Published:Updated:

`எமினன்ஸ் அந்தஸ்து; சூரப்பாவின் கடித சர்ச்சை!'- அண்ணா பல்கலையை ஏன் குறிவைக்கிறது மத்திய அரசு?

இங்குள்ள சிலர், `69 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்தால் ஏற்றுக்கொள்ளலாம்' என்ற கருத்தையும் முன்வைக்கிறார்கள். அதற்கும் வாய்ப்பில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`இனி அண்ணா பல்கலைக்கழகம் இருக்குமா?' என்ற கேள்வி, மாணவர்கள் மத்தியில் கவலை ரேகைகளைப் படரவைத்திருக்கிறது. காரணம், `உயர் சிறப்பு அந்தஸ்து' என்ற பெயரில் கடந்த சில நாள்களாக நடக்கும் சர்ச்சைகள். `மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தைக் கொண்டு வருவதுதான் இதன் நோக்கம். ஐ.ஐ.டி-யில் என்ன நடக்கிறதோ, அது இனி அண்ணா பல்கலையில் நடக்கும்' எனவும் ஆதங்கப்படுகின்றனர் கல்வியாளர்கள்.

`சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி நிறுவனம் என்கிற அந்தஸ்தைப் பெறுவதற்கு ஆண்டுக்கு ரூ.314 கோடி என ஐந்து ஆண்டுகளில் ரூ.1,570 கோடி தேவைப்படுகிறது. இதற்கான நிதியைப் பல்கலைக்கழகமே எளிதில் பூர்த்தி செய்துகொள்ள முடியும்' என்று துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார். ஒரு துணைவேந்தரே நேரடியாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியது. `இதனால் இட ஒதுக்கீடு பாதிக்கும்' என அரசியல் கட்சிகள் குரல் எழுப்பத் தொடங்கிவிட்டன. இதற்கு பதிலளித்த சூரப்பா, `இட ஒதுக்கீடு பிரச்னை வந்தபோது அது பற்றி விளக்கம் கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினேன். அதற்கு மத்திய அரசு அனுப்பிய பதில் கடிதத்தில், மாநில அரசின் சட்டத்தின்படி எது பின்பற்றப்படுகிறதோ அதற்கு எந்தத் தடையும் இல்லை எனக் கூறிவிட்டனர்' எனத் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

இந்தச் சர்ச்சைகளின் மையப்புள்ளியாக 'இன்ஸ்டிட்யூட் ஆஃப் எமினன்ஸ்' அதாவது ஐ.ஓ.இ (உயர் சிறப்பு அந்தஸ்து) என்ற வார்த்தை அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. ``உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தகுதி வாய்ந்த பல்கலைக்கழகங்களைத் தேர்வுசெய்து 'இன்ஸ்டிட்யூட் ஆஃப் எமினன்ஸ்'அந்தஸ்தை மத்திய அரசு வழங்குகிறது. அந்த அடிப்படையில்தான் அண்ணா பல்கலைக்கழகமும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த அந்தஸ்து கிடைத்தால், அது தன்னாட்சி பெற்ற அமைப்பாகச் செயல்பட முடியும். ஆனால், மத்திய அரசு அந்தப் பல்கலைக்கழகத்துக்கு நிதி கொடுப்பதால் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டே செயல்பட்டாக வேண்டிய சூழல் ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு முயற்சியை மாநில அரசின் ஒப்புதலோடு ஆளுநர் மாளிகை செய்துவருகிறது" என வேதனைப்படுகின்றனர் கல்வியாளர்கள்.

``உயர் சிறப்பு அந்தஸ்து வருவது நல்லதுதானே?" என்ற கேள்வியை பேராசிரியர் சிவக்குமாரிடம் முன்வைத்தோம். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் விளக்குநராகப் பணிபுரிந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற உறுப்பினராகவும் இருந்தவர். ஆசிரியர் சங்கத்தில் நீண்டகாலம் பொறுப்பில் இருந்தவர்.

பேராசிரியர் சிவக்குமார்
பேராசிரியர் சிவக்குமார்

`` யாருக்கு நல்லது என்பதுதான் முக்கியமான கேள்வி. இதன் பின்னணியில் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை 2020, கஸ்தூரி ரங்கன் அறிக்கை மற்றும் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், `பல்வேறு துறை சார்ந்த படிப்புகளைக் கற்றுத் தரக்கூடிய, பெரிய வளாகங்களை உள்ளடக்கிய பல்கலைக்கழகங்களை இந்தியாவில் உருவாக்க வேண்டும்' என முடிவு செய்தனர். நிதி ஆயோக்கின் செயல்திட்ட அறிக்கையிலும், `சிங்கப்பூரிலுள்ள பல்கலைக்கழக மாதிரியைப்போல இந்தியாவில் உருவாக்க வேண்டும். அதாவது, பல்கலைக்கழக நிதியை `டயர்டு சிஸ்டம்' போல உருவாக்க வேண்டும். உதாரணமாக, ரயில்களிலுள்ள முன்பதிவில்லாத பெட்டி, 2 டயர், 3 டயர், ஏ.சி கோச் என இருப்பதுபோல உருவாக்குவது என முடிவு செய்தனர். ரயில்களில் எந்தக் கோச்சுக்கு கட்டணம் குறைவாக இருக்கும் என்பது மக்களுக்குத் தெரியும். அந்தவகையில், `சர்வதேச தரத்தில் பல்கலைக்கழகங்களை கொண்டு வர வேண்டுமென்றால், டயர்டு சிஸ்டம் மூலமாக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என மத்திய அரசு கூறிவிட்டது.

இந்தியாவில் 10 அரசு நிறுவனங்களுக்கும், 10 தனியார் நிறுவனங்களுக்கும் ஐ.ஓ.இ டாக் (Tag) கொடுத்திருக்கின்றனர். அதில் அண்ணா பல்கலைக்கழகமும், ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆனால், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கான ஐ.ஓ.இ டாக்கை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என மேற்கு வங்க அரசாங்கம் கூறிவிட்டது. தமிழ்நாடு அரசாங்கமோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் தமிழக மாணவர்களுக்கு ஏராளமான சிக்கல்கள் வரப்போகின்றன. உயர் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டால், தேசியக் கல்விக் கொள்கை 2020-ன்படி வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வந்து படிப்பார்கள். 100 இடங்களில் 30 இடங்களை வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். மீதமுள்ள 70 இடங்களுக்குத்தான் இடஒதுக்கீடு இருக்கும். இந்த இடங்களை இட ஒதுக்கீட்டின்படி கொடுப்பதற்கு வாய்ப்பில்லை. இஙகிருக்கும் சிலர், `69 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தால் ஏற்றுக்கொள்ளலாம்' என்ற கருத்தையும் இங்கே முன்வைக்கிறார்கள். அதற்கும் வாய்ப்பில்லை."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``எப்படிச் சொல்கிறீர்கள்?"

