தமிழகத்தில் தற்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``மாணவர்கள் தயக்கமில்லாமல் வருகை தந்து தேர்வு எழுத வேண்டும். அனைத்து மாவட்ட முதன்மை பள்ளிக்கல்வி அலுவலர்கள் ஆய்வுசெய்து, தேர்வு எழுதாத மாணவர்களை இனி வரும் நாள்களில் தேர்வு எழுதவைக்க வேண்டும்.

தென்மாவட்டங்களில் சாதியக் குறியீடுகளுடன் மாணவர்கள் கைகளில் கயிறுகள் கட்டிவருவது கண்டிக்கத்தக்கது மற்றும் வருத்தத்துக்குரியது. மாணவர்கள் ஏதாவது ஓர் அமைப்புடன் இணைந்துகொண்டு, பள்ளிகளில் இது போன்ற வேற்றுமைகளை காட்டக் கூடாது. மாணவர்களை நம்பித்தான் எதிர்கால தலைமுறை இருக்கிறது. மாணவர்கள் இது மாதிரியான செயல்களைத் தவிர்க்க வேண்டும்'' என்றார்.
