Published:Updated:

சென்னை ஐஐடி: `ரோஹித் வெமுலாவை நாம் மறந்துவிடக் கூடாது!' -மத்திய அமைச்சருக்கு ஜோதிமணி எம்.பி கடிதம்

ஜோதிமணி
ஜோதிமணி ( நா.ராஜமுருகன் )

`ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சாதிரீதியான பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறை குறித்த புகார் வருவது இது முதன்முறை அல்ல. இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மேற்படிப்பை இடையிலேயே விட்டுச் செல்வதும், தற்கொலை செய்வதும் ஏற்கெனவே நடைபெற்றிருக்கின்றன' - ஜோதிமணி.

சென்னை ஐஐடி-யில் சாதிரீதியான பாகுபாடு இருப்பதாகக் கூறி, அதன் காரணமாக அங்கு பணியாற்றிய பேராசிரியர் விபின் பதவி விலகியிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தநிலையில், உயர்கல்வி நிறுவனங்களில் இது போன்று நடக்கும் சாதிரீதியிலான பாகுபாடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடிதம் எழுதியுள்ளார்.

ஜோதிமணி எழுதிய கடிதம்
ஜோதிமணி எழுதிய கடிதம்
நா.ராஜமுருகன்
`அண்ணனைக் கோத்துவிட்டார்கள்!’ - கரூரில் விதிமுறைகளை மீறிக் கடைகள் திறப்பு சர்ச்சை

அந்தக் கடிதத்தில், "சாதிரீதியான பாகுபாடு காரணமாக சென்னை ஐஐடி-யில் சமூக அறிவியல்துறையில் பணிபுரிந்துவந்த முனைவர் விபின், தனது பேராசிரியர் பொறுப்பிலிருந்து பதவி விலகியிருக்கிறார் என்ற செய்தியை தங்கள் பார்வைக்கு கொண்டுவர விரும்புகிறேன். பதவி விலகிய பின் அவர் அனுப்பிய மின்னஞ்சலில் பல்வேறு தருணங்களில் தான் சாதிரீதியான பாகுபாட்டுக்கு ஆளானதாகக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், சென்னை ஐஐடி-யில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து சாதிரீதியான பாகுபாட்டுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சாதிரீதியான பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறை குறித்த புகார் வருவது இது முதன்முறை அல்ல.

ஜோதிமணி
ஜோதிமணி
நா.ராஜமுருகன்

இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை இடையிலேயே விட்டுச் செல்வதும், தற்கொலை செய்வதும் ஏற்கெனவே நடைபெற்றிருக்கின்றன. ரோஹித் வெமுலாவை நாம் மறக்கக் கூடாது. தற்போது வெளிப்பட்டிருக்கும் புகார்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றின்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால், அது நமது அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் சமத்துவம் மற்றும் சமூகநீதியைச் சீர்குலைக்கும். எனவே, கீழ்க்காணும் நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

1) சென்னை ஐஐடி-யில் சாதிரீதியான பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறை குறித்து விசாரிக்க எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஓ.பி.சி ஆணைய உறுப்பினர்களைக்கொண்ட ஓர் உயர்மட்டக்குழுவை அமைத்து உடனடியாக விசாரிக்க வேண்டும்.

2) எதிர்வரும் காலங்களில் இத்தகைய புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலக்குழுக்களை அமைக்க வேண்டும். இந்தக் குழுவில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையின வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் அங்கம்வகிக்க வேண்டும்.

3) அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு சரிவரப் பின்பற்றப்பட வேண்டும்.

4) ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் பணியிடங்களில் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி நிரப்ப ஒரு செயல்திட்டம் உருவாக்கப்பட்டு, குறித்த நேரத்துக்குள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஜோதிமணி எழுதிய கடிதம்
ஜோதிமணி எழுதிய கடிதம்
நா.ராஜமுருகன்

மேனாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை உலகத்தில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களாக உருவாக்க வேண்டும் என்ற கனவோடு அமைத்தார். ஆனால், அத்தகைய நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் பாகுபாட்டுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாவது வேதனை அளிக்கிறது. எனவே, முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்னையை கல்வி அமைச்சகம் கவனத்தில் எடுத்துக்கொண்டு, மாணவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு