Published:Updated:

`தற்கொலைகளைத் தடுக்க புதிய கருவி!'- சென்னை ஐ.ஐ.டி நடவடிக்கைக்கு என்ன சொல்கிறார்கள் மாணவர்கள்?

சென்னை ஐ.ஐ.டி-யில், முதுகலை மானுடம் மற்றும் சமூக அறிவியல் முதலாம் ஆண்டு மாணவி விடுதி அறையிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டதை அடுத்து இந்த நடவடிக்கையை ஐ.ஐ.டி நிர்வாகம் எடுத்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.
சென்னை ஐ.ஐ.டி.

சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் மாணவர்கள், மின்விசிறியில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க மின்விசிறியில் புதிய வகைக் கருவி ஒன்றைப் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி "மின்விசிறிக் குழாய் பாதுகாப்புக் கருவி (Fan Bush Protection Device)" என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் கருவிகள் மின்விசிறியில் பொருத்தப்படும் சூழலில் 40 கிலோவுக்கும் அதிகமான எடைகொண்ட பொருள்கள் அதில் மாட்டப்பட்டால் வலு தாங்காமல் அந்தப் பொருளைக் கீழே இறக்கிவிடும்.

பாத்திமாவுக்காக ஐ.ஐ.டி.  மாணவர்கள் உண்ணாவிரதம்
பாத்திமாவுக்காக ஐ.ஐ.டி. மாணவர்கள் உண்ணாவிரதம்

அண்மையில் சென்னை ஐ.ஐ.டி-யின் முதுகலை மானுடம் மற்றும் சமூக அறிவியல் முதலாம் ஆண்டு மாணவி ஃபாத்திமா லத்தீப், விடுதி அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டதை அடுத்து இந்த நடவடிக்கையை ஐ.ஐ.டி நிர்வாகம் எடுத்துள்ளது. வரும் குளிர்கால விடுமுறையில் இந்தக் கருவிகள் பொருத்தும் பணி நடைபெறும் என்று இதுகுறித்து நிர்வாகம் மாணவர்களுக்கு இமெயில் வழியாகத் தகவல் பகிர்ந்துள்ளது.

இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி-யின் மாணவர்கள் விவகாரத்துறைத் தலைவரையும் ஊடகச் செய்தித் தொடர்புத் துறையையும் தொடர்புகொண்டு பேசினோம். இருவருமே, `இதுதொடர்பாகக் கருத்துக்கூற விருப்பமில்லை’ என்று முடித்துக் கொண்டனர்.

பாத்திமா
பாத்திமா

ஆனால், மாணவர்கள் தரப்பு இந்த நடவடிக்கைத் தங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்கள். "மின்விசிறியில் கருவியைப் பொருத்தினால் தற்கொலைத் தடுக்கப்பட்டுவிடுமா? மின்விசிறியில் தூக்குமாட்டிக்கொள்ள முடியாது. அவ்வளவுதானே தவிர மாணவர்களின் தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்க என்ன செய்யப்போகிறார்கள்" என்று கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும், "இந்தக் கருவிகள் ஒன்றும் முதன்முறையாகப் பொருத்தப்படவில்லை. ஏற்கெனவே மாணவர்களின் விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகளில் இந்தக் கருவி உள்ளது. ஃபாத்திமா அறை இருக்கும் பகுதிக்கு மட்டும் அது பொருத்தப்பட்டிருக்கவில்லை. அதைத்தான் தற்போது பொருத்த இருக்கிறார்கள். மற்றபடி நிர்வாகம் இதுவரையில் தற்கொலைக்கு எதிரான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. எங்கள் விடுதி மின்விசிறியில் தற்கொலை செய்துகொள்ளாதே வேறு எங்கு வேண்டுமானாலும் உயிரைப் பறித்துக்கொள்ளுங்கள் எங்களுக்கு அக்கறையில்லை என்கிற நிர்வாகத்தின் மனநிலையைத்தான் இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது. ஆனால், மாணவர்கள் அமைப்பு இதை அப்படியே விட்டுவிடுவதாக இல்லை. நிச்சயம் இதற்கு முழுத்தீர்வு காண்போம்" என்று கூறுகின்றனர்.