துணைவேந்தர் சூரப்பா
துணைவேந்தர் சூரப்பா

``ஆகஸ்ட் 2017-ல் மத்திய அரசு கொண்டுவந்த 4.24, 4.25 என்ற இரண்டு சட்டப் பிரிவுகளின்படி,`மெரிட் பேஸ் அட்மிஷன்' என்பதை முன்வைக்கின்றனர். இது மிகவும் முக்கியமான விஷயம். இந்தச் சட்டத்தின்படி 69 சதவிகித இடஒதுக்கீடு கொடுக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. சட்டப்பிரிவு 4.25-ன்படி, `வெளிப்படையான தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். நம்முடைய கவனக்குவிப்பு தகுதிவாய்ந்த மாணவர்களைச் சேர்க்க வேண்டும்' எனச் சொல்கிறது. இந்தச் சட்டமானது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதில் திருத்தம் கொண்டு வருவதற்கான எந்தவொரு போராட்டமும் நடக்கவில்லை. அப்படியிருக்கும்போது 69 சதவிகித இடஒதுக்கீடு என்பது சாத்தியமில்லை. நீதிமன்றம் போனாலும் இந்தச் சட்டத்தைத்தான் காட்டுவார்கள். எனவே, 69 சதவிகித இடஒதுக்கீடு கொடுப்போம் என சூரப்பா சொல்வதெல்லாம் ஏமாற்று வேலை. இது தொடர்பாக, ஒரே ஒரு கடிதம் எழுதினால் மத்திய அரசு ஒத்துக்கொள்ளுமா என்ன?

இன்னொரு முக்கியமான விஷயம். நான் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்திருக்கிறேன். ஆசிரியர் சங்கத்தில் பல ஆண்டுகளாக பொறுப்பில் இருந்திருக்கிறேன். பல துணைவேந்தர்களை நாங்கள் சந்தித்திருக்கிறோம். ஆனால், எந்தத் துணைவேந்தருமே தானாகவே நிதி திரட்டுவோம் எனக் கூறியதில்லை. இந்தப் பணத்தை திரட்டுவதற்கு ஒரே வழி, மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தினால் மட்டுமே சாத்தியம். இல்லாவிட்டால் தொலைநிலைக் கல்விக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுவரை தொலைநிலைக் கல்வித் திட்டம் இல்லை. தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் எல்லாமே தொலைதூரக் கல்வியை வைத்துத்தான் நிதி ஆதாரத்தைச் சமாளிக்கின்றன. சென்னைப் பல்கலைக்கழகம் உயிரோடு இருப்பதற்குக் காரணமே தொலைநிலைக் கல்விதான். பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத்தைக் கொடுப்பதற்குக்கூட பணமில்லை. மத்திய அரசும், மாநிலம் அரசும்தான் மானியம் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் மாணவர்கள் தலையில் கட்டணச் சுமையை ஏற்ற முயல்கின்றனர். உயர் சிறப்பு அந்தஸ்து வந்தால், வெளிநாட்டு மாணவர்கள் வந்து படிப்பார்கள், வெளிநாட்டுப் பேராசிரியர்கள் வருவார்கள். இவை இரண்டிலும் இடஒதுக்கீடு பாதிக்கப்படும்.’’

``அப்படியே பார்த்தாலும் நமது மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கிறார்களே?"

அமைச்சர் கே.பி அன்பழகன்
அமைச்சர் கே.பி அன்பழகன்

`` உண்மைதான். ஆனால், அங்கு போய் படிப்பவர்களெல்லோரும் யார் என்று பாருங்கள். பணத்தைத் திரட்டக்கூடிய சக்தி உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். அதிலும், எங்கு குறைவான கல்விக் கட்டணம் இருக்கிறதோ அதைத் தேடிப் போகிறார்கள். உலக மருத்துவச் சந்தையில் கல்வி கோலோச்சுகிறது. இதே போன்ற போட்டியில் அண்ணா பல்கலைக்கழகமும் இறங்கப்போகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினீயரிங்கையும் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங்கையும் தமிழ்வழியில் படிக்க முடியும். இனி அது சாத்தியப்படப் போவதில்லை. அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தை தமிழக அரசு இரண்டாகப் பிரித்துவிட்டது. ஒன்று `அண்ணா டெக்னிக்கல் ரிசர்ச் யுனிவர்சிட்டி' என்ற பெயரில் பிரித்து அதற்குள் கிண்டி வளாகம், எம்.ஐ.டி வளாகம், ஏ.சி டெக் ஆகியவற்றை அடக்கிவிட்டனர். ஏ.சி டெக்கில்தான் நான் பிஹெச்.டி முடித்தேன். அப்போது இட ஒதுக்கீடு இருந்தது. ஆனால், அடித்தட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதன்பிறகு நிறைய கல்லூரிகள் திறக்கப்பட்டன. பின்னர், இட ஒதுக்கீட்டின் மூலமாக தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களும் கிராமப்புற மாணவர்களும் வந்தார்கள். அவர்களுக்குப் பல்கலைக்கழகம் கல்வி உதவித்தொகையும் வழங்கியது.

அதுவே, ஐ.ஓ.இ டேக் வந்துவிட்டால், முதல் தலைமுறை மாணவர்கள் சேர முடியாது. பல்கலைக்கழகத்துக்குள் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், ஐ.எஸ்.ஆர்.ஓ., டி.ஆர்.டி.ஓ ஆகியவை தங்களின் ஆய்வுகளுக்காக உபகரணங்களை வாங்கிக் குவித்திருக்கின்றன. இதற்காக சென்னையின் மையப்பகுதியில் மிகப்பெரிய நிலப்பரப்பும் அதிலுள்ள ஆய்வகம் மற்றும் நூலக வசதிகள் மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கப்போகின்றன. இதைவைத்து உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக மாற்றி அப்படியே கார்ப்பரேட் யுனிவர்சிட்டியாக மாற்றப்போகிறார்கள். இது எப்படி நமது அடித்தட்டு மாணவர்களுக்குப் பயன்படும்... இந்தியா முழுவதும் வரக்கூடிய ஐ.ஓ.இ பல்கலைக்கழகங்களான மணிப்பால் பல்கலைக்கழகம், அம்பானியின் ஜியோ பல்கலைக்கழகம், வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் போட்டிபோடப்போகிறது. இந்தப் போட்டி எப்படி இருக்குமென்றால், பி.எஸ்.என்.எல் சிம் கார்டு, ஜியோவுடன் போட்டி போடுவதற்கு ஒப்பானது.

இதை ஆட்சியிலுள்ள அ.தி.மு.க அரசு எதிர்க்க வேண்டும். 69 சதவிகித இடஒதுக்கீட்டை மத்திய அரசு ஒத்துக்கொள்வதாக சூரப்பா சொல்கிறார். ஐ.ஐ.டி என்பது மத்திய அரசின் நிறுவனம். அங்கு ஓ.பி.சி பிரிவு உண்டு. அதேநேரம், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு உண்டா? தமிழ்நாட்டில் பி.சி இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது. இங்கு அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு உள்ளது. இவையெல்லாம் மத்திய அரசு நிறுவனத்தில் இருக்கின்றனவா? மாநிலத்தின் உரிமை என்பது கல்வியைத் தீர்மானிப்பது. அதை முழுமையாகப் பறிக்கக்கூடிய வகையில் மத்திய அரசின் செயல்பாடு இருக்கிறது. இதை அரசு எதிர்க்காவிட்டால், பெரிய வளாகங்களுள்ள நமது கல்வி நிறுவனங்களெல்லாம் மத்திய அரசின் கைகளுக்குப் போய்விடும்.

``ஐ.ஓ.இ வந்தால் தமிழர்களுக்கெல்லாம் நல்லது என்கிறாரே சூரப்பா?"

அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டால் இடஒதுக்கீடு பாதிக்குமா? ஓர் அலசல்!

