகளிலும் அவர்கள் வாழும் சமூகத்திலும் உருவாக்கவும் தேவையான நடவடிக்கைகளை பள்ளி மேலாண்மைக் குழு முன்னெடுக்கும். அரசுப் பள்ளிகளை நடத்துவதில் அரசுக்கு மிகப் பெரிய முக்கியப் பங்கு இருந்தாலும்கூட, உள்ளூர் சமூகம் அந்தப் பள்ளியின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தும்போது அரசுப் பள்ளிகளை மேலும் சிறப்பாக மேம்படுத்த முடியும். அரசுப் பள்ளிகள் நம் பள்ளிகள். அவற்றின் வளர்ச்சி நமது சமுதாயத்தின் வளர்ச்சியாக இருக்கும்.

பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை பள்ளி மேலாண்மைக் குழு செயல்படுத்துவதற்கு உதவும் வகையில் புதிய செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்விக்காகத் திட்டுமிடுதல், செயல்படுத்துதல், மதிப்பீடு செய்தல் போன்றவற்றுக்கு இச்செயலி மிகவும் உதவியாக இருக்கும். பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கு உணர்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கலைப் பயணங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

School Children
School Children
Pandi.U

தமிழகம் முழுவதும் தலா நான்கு பேர் கொண்ட 600 கலைக்குழுக்கள் கிராமங்களில் 15 நாள்கள் பயணம் செய்து பரப்புரைப் பணியில் ஈடுபடுவார்கள். அந்தந்தப் பகுதிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவத்தை விளக்கும் சுவரொட்டிகளை ஒட்டுதல், பாடல்களுடன் கூடிய கலை நிகழ்வுகளை நடத்துதல், குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுதல், பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் அதில் பங்கு பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தக் கலைக்குழுவினர் மக்களிடம் விளக்கிக் கூறுவார்கள்" என்று அந்த அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார்.

வளமான சமூகத்தை உருவாக்க வேண்டுமெனில் அனைவருக்கும் கல்வியறிவு இன்றியமையாதது. பொதுமக்களுடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை முன்னெடுக்கும் இந்த பள்ளி மேலாண்மைக்குழுவுக்கு நமது ஆதரவினைத் தெரிவிப்பது அவசியமாகும். நம் குழந்தைகளுக்கு நல்லதொரு கல்விச்சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனில் பெண்கள் அனைவரும் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினராக முன் வர வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism