Published:Updated:

`ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாமா கூடாதா?!’ - ஒரே நாளில் முடிவை மாற்றிய அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

``ஜூன் மாதம் முதல் சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கால் இந்தியா தனது இயல்புநிலையை இழந்து திணறிவருகிறது. பல துறைகளும் இதனால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன. மத்திய மற்றும் மாநில அரசுகளும் அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றன.

இத்தகைய சூழலில், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், ஆன்லைன் வகுப்புகள், அடுத்த கல்வியாண்டு எனப் பல விஷயங்கள் குறித்தும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர் என அனைவரின் மத்தியிலும் குழப்பம் நிலவிவருகிறது. இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

தேர்வு
தேர்வு

சென்னையில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ``ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில், தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுக்கக்கூடாது. ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகளில் எடுப்பது தெரியவந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, கட்டாயமாக கல்விக் கட்டணங்களை வசூலிக்கும் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாவதால், பாடத்திட்டங்களைக் குறைப்பது தொடர்பாக ஆலோசிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கைகளைப் பொறுத்தே பள்ளிகள் திறப்பது, சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது உள்ளிட்டவை முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

அட்டவணை முதல் ஆன்லைன் வகுப்புகள் வரை... லாக்டௌனில் பெற்றோர்களுக்கான வழிகாட்டல்!

தமிழகம் முழுவதும் பள்ளிகள் காலவரையற்று மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான தேர்வுகளையும் ரத்துசெய்வதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், பத்தாம் வகுப்பு தேர்வுகள் நிச்சயமாக நடைபெறும் என்று கூறி, அதற்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது. வைரஸ் பாதிப்பு அதிகமாகிவருவதால், தேர்வு நடைபெறுமா என்ற குழப்பமும் நிலவுகிறது. இதனிடையே, வரும் ஜூன் மாதம் முதல் சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஏற்கெனவே சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்டிக்கும் வகையில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று பேசியதாகக் கூறப்படுகிறது.

ஆன்லைன் வகுப்புகள்
ஆன்லைன் வகுப்புகள்

ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும் பள்ளிகளின்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறிய சில மணி நேரங்கள் கழித்து, ``ஆன்லைன் வகுப்புகளை எடுக்க பள்ளிகளுக்குத் தடையில்லை. மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து வகுப்புகளை நடத்தக்கூடாது. ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதை நாம் தடுக்கவும் முடியாது” என்று விளக்கமளித்துள்ளார்.

காலையில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டிக்கு அனைத்து பள்ளிகள் சங்கம் கண்டனங்களைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. இதனையடுத்து, அமைச்சர் தனது விளக்கத்தைப் பதிவுசெய்துள்ளார்.

கொரோனா எதிரொலி: தனியார் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள், அரசுப்பள்ளிகளின் நிலை என்ன?
அடுத்த கட்டுரைக்கு