Published:Updated:

`ஸ்கூல்ல தினம்தினம் கபடி ஆடலாம்!’ - பழங்குடியின மாணவர்களை பள்ளியில் சேர்த்த சபாஷ் அதிகாரிகள்

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பள்ளி செல்லா 51 பழங்குடி மாணவ மாணவிகளை கபடி விளையாட்டில் இருக்கும் ஆர்வத்தைப் பயன்படுத்தி முதல் முறையாகப் பள்ளிக்கு வரவழைத்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றுள்ளது.

கபடி விளையாடும் பழங்குடி மாணவிகள்
கபடி விளையாடும் பழங்குடி மாணவிகள் ( கே.அருண் )

மலை மாவட்டமான நீலகிரியில் 6 வகை பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கூடலூர் பந்தலூர் பகுதிகளில் பணியர், இருளர், குறும்பர், காட்டு நாயக்கர் ஆகிய பழங்குடி மக்கள் அதிகம் உள்ளனர். கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள பழங்குடி மக்கள் இன்றளவும் அடிப்படை வசதிகள் போதிய அளவு கிடைக்காமல் வறுமை நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பணியர் பழங்குடி இன மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.

கபடி போட்டியில் வென்று பரிசு பெரும் பழங்குடி மாணவிகள்
கபடி போட்டியில் வென்று பரிசு பெரும் பழங்குடி மாணவிகள்

கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ள பணியர் சமூகத்தில் பள்ளிக் கல்வியை முழுமையாகப் படித்தவர்களே மிகக் குறைவு. கடந்த சில ஆண்டுகளாகப் பணியர் இன மாணவர்களை பள்ளியில் சேர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக கபடி விளையாட்டின் மீது ஆர்வத்தை தூண்டி 51 பழங்குடி மாணவர்களைப் பள்ளியில் சேர்த்து வெற்றி கண்டுள்ளனர். கூடலூர் ஒடக்கொல்லி, கோழிகொல்லி ஆகிய பகுதிகளில் இதுவரை பள்ளிக்கே செல்லாத மற்றும் இடைநிற்றல் மாணவர்கள் அதிகம் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்த மாணவ, மாணவிகளை அவர்களின் போக்கிலேயே சென்று பள்ளயில் சேர்த்தனர்.

கபடி போட்டியில் வென்று பரிசு பெரும் பழங்குடி மாணவர்கள்
கபடி போட்டியில் வென்று பரிசு பெரும் பழங்குடி மாணவர்கள்

இது குறித்து கூடலூர் கோட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் கூறுகையில், ``பணியர் பழங்குடி மாணவ மாணவிகளை பள்ளயில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டோம். பல பெண்கள் பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லை. அவர்களிடம் பேசியதில் பலருக்கும் கபடி மிக பிடித்த விளையாட்டாக இருப்பது தெரியவந்தது. பள்ளிக்கு வந்தால் தினமும் கபடி போட்டிகள் நடத்தப்படும் மற்ற பள்ளிகளுக்கும் போட்டிகளுக்கு அழைத்துச் செல்வோம் என உறுதி அளித்தோம்.

இதை ஏற்ற மாணவிகள் பள்ளயில் சேர்ந்தனர். தற்போது 51 பழங்குடி மாணவ மாணவிகள் பள்ளியில் சேர்க்கப்பட்டு கபடி போட்டியுடன் பாடங்களையும் விரும்பி கற்கின்றனர். மாணவ மாணவிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து மற்ற பள்ளிகளுடனும் கபடி போட்டிகளையும் நடத்திவருகிறோம்” என்றார்.

பரிசுகளை வழங்கும் வருவாய் அலுவலர்
பரிசுகளை வழங்கும் வருவாய் அலுவலர்

பள்ளயில் சேர்ந்த பழங்குடி மாணவி ஒருவர் கூறுகையில், ``பள்ளியில் மற்ற மாணவ மாணவிகளைப் பார்த்தால் பயமாக இருக்கும். பள்ளிக்குச் செல்லவே பிடிக்காது. ஆனால், இப்போது எங்கள் பள்ளயில் மட்டும் அல்லாது மற்ற பள்ளி மாணவிகளுடனும் சேர்ந்து கபடி போட்டிகளில் பங்கேற்கிறோம். மிகவும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் உள்ளது” என்றார்.

கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாத பெற்றோர்கள் பள்ளிக்கு செல்லவே அச்சப்படும் பழங்குடி மாணவ மாணவிகளை அவர்களின் போக்கில் கையாண்டு பள்ளிக்கு வரவழைத்த சம்பவம் கல்வியாளர்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.