Published:Updated:

பள்ளி சுவரில் கெட்ட வார்த்தை எழுதுவதைத் தடுத்த சில்வார்பட்டி பள்ளி தலைமை ஆசிரியரின் சூப்பர் ஐடியா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சில்வார்பட்டி அரசுப்பள்ளி மாணவர்கள்
சில்வார்பட்டி அரசுப்பள்ளி மாணவர்கள்

அரசுப் பள்ளிகள் பல, மூடப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், தேனி மாவட்டம் சில்வார்பட்டி கிராமத்தில் செயல்படும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மட்டும் வருடா வருடம் மாணவர் சேர்க்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு என்ன காரணம்? நேரடியாக பள்ளிக்கே சென்றோம்.

ஐந்து வருடத்துக்கு முன்னர், சில்வார்பட்டி அரசுப் பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் மோகன், இப்போது அந்தப் பள்ளியை தேனி மாவட்டத்தின் முன் மாதிரிப் பள்ளியாக, உருவாக்கியிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது.

``22 வருட ஆசிரியர் பணி அனுபவம் கொண்டவன் நான். சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த புதிதில், பள்ளியில் பல மாற்றங்கள் தேவை என உணர்ந்தேன். சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்தான் இங்கு படிக்கின்றனர். அப்படி இருக்கையில், மாற்றத்தைச் சட்டென கொண்டுவந்து விட முடியாது. மெல்ல மெல்ல ஆரம்பித்து, இப்போது பள்ளி முழுவதையும் அழகாக மாற்றியிருக்கிறோம்!” என்று நம்மிடையே பேசத் தொடங்கினார் தலைமை ஆசிரியர் மோகன்.

பள்ளி வளாகத்தில் உள்ள அடர் குறுவனம்
பள்ளி வளாகத்தில் உள்ள அடர் குறுவனம்

``எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை, ஒரே வளாகத்தில் உள்ள பள்ளி தேனி மாவட்டத்திலேயே இப்பள்ளி மட்டும்தான். பள்ளி மாணவர்களிடையே மாற்றம் வேண்டும் என்றால், நாம் சொன்னால் மட்டுமே மாற்றம் வந்துவிடாது. அதை மாணவர்களே சொல்லவேண்டும் என்று திட்டமிட்டேன். அதன் விளைவுதான், மாணவர் நாடாளுமன்றம். இதற்காக ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்களைக் கொண்ட மாணவர் நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டது.

பள்ளி மாணவ மாணவர்களில் யார் வேண்டுமானாலும் இப்பதவிகளுக்குப் போட்டியிடலாம். போட்டியிடுபவர்கள், பள்ளிக்காக என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை மாணவர்கள் முன்னிலையில் சொல்லி ஓட்டுக் கேட்க வேண்டும். அப்படி, வருடா வருடம், மாணவர் நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டது. 15 நாள்களுக்கு ஒருமுறை நாடாளுமன்றம் கூடும்.

ஸ்மார்ட் கிளாஸ் ரூம்
ஸ்மார்ட் கிளாஸ் ரூம்
சரியா பதில் சொன்னால் தலைமையாசிரியர் பதவி... கரூர் அரசுப் பள்ளி ஆச்சர்யம்

அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். உணவுத்துறை அமைச்சர் சத்துணவு சம்பந்தமாக கண்காணிப்பார். சுகாதாரத்துறை அமைச்சர் பள்ளி வளாகத்தினை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வதைக் கண்காணிப்பார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பள்ளிக்குத் தாமதமாக வருபவர்களைத் தண்டிக்காமல், பள்ளி முடிந்ததும் 15 நிமிடம் பள்ளி வளாகத்தில் உள்ள மரம், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் என மாணவர் நாடாளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. சமீபத்தில், தேனி எம்.பி ரவீந்திரநாத்குமாரைச் சந்தித்த இவர்கள், மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் கறவை மாடுகளில், கலப்பின மாடுகளைக் கொடுக்காமல், நாட்டு மாடுகளைக் கொடுத்தால், நாட்டு மாடுகள் இனம் அழிவில் இருந்து காக்கப்படும் எனக் கூறி, அதற்கான கோரிக்கை மனுவையும் அளித்தனர். உண்மையில், நம்மை விட மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள். அதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்!” என்றார் புன்னகையோடு.

பள்ளியில், வேறு என்னென்னவெல்லாம் செயல்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டோம். ``பள்ளி வளாகத்தில் ஒன்றேகால் ஏக்கரில் அடர் குறுவனம் உருவாக்கும் நோக்கத்தில் 900 மரக்கன்றுகளை நட்டு, சொட்டுநீர் பாசனம் முறையில் வளர்த்துவருகிறோம்.

மாணவர் நாடாளுமன்றம்
மாணவர் நாடாளுமன்றம்

பள்ளி முழுவதும் 25 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள் என மாணவர்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். மேலும், ஐந்து வகுப்பறைகள் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றியிருக்கிறோம். பெற்றோர்கள் உதவியோடு மூன்று வாகனங்கள் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, குடியரசுச் சுவரும் எங்கள் பள்ளியில் உள்ளது” என்றார்.

அதென்ன குடியரசுச் சுவர்? என்றதற்கு, நம்மை அழைத்துச்சென்று ஒரு சுவரைக் காட்டி, ``இதுதான் குடியரசுச் சுவர். நான் இந்தப் பள்ளிக்கு வந்த புதிதில், சுவர்களில் சில மாணவர்கள் கிறுக்கிக்கொண்டே இருப்பார்கள். சிலர் கெட்ட வார்த்தைகளால் சக மாணவர்களைத் திட்டி, சுவரில் எழுதிவிடுவார்கள். இதுமாதிரி எழுதக் கூடாது என்று நானும் சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை.

குடியரசுச் சுவர்
குடியரசுச் சுவர்

அப்போது வந்த ஐடியாதான் இந்தக் குடியரசுச் சுவர். இதில் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் எழுதலாம். இதில் எழுதியதற்காக, யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் என அறிவித்தேன். முதலில், கெட்ட வார்த்தைகளால் நிரம்பியது இந்தச் சுவர். பின்னர், கவிதை, ஜோக் என மாறிவிட்டது. பள்ளியில் மற்ற சுவர்களும் தப்பித்தன” என்றார்.

சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
கடந்த வருடம் 523 ஆக இருந்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை இந்த வருடம் 1,194 ஆக உயந்துள்ளது. இதைவிட வேறு என்ன வேண்டும் எங்களுக்கு. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது!
தலைமை ஆசிரியர்

``உங்கள் அறையில் நீங்கள் கீழேதான் அமர்ந்திருப்பீர் எனக் கேள்விப்பட்டோமே?" எனக் கேட்டோம். ``ஆமாம்… வகுப்பறையில் அளவுக்கு மீறி சேட்டை செய்பவர்களை என்னிடம் அனுப்பிவிடுமாறு ஆசிரியர்களிடம் கூறினேன். அதைக் கேட்டு, ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். `எங்களாலே சமாளிக்க முடியவில்லை. உங்களுக்கு இருக்கும் வேலைகளில், இவர்களை எப்படிச் சமாளிப்பீர்கள்? எனக் கேட்டார்கள். நீங்கள் அனுப்புங்கள். நான், `அந்த மாணவர்களைச் சரிசெய்து அனுப்புகிறேன்' என்றேன். நான் சொன்னதும், ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் குறைந்தது இரண்டு மாணவர்களையாவது அனுப்பிவிடுவார்கள். என் அறை முழுவதும் மாணவர்களாக இருப்பார்கள். அனைவரையும் கீழே அமர வைத்து, அவர்களோடு சேர்ந்து நானும் உட்கார்ந்து, அவர்களிடம் பேசி, பாடம் எடுக்க ஆரம்பித்தேன்.

தலைமையாசிரியர் மோகனுடன் மாணவர்கள்
தலைமையாசிரியர் மோகனுடன் மாணவர்கள்

முதலில் 25 மாணவர்களுக்குக் குறையாமல் என் அறைக்கு வருவார்கள். நாள்கள் செல்லச் செல்ல எண்ணிக்கை குறைந்தது. மாணவர்களுக்கு இணையாக நாமும் அமர்ந்து, அவர்களோடு பேசும்போது, இவர் ஆசிரியர், இவர் தலைமையாசிரியர் என்ற எண்ணம் இருக்காது. இதைக் கடைப்பிடிக்க ஆசிரியர்களுக்கும் சொன்னேன். இப்போ சேட்டை மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கடந்த வருடம், இப்பள்ளியை தமிழக அரசு மாதிரிப் பள்ளியாக அறிவித்தது. தற்போது முன் மாதிரிப் பள்ளியாக உருவாக்கியிருக்கிறோம். கடந்த வருடம் 523 ஆக இருந்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை இந்த வருடம் 1,194 ஆக உயந்துள்ளது. இதைவிட வேறு என்ன வேண்டும் எங்களுக்கு. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது!” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு