Published:Updated:

அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை! தயார் நிலையில் இருக்கின்றனவா அரசுப் பள்ளிகள்?

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தநிலையில், அதிக மாணவர்கள் எண்ணிக்கைக்கு அரசுப் பள்ளிகள் தயாராக இருக்கின்றனவா என்பதைப் பல்வேறு தரப்பினரிடம் விரிவாகக் கேட்டறிந்தோம்...

முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த சில வருடங்களாக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பேரிடர் காரணமாகக் கடந்த ஆண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் இணையவழியில்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தக் காலகட்டத்திலும், சில தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் முழுமையான கட்டணம் செலுத்த வற்புறுத்தப்பட்டது. பொதுமுடக்கம் காரணமாக வேலை இல்லாமல், வருமானம் இழந்த பலரால் இந்தக் கட்டணத்தைச் செலுத்த இயலவில்லை. இதன் காரணமாக, லட்சக்கணக்கான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம்காட்டினர். இந்தக் காரணம் ஒருபுறமிருக்க, மருத்துவப் பிரிவில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ஏழு சதவிகித இட ஒதுக்கீடு போன்ற வேறு சில காரணங்களும் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமானது.

அரசுப் பள்ளி மணவர்கள்
அரசுப் பள்ளி மணவர்கள்

அரசுப் பள்ளிகளில் கடந்த 2018-19 கல்வியாண்டில் 8,000 மாணவர்கள் அதிகமாகச் சேர்ந்திருந்த நிலையில், 2019-20 கல்வியாண்டில் 10,000 மாணவர்கள் அதிகமாகச் சேர்ந்திருந்தார்கள். 2020-21-ம் ஆண்டில் 1,00,000-க்கும் அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருந்தார்கள். இந்த சேர்க்கை விகிதம் வரும் 2021-22 கல்வியாண்டில் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பல்வேறு காரணங்களுக்காகப் பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துவிடுவது வரவேற்கத்தக்கது. மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பதற்குத் தகுந்தாற்போல் அரசுப் பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு இருக்கிறதா... போதிய அளவில் ஆசிரியர்கள் இருக்கிறார்களா... இந்தச் சூழலுக்கு அரசு தயார்நிலையில் இருக்கிறதா என்பது போன்ற உண்மையான கள நிலவரம் என்ன என்பதைப் பல்வேறு தரப்பினரிடம் விசாரித்தோம்.

தனியார்ப் பள்ளியில் படித்த தன் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்த ஆரணியைச் சேர்ந்த சுதாலட்சுமியிடம் பேசினோம். ``என் இரண்டு குழந்தைகளுமே தனியார் பள்ளியில்தான் படித்தார்கள். இந்த கொரோனா பிரச்னையெல்லாம் ஆரம்பிப்பதற்கு முதல் வருடம் என் முதல் குழந்தையை ஐந்தாம் வகுப்பிலிருந்து, ஆறாம் வகுப்புக்கு அரசுப் பள்ளியில் சேர்த்துவிட்டேன். தனியார் பள்ளியில் நல்ல ஆங்கிலம் சொல்லித்தரப்படும், உடை அணிவது முதல் உணவு வரை நல்ல பழக்கங்கள் சொல்லித்தரப்படும் என்றும் எண்ணியிருந்தேன். அரசுப் பள்ளியில் என்ன நடக்குமோ என்ற ஒருவித தயக்கத்தோடுதான் சேர்த்துவிட்டேன். ஆனால், அவன் சேர்ந்து ஒரு வருடம் முடிந்த பிறகுதான் உணர்ந்தேன். தனியார் பள்ளியைவிட அரசுப் பள்ளியில் அவனுக்குச் சிறப்பான கல்வி கிடைக்கிறது என்பதை" என்றார்.

சுதாலட்சுமி
சுதாலட்சுமி

மேலும், ``அதனால்தான் என்னுடைய இரண்டாவது மகனையும் அரசுப் பள்ளியிலேயே சேர்த்துவிட்டேன். என் குழந்தைகளை அரசுப் பள்ளியில் மாற்றியதுமே என்னைச் சுற்றியிருந்த பலரும், `என்ன போயும் போயும் கவர்ன்மென்ட் ஸ்கூலுல பசங்களைச் சேர்த்துவிட்டுருக்க, நீங்க ரெண்டு பேருமே வேலைக்கு போறீங்கதானே... பசங்களை நல்ல பிரைவேட் ஸ்கூலுல சேர்த்துவிடுங்க' என்று நம்மை மிகவும் ஏளனமாகப் பேசினார்கள். இந்தக் காரணம்தான், பெற்றோர்கள் தங்களுக்கு ஆசை இருந்தாலும், தங்களால் முடியவில்லை என்றாலும், கடன் வாங்கியாவது தங்களின் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்கவைப்பதற்கான காரணம்" என்று கூறினார்.

கல்வி சார்ந்த பல்வேறு பிரச்னைகளில் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் நேரத்தில் அரசு செய்ய வேண்டிய விஷயம் என்ன என்று கேள்வியெழுப்பினோம். ``பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அந்தத் துறைச் செயலாளர் அவர்களின் பிள்ளைகளை ஒரு பள்ளியில் சேர்க்கும்போது, அந்தப் பள்ளியில் எந்த மாதிரியான கட்டமைப்பு இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அந்தக் கட்டமைப்பு அனைத்துப் பள்ளிகளும் இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை, இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நடந்துகொள்வேன் என்றுதான் அவர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்கள். அதன்படி அனைவருக்கும் சமமான கல்வியைக் கொடுக்க வேண்டும். கற்றல் செயல்பாடுகளையும், ஒரு சிறந்த கல்வியையும் அரசாங்கத்தைவிட வேறு யாரால் தர முடியும்?'' என்றார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

தொடர்ந்து பேசியவர், ``ஒவ்வொரு வகுப்புக்கும் ஓர் ஆசிரியர், ஒரு பாடத்துக்குத் தனித் தனி ஆசிரியர், ஒவ்வொரு பள்ளிக்கும் ஆசிரியர் இல்லாத அலுவக ஊழியர்கள், பள்ளிகளுக்கென்று ஒரு தூய்மைத் தொழிலாளி ... இந்த வசதிகளை அரசால் செய்து கொடுக்க முடியாதா... இதற்கு அரசிடம் பணம் இல்லையா... இல்லையென்றால், அதை அரசு வெளிப்படையாகக் கூற வேண்டும். மக்கள் பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். பணம் இல்லை என்று அரசுப் பள்ளிகளைப் பெற்றோர்கள் நாடுகிறார்கள் என்பது ஒரு கருத்து மட்டுமே. நடைமுறையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்ற ஒருவரை, அரசு மருத்துவமனை காப்பாற்றியது. நன்றாகச் சென்ற ஒருவரைத் தனியார் மருத்துவமனை உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது. இது போன்ற நிகழ்வுகளை வாழ்வியல் அனுபவமாகப் பெற்ற பெற்றோர்கள் அரசாங்கத்தால்தான் நல்ல மருத்துவத்தையும் கல்வியையும் தர முடியும் என்று உணர்ந்து, தங்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துவருகிறார்கள். அவர்களின் உணர்வுக்கு மரியாதையை கொடுத்து, அந்தக் குழந்தைகளுக்கு நியாயமான கல்வியைக் கொடுக்க வேண்டியது இந்த அரசின் கடமை" என்று கூறினார்.

சென்னையிலுள்ள அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் ஒருவரிடம் பேசினோம். ``தற்போது பலரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துவருவது மிகவும் வரவேற்கத்தக்கது. இப்படி அரசுப் பள்ளி நோக்கி வருவோர்களை இங்கேயே தக்கவைக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. முக்கியமாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும், அடிப்படைத் தேவையான, கழிப்பறை வசதி, குடிநீர் வசதிகளைச் செய்ய வேண்டும். மாநகராட்சி ஊழியர்கள் இல்லாமல், ஒவ்வொரு பள்ளிக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒரு துப்புரவுத் தொழிலாளியை நியமிக்க வேண்டும். தற்போதைய கணக்கின்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே அளவிலான மாணவர்கள்தான் படிக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் 2.3 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 80,000-க்கும் அதிகமான ஆசிரியர்களும் மற்றும் தனியார் பள்ளிகளில் 2.6 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்களும் பணியாற்றிவருகின்றனர்'' எனக் கூறினார்.

அரசுப் பள்ளி மாணவர்கள் -Representational Image
அரசுப் பள்ளி மாணவர்கள் -Representational Image

மேலும், ``எண்ணிக்கையில் அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் அதிகம்போலத் தெரிந்தாலும், உண்மை அதுவல்ல. ஒருசில பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் இருப்பது உண்மைதான். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் குறிப்பாக, தொடக்கப் பள்ளிகளில் தேவைக்கும் மிகக் குறைவான அளவே ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அங்கு அலுவலக வேலைகள் தொடங்கி அனைத்தையும் ஆசிரியர்கள்தான் பார்க்க வேண்டும். இது எப்படிச் சரியாக இருக்கும்? இந்தநிலையை அரசு முதலில் சரிசெய்ய வேண்டும். ஆங்கிலவழிக் கல்வியை அரசு கொண்டுவந்துள்ளது. ஆனால், அதற்கென்று தனி ஆசிரியர்களை நியமிப்பது கிடையாது. தற்போதுள்ள மற்ற பிரிவு ஆசிரியர்களை அவர்களுக்குப் பாடம் நடத்தக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அப்படியென்றால் அந்த மாணவர்களுக்கு எப்படித் தரமான கல்வி சென்றடையும்? அரசுப் பள்ளிகளை நம்பி வந்துள்ள மாணவர்களுக்குச் சிறந்த கல்வி கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூல் செய்கின்றன போன்ற பல்வேறு சர்ச்சைகள் தொடர்பாக, தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமாரிடம் பேசினோம். ``எங்கள் சங்கத்தில் கிட்டத்தட்ட 10,000 பள்ளிகள் உள்ளன. உண்மையில் இந்தப் பள்ளிகள் எதிலும் அதிக கட்டணங்கள் வசூல் செய்வது கிடையாது. இந்தப் பேரிடர் காலத்திலும் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் முதல் தேர்வுகள் வரை நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தன. பள்ளி பராமரிப்பு, மின் கட்டணம், வரி, ஆசிரியர்கள் சம்பளம், போன்ற பல்வேறு செலவுகள் எங்களுக்கும் உள்ளது. இவையனைத்தையுமே மாணவர்களிடம் கட்டணம் வாங்கினால்தானே நாங்கள் கொடுக்க முடியும்... இந்தப் பேரிடர் காலத்திலும் மின் கட்டணம் தள்ளுபடி, வரிச் சலுகை என்று எதுவுமே தனியார் பள்ளிகளுக்குக் கிடைக்கவில்லை. மற்ற மாநிலங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. அதுவும் தமிழகத்தில் வழங்கப்படவில்லை. அரசு தற்போது அரசுப் பள்ளிகளில் டி.சி இல்லாமல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. பல பள்ளிகளில் மூன்று வருடங்கள் வரை கட்டணம் செலுத்தாமல் இருப்பவர்கள் உள்ளனர். அவர்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்தாமல், தற்போது அரசுப் பள்ளிகளுக்குச் சென்றுவிடுவார்கள். இது தனியார் பள்ளிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்'' என்று பேசினார்.

கே. ஆர். நந்தகுமார்
கே. ஆர். நந்தகுமார்

தொடர்ந்து பேசியவர், ``தனியார் பள்ளிகள் அனைத்துமே பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செயல்படுபவை கிடையாது என்பதை உணர வேண்டும். தமிழகத்திலுள்ள பெரிய கார்ப்ரேட் பள்ளிகள் மட்டுமே முழுக் கட்டணம் செலுத்த வற்புறுத்துவது, டொனேஷன் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இந்தச் சில நூறு பள்ளிகள் செய்யும் செயலால் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அதிக கட்டணம் வசூல் செய்யும் எந்தத் தனியார் பள்ளியின் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளலாம். எங்கள் சங்கத்திலுள்ள பள்ளிகள் அனைத்திலுமே அரசு நிர்ணயம் செய்யும் தொகையைக் கட்டணமாகப் பெறுவதற்குத் தயாராக இருக்கிறோம். பெரிய சிறிய பள்ளிகள் என்று இல்லாமல் அரசுதான் ஒரு நியாயமான தொகையை தனியார் பள்ளிகளுக்குக் கட்டணமாக நிர்ணயம் செய்ய வேண்டும். மாணவர்கள் கட்டணம் செலுத்தவில்லை என்றால், எங்களின் ஆசிரியர்களுக்கு எப்படி நாங்கள் சம்பளம் தருவது? அவர்கள் கட்டணம் செலுத்தும் வரை ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் சிக்கல் நீடிக்கும்தான். அரசு எங்களின் சிரமங்களையும் கருத்தில்கொண்டு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்" என்றார்.

அரசு விரைவாக, தகுந்த முன்னேற்பாடுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை மீண்டும் மற்ற பள்ளிகளுக்குச் செல்லாதவண்ணம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு