Published:Updated:

கேள்வித்தாளில் இடம்பெற்ற `ஆசாத் காஷ்மீர்!' -சர்ச்சையால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள்

ஆசிரியர் ராஜ்னீஷ் ஜெய்ன்
ஆசிரியர் ராஜ்னீஷ் ஜெய்ன்

``எந்தப் புத்தகத்திலிருந்து பாடம் கற்பிக்கப்பட்டதோ அதே புத்தகத்திலிருந்து கேள்விகள் கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை" என்று ஆசிரியர்கள் சங்கம் கூறியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த சில நாள்களாக நடைபெற்றுவந்தது. இதில் சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு, கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வின் வினாத்தாளில், `ஆசாத் காஷ்மீர்' என்ற வார்த்தை இடம்பெற்றது. இதனால் மத்தியப்பிரதேச பள்ளிக் கல்வித்துறை சர்ச்சைக்கு உள்ளானது. இந்த நிலையில், வினாத்தாளில் வெளிவந்த ‘ஆசாத் காஷ்மீர்’ என்ற சொல் பாடப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று அம்மாநில ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.

கேள்வித்தாள்
கேள்வித்தாள்

வினாத்தாள் தொடர்பான சர்ச்சையால், வினாக்களைத் தேர்வு செய்த ரெய்சன் எனும் பகுதியிலுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் நிதின் சிங் மற்றும் மேற்பார்வையாளராக இருந்த நரசிங்கபுர், அரசுப் பள்ளியைச் சேர்ந்த விரிவுரையாளர் ராஜ்னீஷ் ஜெய்ன் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில், அம்மாநில முதல்வர் கமல்நாத் நேரடியாகத் தலையிட்டு கோபத்தை வெளிப்படுத்தியதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

`பாவம், அவங்களே கன்ஃபியூஸ் ஆகிட்டாங்க!' - பள்ளிக் கல்வித்துறை அறிவித்து திரும்பப் பெற்ற 6 விஷயங்கள்!

இந்த நிலையில், மத்தியப்பிரதேசத்தின் ஆசிரியர்கள் சங்கம், ஆசிரியர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், தங்களுடைய உயர் அதிகாரிகளின்மீது குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் லச்சிராம் பேசும்போது, ``வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள், சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. எனவே, ஆசிரியர்கள்மீது எந்தத் தவறும் இல்லை. எந்தப் புத்தகத்திலிருந்து பாடம் கற்பிக்கப்பட்டதோ, அதே புத்தகத்திலிருந்து கேள்விகள் கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை" என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதியைக் குறிக்கும் அதிகாரபூர்வமற்ற சொல்லாக `ஆசாத் காஷ்மீர்' உள்ளது. வினாத்தாளில் இரண்டு பகுதிகளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

கேள்வித்தாள்
கேள்வித்தாள்

இதுதொடர்பாக மத்தியப்பிரதேச ஆசிரியர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் அசுதோஷ் பாண்டே பேசுகையில், ``இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது. வினாத்தாள் மூலம் நாட்டின் எந்தப் பகுதியையும் அவர்கள் ஆசாத் காஷ்மீர் என்று அறிவிக்கவில்லை. இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில் அதிகாரிகளுக்கோ அரசாங்கத்திற்கோ ஆட்சேபனை இருந்தால், அவர்கள் இந்த வார்த்தை பாடப் புத்தகத்தில் இருக்க அனுமதித்திருக்கக்கூடாது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஆசிரியர்கள் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். நாங்கள் கல்வித்துறை அமைச்சரை சந்தித்து முறையிடப்போகிறோம். இதுபோன்ற அவசர தண்டனைகள் மூலம் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சமூகத்திற்கும் தண்டனை இழைக்கப்படுகிறது" என்று தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

`நேருவின் எதிர்மறை, பா.ஜ.க-வின் சின்னம் என்ன?’ - சர்ச்சையை ஏற்படுத்திய மணிப்பூர் பொதுத்தேர்வு
அடுத்த கட்டுரைக்கு