Published:Updated:

`விக்ரம் லேண்டர் சிக்னல் கிடைக்கும்; மாணவர்கள் அனுப்பிய கடிதம்!' - இஸ்ரோ தலைவரின் சர்ப்ரைஸ்

உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் அன்பாலும் ஆதரவாலும் நம் இந்திய விண்வெளித்துறை மேன்மேலும் வளர்ந்து பல சாதனைகள் படைக்கும் என சந்திரயான்-2 குறித்து மாணவர்கள் அனுப்பிய கடிதத்திற்கு இஸ்ரோ தலைவர் பதில் கடிதம் அனுப்பி மாணவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

இஸ்ரோ சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய 'சந்திரயான்-2' விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-2 விண்கலத்தின் 'விக்ரம் லேண்டர்' நிலவை நெருங்கிய நிலையில் அதிலிருந்து சிக்னல் எதுவும் வரவில்லை. விரைவில் சிக்னல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. விக்ரம் லேண்டர், திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க முடியவில்லை.

மாணவர்கள் அனுப்பிய கடிதம்
மாணவர்கள் அனுப்பிய கடிதம்

சந்திரயான்-2 குறித்து பிரதமர் மோடி பேசிவிட்டுக் கிளம்பிய போது, பிரதமர் மோடியிடம், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். சிவனைத் தன் தோள் மீது சாய்த்து அரவணைத்துத் தேற்றினார் பிரதமர் மோடி. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. சமூக வலைதளங்களில் சிவன் மற்றும் விஞ்ஞானிகளின் முயற்சிக்குப் பெரும் ஆதரவு குவிந்து வந்தது. இந்தநிலையில்தான், ஆவணத்தாங்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 8 பேர் சந்திரயான்-2 குறித்தும், இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தும் தன்னம்பிக்கை ஊட்டும் கடிதத்தையும் கடந்த மாதம் அனுப்பி வைத்தனர்.

மாணவர்களின் கடிதத்தில்,``அரசுப் பள்ளியில் படித்து, உலகமே வியக்கும் சாதனை மேற்கொண்ட உங்களைப் பார்த்து எங்களுக்கும் சாதனை படைக்க வேண்டும் என்ற உத்வேகம் வந்துள்ளது. நீங்கள் சிந்திய கண்ணீர் எங்களை மனமுடையச் செய்தது. விரைவில் விக்ரம் லேண்டரின் தொடர்பு கிடைக்கும். நீங்கள் தன்னம்பிக்கை இழந்துவிட வேண்டாம். 130 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

மாணவர்கள் அனுப்பிய கடிதம்
மாணவர்கள் அனுப்பிய கடிதம்

நாங்களும் படித்து உங்களைப் போன்ற விஞ்ஞானிகளாக வந்து நாட்டிற்குச் சேவை செய்வோம்''. இவ்வாறு அவர்கள் தங்களது கருத்துகளை எழுதி இருந்தனர். இந்த நிலையில்தான் பல்வேறு பணிச் சூழல்களுக்கு இடையேயும் மாணவர்களின் கடிதத்தை வாசித்து மகிழ்ச்சியடைந்த இஸ்ரோ தலைவர் சிவன், மாணவர்களுக்கு, பதில் கடிதம் அனுப்பி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சிவன் அனுப்பிய கடிதத்தில், ``சந்திரயான் 2 திட்டத்தைத் தொடர்ந்து கவனித்து அதைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி.

`உங்கள் லட்சிய ஆசைகள் நிறைவேறும்!'- இஸ்ரோ தலைவர் சிவனின் கடிதத்தால் நெகிழ்ந்த  பழங்குடியின மாணவர்கள்

சந்திரயான் 2 லேண்டர் வெற்றிகரமாகத் தரையில் இறங்காமல் இருந்தாலும், சந்திரயான் 2 ஆர்பிட்டர் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சந்திரயான் -2 ஆர்பிட்டர், அதனுடைய கருவிகள் மூலம் அறிவியல் ரீதியான தகவல்களை ஒருவருட திட்ட ஆயுட்காலத்தைத் தாண்டி, ஏழு வருடக் காலத்திற்கு அனுப்பும் சந்திரனில் மீண்டும் தரையிறங்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

இஸ்ரோ தலைவர் அனுப்பிய கடிதம்
இஸ்ரோ தலைவர் அனுப்பிய கடிதம்

உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் அன்பாலும், ஆதரவாலும் நம் இந்திய விண்வெளித்துறை மேன்மேலும் வளர்ந்து பல சாதனைகள் படைக்கும். நீங்கள் அனைவரும் நன்கு படித்து சமுதாயத்தில் வளர்ந்து, வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டுமென வாழ்த்துகிறேன் மற்றும் பிரார்த்திக்கிறேன்" இவ்வாறு பதில் அனுப்பி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுபற்றி மாணவர்களிடம் பேசியபோது, ``பதில் கடிதத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு இன்ப அதிர்ச்சிதான். நிச்சயம் ஐயாவின் வழிகாட்டுதலில் உயர்ந்த நிலையை அடைவோம்" என்றனர் நம்பிக்கையுடன்.