Published:Updated:

தொடர் சர்ச்சைகளில் சென்னைப் பல்கலைக்கழகம்... பதிவாளர் விளக்கம் என்ன?

மாணவர் போராட்டம், இடைநீக்கம், பதவி உயர்வில் முறைகேடு, ஓய்வூதியதாரர்கள், பேராசிரியர்கள் போராட்டம் எனத் தொடர் சர்ச்சைகளில் சிக்கிவந்த சென்னைப் பல்கலைக்கழகம், தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகம்

ஜே.என்.யூ தேசத்துரோக சர்ச்சை தொடங்கி, இந்திய உயர்கல்வித் துறை, பல கசப்பான சம்பவங்களைச் சந்தித்து வருகிறது. புத்தகங்களுக்குத் தடை கோருவது, கருத்துரையாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, நிகழ்ச்சிகள், திரையிடல்களுக்குத் தடை விதிப்பது எனப் பல விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்கின்றன. ஆனால், இவை யாவும் பெரும்பாலும் புற அழுத்தங்களின் காரணமாகத்தான் நடந்து வருகின்றன எனவும் சொல்லப்பட்டது.

ஜே.என்.யூ போராட்டம்
ஜே.என்.யூ போராட்டம்
Hindustan Times

மாற்றுக் கருத்துகளை முடக்குவதே யதார்த்தமாகிவிட்ட சூழலில், இந்த அமைப்பும் அதற்கு ஏற்றவாறு சுய தணிக்கைக்கும், சுய கட்டுப்பாடுகளுக்கும் ஆளாவது நடந்துவருகிறது. பெரும்பாலும் வட இந்தியப் பல்கலைக்கழகங்களில் கேள்விப்பட்டுவந்த இதுபோன்ற சம்பவங்கள், கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.

தொடர் சர்ச்சைகளில் சென்னைப் பல்கலைக்கழகம்

2 ஆண்டுகளுக்கு முன் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகப் பிரசுரம் விநியோகித்ததற்காக மாணவி வளர்மதி சேலத்தில் கைது செய்யப்பட்டார். 160 ஆண்டுகள் புகழ்பெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்திலும் இதுபோன்ற சர்ச்சை சம்பவங்கள் நிறைய நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஜே.என்.யூ ஆய்வு மாணவர் உமர் காலித் பேசவிருந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டது. `கடவுளின் பெயரால்’ எனும் தேசிய விருது பெற்ற ஆவணப்படத்தின் திரையிடலுக்கு, இறுதி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கொடுக்கப்பட்டு இறுதி நேரத்தில் ரத்துசெய்யப்பட்டது. இவை அனைத்திற்கும் புற அழுத்தங்களே காரணம் எனவும் சொல்லப்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகம்

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதைத் தொடர்ந்து, உயர்கல்வி நிலையங்களில் இந்தக் கெடுபிடிகள் மேலும் அதிகமாகின. அதற்குப் பிறகு, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில், பிரிவு 370 தொடர்பாக மாணவர்கள் விவாதிக்கப்போகிறார்கள் என்கிற யூகத்தில், மத்திய பாதுகாப்புப் படையினர் கல்வி வளாகத்திற்குள் வரவழைக்கப்பட்டனர். திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில், பிரிவு 370 தொடர்பாக விவாதித்தார்கள் என்பதற்காக 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிர்வாகத்தால் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக காஷ்மீர் மாணவர்களை அழைத்துப் பேசியிருக்கிறார். இதே பின்னணியில், சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி, அனைத்து துறைத் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கை, விகடன் வசம் கிடைக்கப்பெற்றது.

பல்கலைக்கழகத்தின் சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை
பல்கலைக்கழகத்தின் சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை

அதன் முன்னுரையில், ``சமீப காலமாக, சில நேரங்களில் பல்கலைக்கழக விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களில் கருத்து தெரிவித்துவருகிறார்கள். பல்கலைக்கழக ஊழியர்கள், ``தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் படி இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது, மீறி ஈடுபட்டால் தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளது. இறுதி வரியில், அனைத்து பல்கலைக்கழக ஊழியர்களும் பல்கலைக்கழக விவகாரங்கள் தொடர்பாக எந்த ஊடகத்துக்கும் பேட்டி அளிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

42 பக்கம் கொண்ட அந்த நடத்தை விதிகளில், அரசின் மீதான விமர்சனம் என்கிற ஒரு பகுதியை மட்டும் எடுத்து, இந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றனர். பல்கலைக்கழக விவகாரங்கள் பற்றி முன்னுரையிலும் முடிவுரையிலும் குறிப்பிட்டுவிட்டு, அரசின் மீதான விமர்சனம் என்கிற பகுதியை ஏன் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பது புரியவில்லை என்கிறார்கள் சில பேராசிரியர்கள். அரசின் கொள்கைகளும், பல்கலைக்கழக விவகாரங்களும் ஒன்றா என்றும் கேள்வியெழுப்புகின்றனர். மேலும், ``அரசின் கொள்கைகள் தொடர்பான விமர்சனபூர்வமான விவாதங்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்பதற்கான அச்சுறுத்தலே இது" என்கிறார்கள். அதோடு நில்லாமல் ``இது பேராசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கையும் கூட" என்கின்றனர், பெயர் குறிப்பிட விரும்பாத சில பேராசிரியர்கள்.

பதிவாளர் ஶ்ரீனிவாசன்
பதிவாளர் ஶ்ரீனிவாசன்

இதுபற்றி கருத்துக் கேட்க பல்கலைக்கழகப் பதிவாளர் ஶ்ரீனிவாசனை நேரில் சந்தித்தோம். சுற்றறிக்கை அனுப்பியதை மறுத்தவர், நாம் சுற்றறிக்கையைப் பார்த்துவிட்டதாகத் தெரிவித்தபோது ஒப்புக்கொண்டார். அவர் மேலும் கூறியதாவது, ``நடத்தை விதிகள் என்பது எப்போதும் உள்ளதுதான். சில ஊழியர்கள் அதைக் கடைபிடிக்கத் தவறுகிறபோது, அதை நினைவூட்டுவதற்காகவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அகாடமி பார்வையில் பேராசிரியர்கள் அரசுத் திட்டங்களைப் பற்றி எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கெல்லாம் எந்தத் தடையும் இல்லை. ஆனால், வெளிப்படையான அரசியல் நிலைப்பாடு எடுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அது, கல்விச் சூழலுக்கும் தீங்கானது. இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை; தவிர, இதற்கு எந்த உள்நோக்கம் கற்பிக்கவும் முடியாது. நல்லெண்ணத்தின் அடிப்படையிலான நினைவூட்டல் மட்டுமே அது. வெளிப்புற அழுத்தங்கள் இதில் எதுவுமில்லை" என்றார்.