Published:Updated:

கரூர்: QR கோடு ஐடி, நவீன கற்பித்தல் முறை... மத்திய அரசு விருது பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரின் சாதனை!

மாணவர்களுடன் மனோகரன்
மாணவர்களுடன் மனோகரன் ( நா.ராஜமுருகன் )

QR கோடு உருவாக்கி ஒவ்வொரு மாணவருக்கும் அடையாள அட்டை வழங்கியதுடன், அதன் உதவியுடன் ஒவ்வொரு மாணவரின் செயல்பாடுகள் குறித்து பெற்றோரும், ஆசிரியர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தகவல்களை இடம்பெற செய்துள்ளார்.

QR கோடுடன் மாணவர்களுக்கு ஐடி கார்டு, நவீன முறையில் கற்பித்தல் முறையை செயல்படுத்துதல் என்று அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பாக கல்வி போதித்ததற்காக, கரூர் மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் மத்திய அரசு விருதுக்கு தேர்வாகியிருப்பது, கல்வியாளர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றிருக்கிறது.
பாராட்டும் முதன்மைக் கல்வி அலுவலர்
பாராட்டும் முதன்மைக் கல்வி அலுவலர்
நா.ராஜமுருகன்
வீட்டுக்கு ஒரு மரம், சீர்செய்யப்படும் நீர்நிலைகள்; வறண்ட ஊராட்சியை பசுமையாக்கும் ஊராட்சிமன்றத் தலைவி

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் NCERT எனும் நிறுவனத்தின் சார்பில் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்றலை ஊக்கப்படுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப நல்லாசிரியர் எனும் விருதினை வழங்கிவருகிறது. அந்த வகையில், கடந்த 2018-19-ம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப சிறந்த ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விருதுக்கு தேர்வான தமிழகத்தைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்களில், கரூர் மாவட்டம், வெள்ளியணையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மனோகர் சுப்பிரமணியும் ஒருவர்.

இவர் QR கோடு உருவாக்கி ஒவ்வொரு மாணவருக்கும் அடையாள அட்டை வழங்கியதுடன், அதன் உதவியுடன் ஒவ்வொரு மாணவரின் செயல்பாடுகள் குறித்து பெற்றோரும், ஆசிரியர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தகவல்களை இடம்பெற செய்துள்ளார்.

 மரக்கன்று வைக்கும் மாணவர்
மரக்கன்று வைக்கும் மாணவர்
நா.ராஜமுருகன்

அதோடு, ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் QR கோடை ஸ்கேன் செய்து வீட்டுப்பாடங்களை செய்து முடிக்கும் புதிய முறையை ஏற்படுத்தியுள்ளார். குக்கிராமத்தில் உள்ள சாதாரண எளிய பிள்ளைகளும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்பங்களை பழகும் வகையில், அவர்களை மனோகரன் தயார்படுத்தினார். இதற்காக, கடந்த 2018-ம் ஆண்டு மாநில அளவிலான சிறந்த ஆசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, தற்போது மத்திய அரசின் 2018-19 ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதுக்கு தேர்வான மனோகரனுக்கு, கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் கல்வி துறை அதிகாரிகள், சக ஆசிரியர்கள் எனப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, ஆசிரியர் மனோகரன் சுப்ரமணியனிடம் பேசினோம்.

"எங்கள் பள்ளி மாணவர்களை எல்லா வகையிலும் திறம்பட மாற்றி வருகிறோம். அதற்கு, தலைமை ஆசிரியர் தர்மலிங்கமும், சக ஆசிரியர்களும் பேருதவி செய்தார்கள். மாணவர்களை வைத்து பள்ளி வளாகத்தில் இயற்கை விவசாயம் செய்ய வைத்தோம். அதோடு, மாணவர்களை வைத்து மரக்கன்றுகளை நட வைத்து, அதற்கு அவர்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களைச் சூட்டினோம். ஸ்கவுட்டை எங்கள் பள்ளியில் திறம்பட நடத்தி வருகிறோம். இந்த நிலையில்தான், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கல்வித்துறையோடு சேர்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்தது. அதில் ஆர்வமுடன் கலந்துகொண்டு, பல தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அதன்மூலம், மாணவர்களுக்கு தொழில்நுட்பங்கள் மூலம் கல்வியை எளிமையாகக் கற்பிக்கும் வழிவகையைச் செய்தேன். விடியோக்கள் மூலம் பாடம் நடத்தினோம். அந்த வகையில், QR கோட் முறையை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஏற்படுத்தியதன், விளைவாக மாணவர்களின் வீட்டுப் பாடங்களை பெற்றோரும், பள்ளி ஆசிரியர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் நவீனபடுத்தினோம். பள்ளியில் நடப்பாண்டில் கடந்த இரண்டு நாள்களில் சுமார் 40 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.

மனோகரன்
மனோகரன்
நா.ராஜமுருகன்

அவர்களில் 15 பேர் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைக் கவர்ந்திழுக்கும் அரசு பள்ளியாக எங்கள் பள்ளி திகழ்கிறது. இந்தத் தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் விருது எங்கள் பள்ளி செயல்பாடுகளுக்கு கிடைத்த ஓர் அங்கீகாரம். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இணையான இந்த விருதை, இந்திய குடியரசுத் தலைவரின் கரங்களால் பெற இருக்கிறேன். விருது வழங்குவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு கனவு உண்டு. எனக்கும் அந்தக் கனவு இருந்தது. அதற்காக, சிரமம் பார்க்காமல் முழு கவனத்துடன் மாணவர்களுக்கு அறிவியல் செயல்பாடுகளை ஊக்குவித்தேன். இதனால் மாணவர்களுக்கு சுயமாக கற்றுக்கொள்ளுதல் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்காக, கலாசார கழகம் என ஒரு தனிப்பிரிவு பள்ளிகளில் செயல்படுகிறது. இதற்காகவும் ஏற்கனவே தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது. அதேபோல, அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக தேசிய அளவிலான சில்வர் விருதினையும் எங்கள் பள்ளி பெற்றுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள தேசிய தகவல் தொழில்நுட்ப சிறந்த ஆசிரியர் விருது எனக்கும், எங்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது" என்றார் மகிழ்ச்சியாக!

அடுத்த கட்டுரைக்கு