Election bannerElection banner
Published:Updated:

`சுகாதாரத்துறை அனுமதி கிடைத்ததா?’ - பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் கொதிக்கும் கல்வியாளர்கள்

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள் ( Representational Image )

தற்போதைய கொரோனா சூழலில் 10 மற்றும் 12-ம் வகுப்பினருக்கு மட்டும் வகுப்புகளை நடத்துவதே சிறந்தது என்றும் அவசியமானது என்றும் கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா பேரிடர் காரணமாக கடந்த ஆண்டு மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இடையில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று அனுமதி வழங்கி, பிறகு எதிர்ப்புகளால் மீண்டும் அந்த அனுமதியை நாள் குறிப்பிடாமல் தள்ளிப்போட்டது அரசு. பள்ளிகள் திறப்பது குறித்து, பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தையும் பள்ளிக்கல்வித்துறை நடத்தி முடித்தது.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

இந்த ஆண்டு கண்டிப்பாகத் தேர்வுகள் நடைபெறும் என்று ஒருபுறம் சொல்லப்பட்டாலும், இன்னொரு பக்கம் இந்தக் கல்வியாண்டைப் பூஜ்ஜிய கல்வியாண்டாக அரசு அறிவிக்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த ஆண்டு தேர்வு நடைபெறுமா அல்லது பூஜ்ஜியக் கல்வியாண்டாக அறிவிக்கப்படுமா என்பது குறித்து ஒரு தெளிவான முடிவை அரசு சொல்லும்வரை இது போன்ற குழப்பங்களுக்குப் பஞ்சமிருக்காது.

`கஷ்டத்தைச் சொன்னோம்... கரம் கொடுத்தார்கள்!' - மீண்டெழும் தாய்த் தமிழ்ப் பள்ளிகள்

பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ``தொடர் பண்டிகைக் காலம் வருவதால், பொங்கல் முடிந்து பள்ளிகளைத் திறக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பினருக்கு மட்டும் வகுப்புகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பின்னர் நிலைமையைப் பார்த்து மற்ற வகுப்புகளைத் திறப்பது குறித்து முடிவு செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தனர். பள்ளிகள் திறப்பு குறித்துப் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றிருக்கிறது. அதில் கூறப்படும் கருத்துகளின் முடிவுகள், அதோடு, தற்போதைய நிலையில் பள்ளிகளைத் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

பள்ளிக் கல்வித் துறை
பள்ளிக் கல்வித் துறை

பள்ளிகள் திறந்த மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என்று பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பின்னர் திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. பள்ளிகளைத் திறந்த பல உலக நாடுகளிலும் இதேநிலைதான் ஏற்பட்டது.

`டிசம்பருக்குப் பிறகு பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்கலாமே...’ - என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

முந்தைய செயல்பாடுகளைவைத்துப் பார்க்கையில், கல்வி நிறுவனங்களைத் திறப்பதில் அரசு ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பதுபோலத்தான் தெரிகிறது. இந்த ஆண்டை பூஜ்ஜியக் கல்வியாண்டாக அறிவிப்பது என்பது எந்த அளவுக்குச் சாத்தியம், அது மாணவர்களுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் அரசு நிச்சயம் பரிசீலனை செய்யும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

பள்ளி | Vikatan Poll
பள்ளி | Vikatan Poll

தற்போதைய நிலையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளைத் திறப்பதைவிட பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறந்து வகுப்பு நடத்துவது அவசியமாகிறது என்கிறார்கள் கல்வியாளர்கள். காரணம், தனியார்ப் பள்ளிகளைப் பொறுத்தவரை, முன்பிருந்தே ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் பல தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வும் நடந்து முடிந்திருக்கிறது. அப்படியே அரசுப் பள்ளி மாணவர்களைப் பார்க்கையில், அந்த நிலைமை தலைகீழாக இருக்கிறது. இவர்களுக்கு சமீபத்தில்தான் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் எடுக்கப்படுகிறது. எதைவைத்து இவர்கள் தனியார்ப் பள்ளி மாணவர்களோடு போட்டிபோடுவார்கள்... எந்த அடிப்படையில் கல்லூரிகளில் சேர முடியும்... எப்படி இவர்கள் இருவரும் போட்டித் தேர்வுகளை ஒருசேர எதிர்கொள்வார்கள்? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளையும் கல்வியாளர்கள் எழுப்புகிறார்கள்.

இந்தக் கல்வியாண்டில் பாடத்திட்டத்தைக் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல, அனைத்து வகுப்பு மாணவர்களையும் பள்ளிக்கு வரச் சொல்லி கொரோனா பரவும் அபாயத்தை உருவாக்குவதற்கு பதிலாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை மட்டும் பள்ளிக்கு வரச் சொல்லி அடுத்த மூன்று மாதங்களுக்குப் பாடங்களை நடத்தினால் அவர்களால் தேர்வுகளில் ஓரளவு சிறப்பாகச் செய்து முடிக்க முடியும் என்பதே கல்வியாளர்கள் பலரின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

ஆன்லைன் வகுப்புகள்... புறக்கணிக்கப்படும் 
ஏழைக் குழந்தைகள்...

இது குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் பேசினோம், ``அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் சம அளவு கல்வியைத் தராமல் தேர்வை நடத்துவது என்பது நம் அரசியலமைப்புக்கு எதிரானது. அது, `வசதியான மாணவர்கள் மட்டும் படித்துக்கொள்ளுங்கள், வசதி இல்லாத மாணவர்கள் எப்படியாவது போங்கள்’ என்று சொல்வது போன்றது. தற்போதைய நிலையில் எத்தனை மாணவர்கள் பள்ளியில் படிக்கிறார்கள், எத்தனை மாணவர்கள் படிப்பை நிறுத்தியிருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பையே அரசு நடத்தவில்லையே... அரசு சரியான தகவல்களைச் சேகரிக்கவில்லை என்பது உண்மை. எத்தனை பாடங்கள் குறைக்கப்பட்டன என்ற சரியான தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. CBSC குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்துக் கூறியிருக்கிறது. அப்படியானால், மற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலைமை?" என்று கேள்வி எழுப்பினார்.

கல்வியாளர் நெடுஞ்செழியன்
கல்வியாளர் நெடுஞ்செழியன்

தொடர்ந்து பேசியவர், ``நாங்கள் எடுத்த சர்வேயின்படி 95 சதவிகித மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி சரியாகப் புரியவில்லை. மாணவர்கள் எழுதிப் படித்தே மிக நீண்ட மாதங்கள் ஆகின்றன. அவர்கள் மூன்று மணி நேரத்தில் ஒரு தேர்வை எப்படி எழுத முடியும்... அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் சரியான கல்வியைக் கொண்டு சேர்க்காமல் தேர்வுகளை நடத்துவது தவறு. கல்வியின் தரத்தை எதற்காகவும், யாருக்காகவும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. மாணவர்களின் சூழலையும், உடல்நிலையையும் நாம் பார்ப்பதில்லை. தேர்வை நடத்த வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருப்பது மிகவும் தவறான செயல். இந்த ஆண்டை அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு நடத்தாமல் பூஜ்ஜிய ஆண்டாக அறிவிப்பது நல்லது. அதேநேரத்தில் இந்த வருடம் வீணாகாமல், மாணவர்களுக்கு அந்தப் பகுதி சார்ந்த தொழில் கல்வியைக் கொடுக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நிலையைவிட எதுவும் முக்கியம் இல்லை" என்று பேசினார்.

தேர்வுகள் நடத்துவது மற்றும் பள்ளி திறப்பது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். ``தற்போதைய நிலையில் தேர்வை நடத்த வேண்டும் என்று அரசு உறுதியாக இருப்பது சந்தை லாபத்துக்காக மட்டுமே என்றுதான் பார்க்க வேண்டும். அரசுக்கு நான் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். பள்ளிகளை மூடும்போது யாரிடம் கேட்டு பள்ளிகளை மூடினார்கள்... பெற்றோர்களிடம், மாணவர்களிடம் அல்லது கல்வியாளர்களிடமா? சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பெயரில்தானே... அப்படி இருக்கும்போது பள்ளிகளைத் திறக்கும்போது மட்டும் இவர்களிடம் ஏன் கருத்துக்கேட்பு நடத்துகிறீர்கள்? ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மக்களிடம் கருத்துகளைக் கேட்டுத்தான் செயல்பட்டோம் என்று அரசு தப்பித்துக்கொள்வதற்காகத்தானே... சுகாதாரத்துறை சார்பில், தற்போது தமிழகத்தில் கல்வி நிலையங்களைத் திறப்பது பாதுகாப்பானது என்று உத்தரவு கிடைத்ததா என்ற தகவலைப் பொதுவெளியில் அரசு வெளியிட வேண்டும்" என்றார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்
பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்

மேலும்,``பாடம் குறைக்கப்படும் என்று கூறிய அரசு, எத்தனை பாடங்கள் குறைக்கப்பட்டன என்ற தகவலையே இன்னும் அறிவிக்கவில்லையே... குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த தகவலை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பணம் வசதி படைத்தவர்கள் எப்படியாவது படித்துவிடுவார்கள் . பணம் இல்லாதவர்கள் என்ன செய்வது... இந்த வருடம் கல்வியே பெரும்பாலான குழந்தைகளுக்குச் சென்று சேரவில்லை. அப்படியிருக்கும் சூழலில் தேர்வு நடத்துவது எப்படிச் சரியாகும்... இந்த வருடம் தேர்வு நடத்தினால்தான் போட்டித் தேர்வு மையங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும்.

தனியார் பள்ளிகள் அடுத்த வருடக் கல்விக் கட்டணத்தை வசூலிக்க முடியும் என்ற காரணத்துக்காக மட்டுமே அரசுத் தேர்வை நடத்த ஆசைப்படுகின்றன என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். பள்ளி திறப்பது பாதுகாப்பானது என்பதை அரசு உறுதிசெய்துவிட்டு. குறைக்கப்பட்டப் பாட விவரங்களை வெளிப்படையாகக் கூறி, இருக்கும் இந்த நான்கு ஐந்து மாதங்கள் வகுப்புகள் நடத்தி, தேர்வுகளை நடத்த வேண்டும். பள்ளிகளைத் திறக்காமல் தேர்வுகளை நடத்துவது என்பதும், பாதுகாப்பை உறுதி செய்யாமல் பள்ளிகளைத் திறப்பது என்பதும் ஒரு நல்ல அரசுக்கு அழகா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று கூறினார்.

தற்போது பள்ளிகள் திறக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறை மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து மருத்துவர் ஜீனத் பேகத்திடம் பேசினோம். ``இந்த கொரோனா பேரிடர் எப்போது முடியும் என்பது தெரியாத ஒன்று. அனைவருமே புதிய சூழலுக்கு நம்மைத் தயார்ப்படுத்திவருகிறோம். அதேபோலத்தான் பள்ளிகளைப் பொறுத்தவரையும், ஒரு புதிய சூழலுக்கு நாம் பழகியாக வேண்டும். குழந்தைகளின் படிப்பு முக்கியமான ஒன்று. அதிலும் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வும் மதிப்பெண்ணும் முக்கியமானவை. அந்தச் சூழலுக்கு நாம் மாணவர்களைப் பழக்க வேண்டும். பள்ளிக்கு மாணவர்களை வரச் சொல்லும்போது மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை விவரங்களைக் கேட்டறிந்திருக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையைப் பிரித்து வகுப்பு நடத்த வேண்டும்.

டாக்டர் ஜீனத் பேகம்
டாக்டர் ஜீனத் பேகம்

வகுப்பறையில் போதிய காற்றோட்ட வசதி மிக மிக அவசியம். ஒரு மாணவருக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி தொடங்கியதும், மாணவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உணவு இடைவேளையின்போது திறந்த வெளியிடங்களில் மாணவர்களை உணவருந்தவைப்பது மிகச் சிறந்தது. மிக முக்கியமாக, ஆசிரியர்களுக்கு அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் போதிய இடைவெளி இருக்க வேண்டும். அரசு கூறும் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.

``தமிழக அரசுப் பள்ளிகள் திறப்பதில் காலம் தாழ்த்தாமல் ஒரு முடிவை எடுக்க வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்கள் மற்றும் உலக நாடுகள் இதற்கு முன் பள்ளிகளைத் திறந்தபோது செய்த தவறுகள் என்னென்ன என்பதை ஆராய்ந்து அந்தத் தவறுகள் இங்கு நடைபெறாவண்ணம் வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்’’ என்பதே பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு