Published:Updated:

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து - இடஒதுக்கீட்டைப் பாதிக்குமா?

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தைத் தருவதற்கான திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டுவருகின்றன. சிறப்பு அந்தஸ்துக்கு அனுமதி அளிக்கும் சட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் வகையில், `சிறப்பு அந்தஸ்து கல்வி நிறுவனங்கள்' என்னும் செயல்திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதன்படி, 2017-ல் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. சிறப்பு அந்தஸ்து (Institute of Eminence) பெறுவதற்கு கல்வி நிறுவனங்களுக்கான ஒருசில தகுதிகளை வரையறுத்தது அரசு. இதன்படி, 10 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கும் 10 தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் அவர்களுடைய நிர்வாக மற்றும் பொருளாதார ரீதியாக சிறப்பு தன்னாட்சி நிலையைத் தருவதே மத்திய அரசின் நோக்கம்.

அரசின் விதிமுறைகளின்படி,

  1. குறிப்பிட்ட அரசு கல்வி நிறுவனம் பல்நோக்குடன் செயல்பட வேண்டும், உயர்தரக் கல்வியை மாணவர்களுக்குத் தரவேண்டும்.

  2. மற்ற சாதாரண படிப்புகளோடு புதிய வளரும் தொழில்நுட்பங்கள் சார்ந்த, இந்தியச் சூழலுக்கு உகந்ததான படிப்புகளையும் அந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்கியிருக்க வேண்டும்.

  3. வெளிநாட்டைச் சேர்ந்த அல்லது வெளிநாட்டில் பயிற்சிபெற்ற ஆசிரியர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

  4. இந்திய மாணவர்களுடன் வெளிநாட்டு மாணவர்களும் அந்த கல்விக்கூடங்களில் படிக்க வேண்டும்.

  5. மெரிட் அடிப்படையிலேயே மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். மெரிட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பொருளாதாரத்தைக் காரணம் காட்டி படிப்பு நிராகரிக்கப்பட்டிருக்கக் கூடாது.

  6. குறைந்தபட்சம் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும், சிறப்பு அந்தஸ்து பெற்ற பிறகான ஐந்தாண்டுகளில், 10 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என அது அதிகரிக்கப்பட வேண்டும்.

  7. உலகத் தரம் வாய்ந்த நூலகங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

  8. விரிவாக்கத்துக்கான இடத்துடன்கூடிய பெரிய வளாகமாக இருக்க வேண்டும்

  9. கல்விக்கூட நிர்வாகம், ஸ்பான்ஸ்ர் தலையீடு இல்லாமல் இயங்க வேண்டும்

  10. சர்வதேச தரப்பட்டியலில் இடம்பெற்ற பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இணைந்து செயல்படவேண்டும்.

  11. நிறைய ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டிருக்க வேண்டும்

  12. 2017-ம் ஆண்டுக்கான ஒழுங்குமுறை விதிகளை உள்ளடக்கிய நாக் (NAAC) கமிட்டியின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

  13. நிறுவப்பட்ட பத்து ஆண்டுகளில், சர்வதேசத் தரப்பட்டியலில் முதல் ஐந்நூறு இடங்களுக்குள் இடம்பெற்றிருக்க வேண்டும். சிறப்பு அந்தஸ்து பெற்ற ஐந்து வருடங்களில் தரவரிசைப் பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் நுழைந்திருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இந்தச் சிறப்பு அந்தஸ்தைத் தருவதற்கான திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டுவருகின்றன. சிறப்பு அந்தஸ்துக்கு அனுமதி அளிக்கும் சட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்திருக்கிறார். இருந்தும் மாநில அரசின் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக் கொள்கை, சிறப்பு அந்தஸ்து பெறுவதால் பாதிக்கப்படுமா என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், 69 சதவிகித இடஒதுக்கீடு எந்த வகையிலும் பாதிக்காது எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அமைச்சர் அன்பழகன்
அமைச்சர் அன்பழகன்

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேசுகையில், ``மத்திய அரசு இடஒதுக்கீட்டில் சிக்கல் இருக்காது என எழுத்துபூர்வமாக வாக்குறுதி கொடுத்தால் ஒழிய அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்துக்கு மாநில அரசு ஒப்புக்கொள்ளாது. ஏனென்றால், சிறப்பு அந்தஸ்து இடஒதுக்கீட்டை நிச்சயம் பாதிக்கும்" என்கிறார்.

பேராசிரியர் கருணானந்தன்
பேராசிரியர் கருணானந்தன்

இதுகுறித்துப் பேசிய பேராசிரியர் கருணானந்தன், ``ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவின் நியமனம் ஆளுநரின் பரிந்துரையின் பேரிலேயே நடந்தது. சிறப்பு அந்தஸ்தைக் கொடுப்பது நேரடியாக ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் பல்கலைக்கழகத்தைக் கொண்டுவரும். இந்த சிறப்பு அந்தஸ்து திட்டத்தின் மறைமுக அஜெண்டாவே, மாநில அரசுப் பல்கலைக்கழகங்களை மத்திய அரசு கையகப்படுத்துவதுதான். அது, சமூக ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல, சமூக நீதியையும் அழித்தொழிக்கும். காரணம், அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பு அந்தஸ்து தரும்போது, அது தனிப்பட்ட ஆதாயம் தேடுபவர்களுக்கான கட்டுப்பாட்டில் இருக்கும்.

பல்கலைக்கழகங்களைத் தன்னாட்சி நிறுவனங்களாக சிறப்பு அந்தஸ்து பிரிவின்கீழ் அறிவிப்பதே இதற்காகத்தான். பல்கலைக்கழகமும் இதற்கெல்லாம் ஆசைப்பட்டு ஒப்புக்கொண்டுவிடுகிறது. கல்விக்கழகங்கள் என்பவை சமூக நிறுவனங்கள். மக்களின் பணத்தால் மக்களுக்காக நடத்தப்படுபவை. அதை, இனி கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றுவதற்கே இந்த முயற்சி. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சமூக நீதி பற்றி அக்கறை இருக்காது. மாநில அரசுதான் இதன் வீரியம் உணர்ந்து இதுதொடர்பாக அழுத்தம்கொடுக்க வேண்டும்" என்றார்.

தொடர் சர்ச்சைகளில் சென்னைப் பல்கலைக்கழகம்... பதிவாளர் விளக்கம் என்ன?

இந்த சிறப்பு அந்தஸ்துகுறித்த நம்பகத்தன்மையை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள, 2017-ல் கட்டட வசதி, மாணவர் சேர்க்கை என எதுவும் இல்லாமலேயே நாட்டில் முதன்முதலில் சிறப்பு அந்தஸ்து பெற்றது, முகேஷ் அம்பானியின் ஜியோ பல்கலைக்கழகம் என்பதை நாம் நினைவில்கொள்வோம்.