``எந்தத் தமிழர்களுக்கு நல்லது... 30 வெளிநாட்டு மாணவர்களோடு போட்டி போடக்கூடிய 70 மாணவர்கள்தான் வரப் போகிறார்கள். ஐ.ஓ.இ வந்தபோதே இவர்கள் எதிர்த்திருக்க வேண்டும். சூரப்பா தெரிந்தும் செய்கிறார், தெரியாமலும் செய்கிறார். இந்த அதிகாரத்தை சூரப்பாவுக்கு யார் கொடுத்தது? நிதி தொடர்பான முடிவை துணைவேந்தர் எடுக்கிறாரென்றால், நிதி கமிட்டியில் ஒப்புதல் வாங்க வேண்டும் என்பது பல்கலைக்கழக விதி. அப்படி ஒப்புதல் வாங்காமல் 1,500 கோடியை உருவாக்க முடியும் என எப்படிச் சொல்ல முடியும்... இதைத் தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறதா... `நீயே சம்பாதித்துக்கொள்’ எனப் பல்கலைக்கழகங்களை அரசு கழற்றிவிடுகிறதா... சுயநிதிக் கல்லூரிகளில் பணம் கட்ட முடியாமல் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதையெல்லாம் அரசு கண்டுகொள்வதில்லை. பல்கலைக்கழகங்களெல்லாம் சுயநிதியாக மாறினால் என்ன ஆவது?"

``தமிழக அரசை மீறி, `நானே தீர்மானிப்பேன்' என ஒரு துணைவேந்தர் கூறுவது சரியா?"

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`` ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் முதல்வராக இருந்தபோது துணைவேந்தர் நியமனங்களில் சர்ச்சை இருந்ததில்லை. தமிழக முதல்வரையும் அமைச்சரையும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் பா.ஜ.க ஆதரவில் செயல்படும் ஒருவரை துணைவேந்தராகக் கொண்டுவந்திருக்கிறார்கள். பல்கலைக்கழகத்திலுள்ள ஆடிட்டிங் கோர்ஸ் வகுப்பில் பகவத் கீதை இருக்கிறது. 'சான்ஸ்கிரிட் அண்ட் டெக்னாலஜி 'என்ற பாடப்பிரிவையும் கொண்டு வந்திருக்கிறார்கள். இதையெல்லாம் மாநில அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. `நானே தீர்மானிப்பேன்’ என்றால், பல்கலைக்கழக இணைவேந்தராக இருக்கும் தமிழக அமைச்சர் அன்பழகனுக்கு என்ன மரியாதை? தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தில் இது தொடர்பாக விவாதித்தார்களா... எதையும் விவாதிக்காமல், அறிக்கை விடுகிறாரென்றால், சூரப்பா மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு அரசு கடிதம் எழுத வேண்டும். ஒவ்வொரு துணைவேந்தரும் இவ்வாறு செய்யத் தொடங்கினால் உயர்கல்வி என்பது குட்டிச் சுவராக மாறிவிடும்.

ஐ.ஓ.இ வந்துவிட்டால் இவர்கள் எதிர்க்க மாட்டார்கள் என்பது சூரப்பாவுக்கு வசதியாகப்போய்விட்டது. சொல்லப்போனால், சூரப்பாவும் இவர்களும் சேர்ந்துதான் செய்கிறார்கள். தனது ஆட்சிக்காலம் முடிவதற்குள் ஐ.ஓ.இ வாங்கிவிட வேண்டும் என்பதில் சூரப்பா உறுதியாக இருக்கிறார். அப்படி வாங்கிவிட்டால், நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறிவிடும். இந்த ஆண்டு சேர்கின்ற மாணவர்களோடு கதை முடிந்துவிட்டது. ஆய்வகம், நூலகமெல்லாம் மத்திய அரசின் கைகளில் இருக்கும். ஐ.ஓ.இ-யை கண்காணிப்பதற்கு எம்பவரிங் கமிட்டி போடுவார்கள். ஐ.ஐ.டி போர்டில் இயக்குநர்களாக தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். அதேபோல், இங்கும் தொழிலதிபர்கள் வருவார்கள். பிறகு என்ன நடக்கும் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அண்ணாவின் பெயரால் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய அ.தி.மு.க அரசு, அவர்கள் ஆட்சிக்காலத்திலேயே கார்ப்பரேட் கைகளுக்கு அதைத் தாரைவார்க்கப் போகிறது என்பதுதான் இந்த அரசின் பெரிய சாதனை.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு