Published:Updated:

புதுடெல்லி: களைகட்டும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தேர்தல்!

த.க.தமிழ் பாரதன்

லிங்டோ கமிட்டி பரிந்துரைத்த நெறிமுறைகளின்படியே இந்தியக் கல்வி நிறுவனங்களில் மாணவர் தேர்தல் நடத்தப்படுகிறது. ஜே.என்.யூ-விலும் அந்த நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன.

JNU Student election
JNU Student election

இந்தியாவின் புகழ்வாய்ந்த பல்கலைக்கழகங்களுள் முதன்மையானது, டெல்லியில்உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். ஜே.என்.யூ என்று பரவலாக அறியப்படும் இந்தப் பல்கலைக்கழகம், தற்போது பொன்விழா (1969-2019) ஆண்டில் அடியெடுத்து வைப்பதுடன், கொண்டாடப்பட்டும் வருகிறது.

JNU Student Election
JNU Student Election

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமானது, மற்ற கல்வி நிலையங்களைவிட மாறுபட்டது. கருத்துச் சுதந்திரமும் பன்முகத்தன்மையும் இந்தப் பல்கலைக்கழகத்தை இன்றளவும் தாங்கியிருக்கின்றன. இங்குள்ள மாணவர்கள் கருத்துச் சுதந்திரத்தையும், உரிமைக்கான போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்வதால் பிற கல்வி நிலைய மாணவர்களுக்கு முன்னோடிகளாக உள்ளனர். எங்கு உரிமை மீறல் நிகழ்ந்தாலும் ஜே.என்.யூ சார்பில் கண்டனக்குரல் எழும்.

பல்கலைக்கழக மாணவர்களின் குரலாக ஒலிக்கும் ஜே.என்.யூ மாணவர் சங்கத்திற்கான தேர்தல் ஆண்டுதோறும் கல்வியாண்டின் தொடக்கத்தில் நடைபெறுவது வழக்கம். 2019-20-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சங்கத் தேர்தல் வரும் செப்டம்பர் 6-ம் தேதி நடைபெறுகிறது.

மாணவர் சங்கத்தின் பணிகள்:

மாணவர்களின் நலன்சார்ந்த முடிவுகளை எடுப்பது, தேவைகளை நிறைவேற்றுவது போன்றவை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் ஜே.என்.யூ மாணவர் சங்கத்தின் முக்கியமான பொறுப்பே வேறு. மாணவர் சங்கத்தின் பொறுப்பாளர்களான தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், இணைச்செயலாளர் ஆகியோர் பல்கலைக்கழகத்தின் அகாடமி கவுன்சிலில் இடம்பெறுவர். இதில் இந்நால்வரின் ஒப்புதலின்றி எதையும் நடைமுறைப்படுத்த முடியாது.

ஆனால், அண்மைக்காலமாக மாணவர் சங்கப் பொறுப்பாளர்கள் இல்லாமலேயே அகாடமி கவுன்சில் நடைபெறுவது நோக்கத்தக்கது. இதனால், தேர்தலில் வென்று மாணவர் சங்கத்தின் பொறுப்பாளர்களாகத் தேர்வானவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தில் இடம்பெறாத சூழலே நிலவுகிறது.

JNU Student Election
JNU Student Election

களம்காணும் அமைப்புகள் :

பிர்சா அம்பேத்கர் புலே மாணவர் அமைப்பு (Birsa Ambedkar Phule Students Association - BAPSA), காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (National Students Union of India - NSUI), ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவ அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (Akhila Bharatiya Vidyarthi Parsishad - ABVP), இடதுசாரி சிந்தனை அமைப்புகளான அனைத்திந்திய மாணவர் சங்கம் (All Indian Students Association – AISA), இந்திய மாணவர் சங்கம் (Students Federation of India - SFI), ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (Democratic Students Federation - DSF), அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (All India Students Federation) ஆகியவற்றுடன் மேலும் சில மாணவர் அமைப்புகளும் இந்தத் தேர்தலைச் சந்திக்கின்றன.

களையப்பட வேண்டிய சிக்கல்கள்:

மாணவர் போராட்டங்களுக்கு அனுமதி மறுத்தல், மாணவர் நஜீப் மீதான தாக்குதலைத் தொடர்ந்து அவர் காணாமல் போனது, போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள்மீது விசாரணை, பல்கலைக்கழகத்தைவிட்டு நீக்குதல், அபராதம் விதித்தல், மாணவர்களின் போராட்டங்களுக்குத் துணையாக இருக்கும் ஆசிரியர்கள் மீதும் விசாரணை, அழகினைக் காரணம்காட்டி பல்கலைக்கழகச் சுவரினை விழிப்புஉணர்வுக் களமாகப் பயன்படுத்தி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை நீக்கியது, எம்.பி.ஏ உள்ளிட்ட சில பாடப்பிரிவுகளுக்கான கல்விக்கட்டணம் அதிகரிப்பு, என்.டி.ஏ அமைப்பால் 2019-20-ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வந்த ஜே.என்.யூ ஆன்லைன் நுழைவுத்தேர்வு, நூலகத்துக்கான நிதி குறைப்பு, 24 மணிநேரம் இயங்கிவந்த கடைகள் மூடல், சிற்றுண்டி நிலையங்களை மூடிவிட்டு கார்ப்பரேட் உணவு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பது, மதம்சார் விழாக்களின் வரவு, பழைய கட்டடங்களுக்கான மறுசீரமைப்பின்மை போன்றவை மாணவர் சங்கத் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

JNU Student Election
JNU Student Election

மேலும், பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களின் போராட்டங்களை மட்டுப்படுத்தப்படுத்தல், மாணவர் சேர்க்கையில் பெரும்பான்மையான இடங்களைக் குறைத்தல், மாணவர்கள் மீதான தாக்குதல், பல்கலைக்கழக நிர்வாகம் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டியவை, நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை, உயர்கல்வி காவிமயமாவதைத் தடுத்தல், வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர் உள்ளிட்ட சிறப்புநிலைப் பேராசிரியர்களிடம் தன்விவரக்குறிப்பு கேட்டல் போன்றவை இந்த மாணவர் சங்கத் தேர்தலில் பேசுபொருளாக இருக்கும்.

`நிர்வாகத்தினர் ஆளும் அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றனர்’ என்பது இடதுசாரிகள் வைக்கும் வலுவான குற்றச்சாட்டு. நாடுமுழுதும் காந்தியடிகளின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வரும் சூழலில், விவேகானந்தரின் சிலையை நிர்வாகக் கட்டடத்துக்கு எதிரே நிறுவியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜவஹர்லால் நேருவின் கனவு பல்கலைக்கழகமான ஜே.என்.யூ-வின் சுதந்திரவெளியும் குறைந்துவருகிறது. ஜே.ன்.யூ-வை ஐ.ஐ.டி போன்ற கட்டமைக்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக இல்லாத வருகைப்பதிவு கடந்த ஐந்தாண்டுகளுக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டது.

JNU Student Election
JNU Student Election

தேர்தல் களத்தில்…

இடதுசாரிகளின் கருப்பை என வர்ணிக்கப்படுவது, ஜே.என்.யூ. கடந்த ஐந்தாண்டுகளாக மத்தியில் பா.ஜ.க ஆட்சி நடைபெறுவதால், பல்கலைக்கழக வளாகத்துள் வலதுசாரிகளுக்கு ஆதரவு மனப்பாங்கு கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், முன்பு எதிரெதிர் துருவங்களாகச் செயல்பட்டுவந்த இடதுசாரி மாணவ அமைப்புகள் அனைத்தும் கடந்த 2018-19-ம் ஆண்டுமுதல் ஓரணியாகத் தேர்தலைச் சந்தித்து வருகின்றன.

தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர் என மாணவர் சங்கத்தின் முதன்மையான நிர்வாகப் பொறுப்புகள் நான்கு. இதில், இடதுசாரிக் கூட்டணியும் ஏ.பி.வி.பி-யும் மட்டுமே நான்கு இடங்களுக்கும் களம் காண்கின்றன. கடந்த ஆண்டுகளில் நான்கு பதவிகளுக்கும் போட்டியிட்ட காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்.எஸ்.யூ.ஐ, தலைவர் பதவிக்கு மட்டுமே போட்டியிடுகிறது. இதேபோல், பாப்சா அமைப்பு, தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு மட்டுமே போட்டியிடுகிறது.

JNU Student Election
JNU Student Election

புலங்களுக்கான பிரதிநிதிகள் தேர்தலும் ஒருசேர நடக்கிறது. பல்கலைக்கழகத்தின் மொத்தம் 14 புலங்களிலிருந்து 42(+1) பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். இதில், அதிகபட்சமாக மொழிகள் புலத்திலிருந்தும், சமூக அறிவியல் புலத்திலிருந்தும் ஆறு பிரதிநிதிகள் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.

இந்த ஆண்டு தலைவர் பதவிக்கு இடதுசாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டணி [AISA - DSF - SFI - AISF] சார்பில் ஐய்ஸ் கோஷ், ஏ.பி.வி.பி [ABVP] சார்பில் ஜங்கிட், பாப்சா [BAPSA] சார்பில் ஜிதேந்தர் சுனா, என்.எஸ்.யூ.ஐ [NSUI] சார்பில் பிரசாந்த் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நான்கு போட்டியாளர்களிடையே போட்டி நிலவுகிறது.

விவாதக்களம்:

புலங்கள் வாரியாகப் பொதுக்குழுக் கூட்டம் நிறைவடைந்த சூழலில், பல்கலைக்கழக அளவிலான பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில்கூட இல்லாத ஒரு நடைமுறை ஜே.என்.யூ மாணவர் சங்கத் தேர்தலில் இருக்கிறது. தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் மாணவர்கள் ஒரே மேடையில் விவாதம் செய்தாக வேண்டும். இந்த நிலையில், இன்று (4-ம் தேதி) இரவு விடியவிடிய பல்கலைக்கழக மாணவர்கள் முன்னிலையில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் மாணவர்களின் விவாதம் நடைபெறவுள்ளது. அமைப்புரீதியாக, கொள்கைரீதியாக மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். எப்படிப் பதில் சொல்கிறார், அவரது சித்தாந்தம் என்ன? கொள்கை, திறன், இலக்கு என்ன என்பதை அவர்கள் ஒரே மேடையில் விவாதிப்பதன் வழியாக அடையாளங்காண உதவும்.

தேர்தல் பணிக்குழு

லிங்டோ கமிட்டி பரிந்துரைத்த நெறிமுறைகளின்படியே இந்தியக் கல்வி நிறுவனங்களில் மாணவர் தேர்தல் நடத்தப்படுகிறது. ஜே.என்.யூ-விலும் அந்த நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றமாணவர் சங்கத் தேர்தலை நிகழ்த்துவது பல்கலைக்கழக மாணவர்களே. புலத்திற்கான பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் மாணவர்கள் (ஐவர்) மீது, எவ்வித எதிர்ப்பும் எழாத சூழலில், அவர்கள் தேர்தல் பணிக்குழுவில் இணைவார்கள். ஊதியமற்ற இப்பொறுப்பை தன்முனைப்பின் காரணமாக மாணவர்கள் மேற்கொள்கின்றனர். இத்தேர்தல் பணிக்குழுவே தலைவர் பதவி வேட்பாளர்களுக்கான விவாதத்தை நடத்துவது, தேர்தலை நடத்துவது, வாக்குப் பெட்டிகளைச் சேகரிப்பது, பாதுகாப்பது, வாக்குகளை எண்ணுவதென யாவற்றையும் மேற்கொள்ளும்.

JNU Student Election
JNU Student Election

மாணவருக்கு உள்ள வாக்குகள் :

நிர்வாகப் பொறுப்புகளான தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், இணைச்செயலாளர் ஆகிய பதவிகளுக்கும் தலா ஒரு வாக்கு செலுத்த வேண்டும். தவிர்த்து, மாணவர் பயிலும் புலத்திற்கென, அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் எண்ணிக்கையைப் பொறுத்து, செலுத்தும் வாக்குகளின் எண்ணிக்கை மாறுபடும். உதாரணமாக, மொழிப்புலத்தில் 6 பேர் பிரதிநிதிகளாகத் தேர்வுறுவர். எனில், மொழிப்புலத்தில் பயிலும் மாணவருக்கு 4+6 = 10 வாக்குகள் உண்டு.

தேர்தல் முறை

மாணவர் சங்கத் தேர்தல் செப்டம்பர் 6–ம் தேதி நடக்கிறது. அன்று பல்கலைக்கழகம் விடுமுறை. அன்றைய தினம்தான் பயிலும் புலத்தில் தமக்குரிய வாக்குச்சாவடியில் மாணவர்கள் வாக்கு செலுத்த வேண்டும். வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படுகிறது. இங்கு புலத்திற்கான பிரதிநிதிகளுக்காக ஒருபெட்டியும், நிர்வாகப் பதவிகளுக்காக ஒரு பெட்டியும் வைக்கப்பட்டிருக்கும். ஒரு நபருக்கு இரு வாக்குச்சீட்டுகள் தரப்படும். வாக்குச்சீட்டில் தாம் விரும்பும் நபருக்கு முத்திரை குத்தி அதைத் தனித்தனியே வாக்குப்பெட்டியில் செலுத்த வேண்டும்.

JNU
JNU

வாக்கு எண்ணிக்கை :

தேர்தல் நிறைவுற்ற அன்று இரவு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலாவதாகப் புலத்தின் பிரதிநிதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி நடக்கும். ஆண்டுதோறும் வாக்கு எண்ணும் பணி பன்னாட்டுப் படிப்புகள் புலத்திலேயே நிகழும். செப்டம்பர் 8–ம் தேதி காலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகிவிடும்.

கடந்த ஆண்டு குளறுபடி

கடந்த ஆண்டு வாக்கு எண்ணிக்கைக்கு பூத் ஏஜென்டுகள் அழைக்கப்பட்டனர். தேர்தல் ஆணைய விதிகளின்படி, மூன்று முறை அழைத்தும் ஏ.பி.வி.பி சார்பில் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து தேவையான எண்ணிக்கையில் பூத் ஏஜென்டுகள் வந்தபின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதற்கிடையில் ``முறையாக அழைக்கவில்லை, நாங்கள் வராமல் தொடங்கியிருக்கக்கூடாது" என ஏ.பி.வி.பி அமைப்பினர் வாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் SIS-1 வளாகத்தில் தாக்குதலும் நடத்தப்பட்டிருக்கிறது.

JNU Student Election
JNU Student Election

இதனால் மாணவர் சங்கத் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தியது. மாலை வரை வாக்கு எண்ணிக்கை நடக்கவில்லை. பல்கலைக்கழக முகப்பில் CRPF வீரர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஜே.என்.யூ வரலாற்றில் கடந்த ஆண்டே இப்படிச் சில அசம்பாவிதங்களோடு தேர்தல் நடந்தேறியுள்ளது. இதற்கு முன்னாள் மாணவர்கள் பலர் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அதனால், இந்த ஆண்டு தேர்தல் பணிக்குழு இவை யாவற்றையும் கவனத்தில்கொண்டு, செயலாற்ற வேண்டியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு... நிர்வாகக் குளறுபடிகள்... தடுமாறும் தமிழ்ப் பல்கலைக்கழகம்? #DoubtOfCommonMan