Published:Updated:

அரசு வழங்கிய தரமற்ற மாஸ்க்... மாட்றதுக்கு கயிறில்ல, கவர்லகூட கொடுக்கல!

மாஸ்க்
மாஸ்க்

'தேர்வு நிச்சயம் நடத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டதால், மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. அதோடு முகக்கவசமும் வழங்கப்பட்டது. தனியார் பள்ளிகள் இரண்டு முகக்கவசங்கள் வழங்கின.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டதாக தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துவிட்டார். கூடுதல் போனஸாக, ப்ளஸ் ஒன் தேர்வுகளையும் ரத்துசெய்து மாணவர்கள் அனைவரையும் ஆல் பாஸாக்கிவிட்டார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தைப் பொறுத்தவரை சுமார் 9.5 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வெழுதக் காத்திருந்தனர். சுமார் 8 லட்சம் மாணவர்கள் ப்ளஸ் ஒன் தேர்வெழுதவிருந்தனர்.

பொதுத்தேர்வு நடைபெறும் நேரத்தில், தமிழகத்தில் அதிக அளவில் நோய்ப் பரவல் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்திருந்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலின் தீவிரம் அதிகரித்துவருவதாலும், நோயைக் கட்டுப்படுத்த இயலாததாலும் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன.

இந்த அறிவிப்புக்கு முன்னதாக, 'தேர்வு நிச்சயம் நடத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டதால், மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. அதோடு முகக்கவசமும் வழங்கப்பட்டது. தனியார் பள்ளிகள் இரண்டு முகக்கவசங்கள் வழங்கின. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு முகக்கவசம் வழங்கப்பட்டது. 'அந்த முகக்கவசம் தரமில்லாத மெலிதான துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு வழங்கிய முகக்கவசத்தின் தரம் மிகவும் மோசமாக இருந்தது' என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இருந்திருந்தால் மாணவர்களுக்கு வாங்கிய முகக்கவசங்கள் தரமானவையாக இருந்திருக்கும்.
அறப்போர் இயக்கம் ஜெயராமன்
``கிண்டர் கார்டன் குழந்தைகள் இந்த வருடம் வீட்டிலேயே படிக்கட்டும்!'' #SchoolReopen #SurveyResult

'மாஸ்க்கை மாட்டறதுக்கு கயிறில்ல', 'ஒரு கவருக்குள்ளகூட மாஸ்க்கை போட்டுக் கொடுக்கல' என்றும், 'அந்த முகக்கவசத்தைப் போட்டு தேர்வு எழுதியிருந்தால் வராத நோயும் வந்திருக்கும்' என்றும் பெற்றோர்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன.

"தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் ஒன் தேர்வுகளை சுமார் 17 லட்சம் பேர் எழுதுகிறார்கள் என்றால், அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பி பள்ளிக்கு வருவதற்குள் தனிமனித இடைவெளி கேள்விக்குரியதாகியிருக்கும். பொதுத்தேர்வு/முழுஆண்டுத் தேர்வு எழுதும் பல மாணவர்களைப் பெற்றோர் கொண்டுவந்து பள்ளியில் விட்டுச்செல்வார்கள்.

பள்ளி வாகனத்திலேயே அனுப்பினால்கூட அதில் ஏற்றிவிடுவதற்கு பெற்றோர் வருவதுண்டு. அப்படியிருக்கும் பட்சத்தில், 17 லட்சம் மாணவர்களுடன் சுமார் 10 லட்சம் பெற்றோர் ஒரே நேரத்தில் வெளியே புழங்கியிருப்பார்கள். இது நோய்ப் பரவலுக்கு மேலும் சாதகமான வாய்ப்பைத்தான் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும்" என்கிறார் சமூக செயற்பாட்டாளர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.

Dr.Shanthi Ravindranath
Dr.Shanthi Ravindranath

தேர்வுக் கூடத்துக்குள் நுழைந்த பிறகு இன்னும் பல பிரச்னைகள் ஏற்பட்டிருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. தேர்வெழுதும்போது, அரசு சார்பில் விநியோகிக்கப்பட்ட தரமில்லாத முகக்கவசத்தைப் போட்டுக்கொண்டு தேர்வெழுதியிருந்தால் என்னென்ன பிரச்னைகள் ஏற்பட்டிருக்கும் என்று விளக்குகிறார், மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.

"கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 6 அடி தூரம் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. மேலும் மேஜை, நாற்காலி போன்ற பொருள்களிலிருந்து கொரோனா வைரஸ் பரவுவதைவிட மனிதனிடமிருந்து மனிதனுக்குத்தான் எளிதில் பரவுகிறது, அதிகமாகப் பரவுகிறது.

அப்படியிருக்கும்போது, தேர்வுக்கூடமான பள்ளிக்கூட அறைகளில் 6 அடி தூரம் தள்ளி உட்காருவது சாத்தியமே இல்லை. மாணவர்கள் அருகருகே உட்கார்ந்து, இதுபோன்ற தரமற்ற முகக்கவசத்தையும் பயன்படுத்தினால், நோய்ப் பரவல் அதிகரிக்க வாய்ப்பு அதிகமாகியிருக்கும்" என்கிறார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முகக்கவசம்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முகக்கவசம்
இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் A3i கொரோனா வைரஸ்... தமிழகத்தின் நிலை என்னவாகும்? #ExpertOpinion

அரசு, முகக்கவசத்தைக் கொள்முதல் செய்து விநியோகித்ததிலும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா பரவுவதற்கு முன்பாக அரசு கொள்முதல் செய்த சாதாரண முகக்கவசத்தின் விலை வெறும் ரூ.3. கொரோனா பரவலுக்குப் பிறகு அதே முகக்கவசத்தை ரூ.17-க்கு கொள்முதல் செய்கிறது என்று கூறப்படுகிறது.

கொரோனா போன்ற பெருந்துயரம் நிகழ்ந்துகொண்டிருக்கும் நேரத்திலும்கூட லட்சம் மனித உயிர்களைப் பணயம் வைத்து காசு பார்க்க நினைப்பது இரக்கமற்ற கொடுஞ்செயலாகவே கருதப்படுகிறது.

அறப்போர் இயக்கம் ஜெயராமன் பேசுகையில், ''இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இருந்திருந்தால், மாணவர்களுக்கு வாங்கிய முகக்கவசங்கள் தரமானவையாக இருந்திருக்கும். யாரிடம் முகக்கவசத்தைக் கொள்முதல் செய்தனர், என்ன விலைக்கு வாங்கினார்கள், அதன் தரம் என்ன என்று அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

அப்போதுதான், கொடுக்கிற விலைக்குத் தகுந்த தரத்தில் முகக்கவசம் இருக்கிறதா என்று மக்களால், பெற்றோரால் தெரிந்துகொள்ள முடியும். கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாது.

Arapor Jayaraman
Arapor Jayaraman

அதனால், மாணவர்களுக்கு அரசாங்கம் முகக்கவசம் தரவேண்டிய சூழல் மறுபடியும் உருவாகலாம். அப்போதாவது தரமானவற்றை வழங்க வேண்டுமென்றால், இப்போது அரசு யாரிடம், எவ்வளவு விலைக்கு முகக்கவசங்களை வாங்கியது என்பதைத் தெரிவித்தே ஆக வேண்டும்'' என்கிறார்.

மாணவர்களுக்கு தரமற்ற முகக்கவசங்கள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மருத்துவமனையில் வழங்கப்படும் முகக்கவசம், கவச உடைகள் அனைத்தின் தரம் குறித்தும் கேள்வி எழுகிறது. பொதுத்தேர்வை ரத்துசெய்தது காலத்தே செய்த மிகச்சரியான செயல் என்றாலும் மாணவர்களின் உயிரோடு விளையாட நினைத்தது மனிதமற்ற கொடுஞ்செயல்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தபிறகு மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில அறிவிப்புகளையும் அப்போது வெளியிட்டது. அதில் ஒன்று தேர்வு எழுத வரும் அனைத்து மாணவர்களுக்கு மாஸ்க் அரசு செலவில் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.தேர்விற்கான ஹால் டிக்கெட் வழங்கப்படும் போதே மாஸ்க்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். அப்படி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாஸ்க்கை பார்த்துப் பெற்றோர்கள் மட்டுமல்ல பள்ளியின் ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

ஒரு மாஸ்க்கின் விலை ஏழு ரூபாய் என்று 12 லட்சம் மாஸ்க்கிற்கான தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாஸ்க்கின் உண்மையான விலை ஒரு ரூபாய் 50 காசுகள் மட்டுமே...

மிகவும் மெல்லிய துணியில் தைக்கப்பட்ட அந்த மாஸ்க் பல மாணவர்களுக்கு முகத்தில் போடக்கூட முடியாத அளவுக்கு இருந்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வழங்கப்பட்ட இந்த மாஸ்க்கில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகாரும் கிளம்பியது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுத்துறை இந்த மாஸ்க் கொள்முதலில் ஈடுபடவில்லை. புத்தகங்களை விநியோகம் செய்யும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில்தான் இந்த மாஸ்க் விநியோகம் செய்யப்பட்டது. மொத்தம் 12 லட்சம் மாஸ்க் கொள்முதல் செய்யப்பட்டது. '3 பி மாஸ்க்' என்றுதான் இதைக் கொள்முதல் செய்துள்ளார்கள். ஆனால், இதை ஒருமுறைக்கு மேல் யாரும் பயன்படுத்தமுடியாத அளவில்தான் உள்ளது. ஒரு மாஸ்க்கின் விலை ஏழு ரூபாய் என்று 12 லட்சம் மாஸ்க்கிற்கான தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாஸ்க்கின் உண்மையான விலை ஒரு ரூபாய் 50 காசுகள் மட்டுமே இருக்கும். இதை ஆர்டர் எடுத்த நிறுவனம் மேலிடத்திற்கு நெருக்கமான நிறுவனம்” என்று மட்டும் சொல்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு