ஒடிசா மாநிலம், பெல்லகுந்தாவில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவருபவர் சாந்திலதா சாஹு. இவர் தனக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறி, மாவட்டக் கல்வி அலுவலக வளாகத்தில் கடந்த நான்கு மாதங்களாகப் போராட்டம் நடத்திவந்திருக்கிறார். இந்த நிலையில், சாந்திலதா சாஹு தன் கணவருடன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். மதிய உணவு வேளையின்போது வெளியே வந்த பெண் டி.இ.ஓ அதிகாரியிடம் சாஹு சம்பளம் கேட்டிருக்கிறார். அப்போது இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், விரக்தியடைந்த சாந்திலதா சாஹுவின் கணவர் திடீரென டி.இ.ஓ-வைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து ஆசிரியர் சாஹுவின் கணவர் தன்னைத் தாக்கியதாக, அவர்கள் இருவர் மீதும் டி.இ.ஓ போலீஸில் புகாரளித்தார். அதனடிப்படையில் சாஹு, அவர் கணவர் இருவரையும் போலீஸார் வேனில் ஏற்றிச்சென்றனர். அப்போது பேசிய சாஹு, ``என்னுடைய சம்பளம் தன்னிச்சையாக நிறுத்தப்பட்டது. அது தொடர்பாக எந்த நோட்டீஸும் எனக்கு கொடுக்கப்படவில்லை" என்று கூறினார். இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரி ஒருவர், ``சாஹுவைப் பணியில் சேருமாறு கேட்டுக் கொண்ட பிறகும் அவர் சேரவில்லை" எனத் தெரிவித்திருக்கிறர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், ``பெண் தலைமை ஆசிரியைக்கு நான்கு ஆண்டுகளாக சம்பளம் வழங்காததால்தான், ஆசிரியையின் கணவர் மாவட்டக் கல்வி அதிகாரியைத் தாக்கியிருக்கிறார்."
பின்னர் இது குறித்துப் பேசிய பெர்ஹாம்பூர் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி பிஷ்ணு பிரசாத் பதி, இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருவதாகக் கூறினார்.