Published:Updated:

``கல்வியறிவு இல்லாதவர்கள் கல்விக் கொள்கையை வகுக்கக்கூடாது!'' - கனிமொழி

கல்வி பாதுகாப்பு தேசியக் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த சனிக்கிழமை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில் நடைபெற்றது. இதற்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார்.

கனிமொழி
கனிமொழி

மத்திய அரசு அறிமுகப்படுத்த இருக்கும் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாடு முழுவதும் பல விவாதங்கள் எழுந்துள்ளன. ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வெளியாகி வருகின்றன. புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிவித்த நாளிலிருந்தே, தமிழகத்தில் அதற்கு பலத்த எதிர்ப்பு இருந்து வருகிறது. `மும்மொழிக் கொள்கை' என்கிற பெயரில் இந்தித் திணிப்பு தொடங்கி புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ள பல்வேறு விஷயங்களுக்கும் தமிழகத்தில் உள்ள கல்வியாளர்களும், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கல்வி பாதுகாப்பு தேசியக் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த சனிக்கிழமை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில் நடைபெற்றது.

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் கலந்துகொண்டன.

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள், இயக்கங்களின் தலைவர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தில் கலந்துகொண்டு கனிமொழி எம்.பி பேசியதாவது,

''புதிய கல்விக் கொள்கையை தி.மு.க தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. கழகத்தின் தலைவர் தளபதி அவர்கள் புதிய கல்விக் கொள்கையை பற்றி ஆராய ஒரு குழுவை நியமித்தார். அந்தக் குழு ஓர் அறிக்கை தயார் செய்தது. அந்த அறிக்கையை கல்வித் துறை அமைச்சரிடம் சென்று கொடுத்தோம். எம்.பிக்கள் அனைவரும் நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதுகுறித்த எந்த ஒரு பதிலையும் அரசுத் தரப்பிலிருந்து இன்னும் சொல்லவில்லை. எந்தவித உறுதிமொழியையும் தரவில்லை.

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

அக்காலக் கல்விமுறை, அரசாங்கத்திற்குப் பணிபுரிய கிளார்க்குகளை (clerks) உருவாக்கக்கூடிய கல்வித்திட்டமாக மட்டுமே இருந்தது. அதையே நாம் இக்காலத்திலும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. தற்போது இருக்கக்கூடிய கல்விமுறையிலிருந்து இரு புதிய கல்வி முறை அவசியம் என்பது நாம் எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான். கல்வியிலே, பாடத்திட்டத்திலே, பாடங்களை பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கக் கூடிய முறையிலே மாற்றங்கள் அவசியம் என்பதில் யாருக்கும் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது.

கல்வியில் மாற்றம் என்பது, எதிர்காலத்தை முன்னிறுத்துவதாக இருக்கவேண்டும். மாணவர்களின் நலனை மையப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். பல முன்னேறிய நாடுகளில், குழந்தைகளை மையமாக வைத்து அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது, அவர்களுக்கு என்ன தேவை, அவர்கள் எந்த இடத்திலிருந்து வருகிறார்கள், அவர்களின் பின்புலம் என்ன, எதிர்காலத்தில் அவர்களுடைய திட்டங்கள் என்னவாக இருக்கின்றன என்பதை புரிந்துகொண்டுதான் பாடத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

கனிமொழி
கனிமொழி
இந்த மத்திய அரசாங்கம் வாட்ச்மேன் வேலை பார்த்து, யார் மருத்துவக்கல்லூரிக்குள்ள வரலாம் வரக்கூடாது என்பதை முடிவு செய்யும் வேலையைச் செய்துவருகிறது.
கனிமொழி, எம்.பி.

ஆனால், அரசு தற்போது வகுத்திருக்கும் கல்விக்கொள்கையில், அப்படியான விஷயங்கள் ஒன்றுமே இல்லை. மாற்றுத்திறனாளிகளின் இருப்பைக் கூட ஏற்றுக்கொள்ளாத, புரிந்துகொள்ளாத, தன்னுள் உள்ளடக்காத ஒரு கல்விக்கொள்கையாக இருக்கிறது. பெண் கல்வியைப் பற்றி புதிய கல்விக் கொள்கையில் ஏதாவது சொல்லியிருக்கிறார்களா என்றால், அதுவும் ஒன்றும் இல்லை. எல்லோரையும் உள்ளடக்கி உருவாக்கப்படவேண்டிய கல்விக்கொள்கை, அனைவரையும் கல்வி என்பதிலிருந்து வெளியே தள்ளுவதற்கான கொள்கையாக இருக்கிறது. இவர்கள் அப்படி திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள்.

எல்லோரும் படிக்க வேண்டும், அரசாங்கத் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்... என்பதுதான் அரசு முன்னெடுக்க வேண்டிய விஷயம். செயல்பாட்டு முறையும் கூட. ஆனால், இந்த அரசாங்கம், யார் மருத்துவக் கல்லூரிக்குள் வரலாம், யார் வரக்கூடாது என்பதை முடிவு செய்யும் வாட்ச்மேன் வேலை பார்த்து வருகிறது.

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
`தலைமைக்குக் கடிதம்; கூட்டங்களுக்குத் தடை!' -அரசகுமாருக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழக பா.ஜ.க

எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகுதான் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருக்கும் கல்வியைக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறோம். ஆனால், இது அனைத்தையும் உடைத்து நாசம் செய்வதற்கான, ஒரு கல்வித் திட்டத்தை இவர்கள் கொண்டு வருகிறார்கள். இன்று எவ்வளவோ மாற்றங்களை இந்தச் சமூகம் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், அவர்களின் மூதாதையர்கள் என்ன சட்டத்தைச் சொல்லிக் கொடுத்தார்களோ, அதையே மீண்டும் கொண்டு வர நினைக்கிறார்கள்.

''அவர்களுடைய தர்மம் என்ன....? வர்ணாசிரம தர்மம், ஜாதியை முன்னிறுத்தக் கூடிய தர்மம். ஒரு காலகட்டத்தில், தெருவில் நடந்து போனால் கூட... ஒரு காலகட்டம் என்று கூட சொல்லமுடியாது. இன்றும் நாம் அதைச் சந்திக்கக்கூடிய மிகக்கொடூரமான காலகட்டத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெண்கள் படிக்கக்கூடாது என்று சொன்ன அதே தர்மத்தைத்தானே இந்தக் கல்விக் கொள்கை முன்னெடுக்கிறது.

கனிமொழி
கனிமொழி

யாரெல்லாம் படிக்கலாம், யாரெல்லாம் படிக்கக் கூடாது, யாருக்கு இந்தச் சமூகத்தில் அந்தஸ்து கௌரவத்துடன் இருக்க வேண்டும் என்று ஒருகாலத்தில் அவர்கள் தீர்மானித்தார்கள். அதே நிலைமையை மீண்டும் இந்த நாட்டிலே கொண்டுவரவேண்டும் என நினைக்கிறார்கள்.

அதை நிறைவேற்றுவதற்காக புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒரு பாடத் திட்டத்தை இவர்கள் கொண்டு வருகிறார்கள். மத்திய அரசு, அங்கு இருக்கக்கூடிய பிரதமர்தான் இந்தக் கல்விக் கழகத்தின் தலைவராக இருப்பார் என்கிறது. இவர் முதலமைச்சராக இருந்த குஜராத்தில்... பல ஆண்டுகளாக ஆட்சி செய்த குஜராத்தில், சென்ற ஆண்டு 70 சதவிகிதத்தினருக்கும் மேல் அரசாங்கப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை.

இப்படிப்பட்ட ஆட்சியை நடத்தும் இவர்களுக்கு, புதிய கல்விக் கொள்கை பற்றி எழுதுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று நான் கேட்கிறேன். உங்களுக்குப் பொருளாதாரம் புரியவில்லை...கல்வி என்றால் என்னவென்று புரியவில்லை.. எதிர்காலம் என்றால்..அதற்கான திட்டங்கள் என்றால்...வளர்ச்சி என்றால்..அறிவியல் என்றால்... எதைப் பற்றியும் உங்களுக்கு அக்கறை இல்லை... அதைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லை.

கனிமொழி
கனிமொழி

நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பல விஷயங்களை நம்மால் நிறுத்தமுடியாமல் போவதற்கு, இவர்களுக்கு பாராளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மைதான் காரணம். அதனால்தான் இவர்கள் நினைப்பதையெல்லாம் சாதிக்கக்கூடிய நிலையிலேயே இந்த நாடு நின்று கொண்டிருக்கிறது. ஆனால், இந்த கல்விக் கொள்கையை நாம் தடுக்காவிட்டால் இந்த நாடு, நிச்சயமாக நாம் நம்பக்கூடிய நாடாக... நாம் எந்த நாட்டை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த நாடாக இருக்காது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இங்கே, யாரும் சுயமரியாதையோடு வாழ முடியாது. வாய்ப்புகள் என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்றாக உருவாக்கி வைத்து இருக்கிறோமே, அந்த அடிப்படை மறுதலிக்கப்படும். இந்தப் புதிய கல்விக் கொள்கை என்பது நிச்சயமாக புதிய கல்விக்கொள்கை இல்லை என்பதை நாம் மீண்டும் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் நம் மீது வந்து திணிக்க நினைக்கக்கூடியது அத்தனை பழைமைகளையும்தான்.

”மழை வெள்ளத்தில் மிதக்கும்  தூத்துக்குடி!”- களத்தில் இறங்கிய கனிமொழி

பாராளுமன்றத்தில் ஒரு பி.ஜே.பி. எம். பி எழுந்து... மக்கள் மனிதர்கள், ரிஷிகளிடமிருந்து வந்தவர்களென்று பேசுகிறார். ஆனால், குரங்கிலிருந்து வந்தவர்களென்று அறிவியல் கூறுகிறது. இப்படி அடிப்படை கல்வியறிவு கூட இல்லாதவர்கள், கல்விக் கொள்கையை வகுக்கக்கூடாது. அந்தத் தகுதி அவர்களுக்குக் கிடையாது. அதனால, மத்திய அரசாங்கம் கொண்டுவரக்கூடிய கல்விக் கொள்கையை நாம் எப்பாடுபட்டாவது எதிர்க்க வேண்டும், தடுத்து நிறுத்த வேண்டும். எவ்வளவு விலை கொடுத்தேனும் அதைச் செய்யவேண்டும்! ஏனென்றால் இதை நாம் செய்ய அனுமதித்துவிட்டோம் என்றால் அதற்குப் பிறகு நாம் இந்த மண்ணிலே தலைநிமிர்ந்து சுயமரியாதையோடு வாழமுடியாது. நம் பிள்ளைகள் அவர்களுக்கு அடிமையாகத்தான் வாழ நேரிடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்." எனக் காட்டமாகப் பேசி முடித்தார் கனிமொழி.