Published:Updated:

தொடக்கக் கல்வியில் அரசியலமைப்புப் பாடம் - மகாராஷ்டிராவில் ஒரு கல்விப் புரட்சி! #Mulyavardhan

முல்யாவர்தன் செயல்வழி கற்றல்
முல்யாவர்தன் செயல்வழி கற்றல் ( Photo: mutthafoundation )

வட மாநிலங்களின் தொடக்கக் கல்வியில், `மெல்லப் பரவும் அமைதிப் புரட்சி' இது எனக் கொண்டாடுகிறார்கள் கல்வியாளர்கள்.

India is in Crisis... இந்தியா, உளவியல் ரீதியாகப் பெரும் நெருக்கடியில் இருக்கிறது. பெரும்பான்மை பலம் பொருந்திய அரசு எடுக்கும் சில முடிவுகளின் வெளிப்பாடுகளாக தேசம் அமைதியிழந்திருக்கிறது. உரிமைப் போராட்டங்கள் தேசம் முழுவதிலும் பற்றி எரிகிறது. இந்திய அரசியலமைப்பு சொல்லும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற அடிப்படைப் பண்பாடுகள் தேய்ந்து மறைந்து, மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் கும்பல் படுகொலைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சமகால தலைமுறை இப்படியிருக்க, எதிர்காலத் தலைமுறை எப்படியிருக்குமோ என நமக்கெல்லாம் அச்சம் எழுவது இயல்புதான். அந்த அச்சத்தைப் போக்க ஒரு நல்லதீர்வைக் கண்டிருக்கிறார், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சாந்திலால் முத்தா.

சாந்திலால் முத்தா
சாந்திலால் முத்தா
www.mutthafoundation.org

மதிப்புக் கூட்டல் (Value Addition) எனப் பொருள்படும் `முல்யாவர்தன்' (Mulyavardhan) எனும் திட்டத்தைத் தன்னுடைய சாந்திலால் முத்தா பவுண்டேஷன் மூலமாக உருவாக்கி, அதை தற்போது மகாராஷ்டிராவின் 67,000 அரசு ஆரம்பப் பள்ளிகளில் அமல்படுத்தியிருக்கிறார். முல்யாவர்தன் செயல்வழி கற்றல் மூலமாக, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு அரசியலமைப்பின் சாராம்சமான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய பண்புகளைப் போதித்து வருகிறார்.

2009-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், விரிவான ஆய்வுகள், சோதனைகள், அறிவியல்பூர்வமான தரவுகள் ஆகியவை சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. தேசிய, சர்வதேசிய அளவில் வல்லுநர்களோடு கலந்தாலோசிக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக இதை பீட் மாவட்டத்தில் அமல்படுத்தி, அதன் விளைவுகள் சர்வதேச தரத்தில் கணக்கிடப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிரா மற்றும் கோவா அரசுகள் முழுவதும் ஆராய்ந்து, இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததன் பேரில், அவ்விரு இடங்களிலும் இந்தத் திட்டம் அமலில் இருக்கிறது. கூடுதலாக 2018-ம் ஆண்டு, ஜார்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. வட மாநிலங்களின் தொடக்கக் கல்வியில், `மெல்லப் பரவும் அமைதிப் புரட்சி' இது எனக் கொண்டாடுகிறார்கள் கல்வியாளர்கள்.

constitution
constitution

சரி அப்படி என்ன கற்கிறார்கள் மாணவர்கள்?

வாழ்வின் அடிப்படைப் பண்பாடுகளை, நல்ல குணங்களை, அரசியலமைப்பு சொல்லும் அற கருத்துக்களை, ஆசிரியர் நடத்தும் பாடமாக வகுப்பறையில் கற்காமல், வாழ்வியல் முறையாக அவர்கள் கல்வியில் பயிற்சி செய்கிறார்கள். உதாரணத்திற்கு: ஒரு பள்ளியில், மாணவர்கள் நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அவர்களுக்குள்ளாகவே பேசி, ஒரு விதிமுறையாக வகுத்துக்கொள்கிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால், மாணவர்களின் இந்த ஒழுக்க விதிமுறை ஆசிரியர்களுக்கும் பொருந்தும், ஆசிரியரே தாமதமாக வந்தால், மாணவர்கள் அவர்களுக்குத் தண்டனை வழங்கலாம். பாடுவது, நடனமாடுவது, படம் வரைவது என ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்து மாணவர்களை மகிழ்ச்சிப் படுத்த வேண்டும் என்பதே அந்தத் தண்டனை. இந்தத் திட்டம் குழந்தைகளிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களின் ஜனநாயக உணர்வை, நல்ல பண்புகளை, ஒற்றுமையை மேம்படுத்துவதாக மகிழ்கிறார்கள் ஆசிரியர்கள்.

இதுமட்டுமல்ல, சகோதரத்துவத்தை வளர்க்கும் கூட்டுப் பயிற்சிகள் தொடங்கி, கதைகள், நிகழ்ச்சிகள், நாடகங்கள், பாடல்கள், கவிதைகள், படங்கள், விளையாட்டுகள் என அத்துணை விதங்களிலும் இந்தக் கருத்துகள் மாணவர்கள் மனத்தில் பதியவைக்கப்படுகின்றன. மாணவர்கள் மட்டுமின்றி, ஒரு குழந்தையின் வளர்ச்சியில் நேரடி தொடர்புள்ள ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள் என அனைவரையும் இணைத்து இந்தப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க ஒரு தனிமனிதனின் குணத்தைப் பேணும் இந்த மதிப்புக் கல்வி முறை (Value Education) பெரிய அளவில் நடைமுறைப்படுத்தபடுவது சாந்திலால் முத்தாவின் கனவின் வழியாகவே இந்தியாவில் சாத்தியப்பட்டிருக்கிறது.

முல்யாவர்தன் செயல்வழி கற்றல்
முல்யாவர்தன் செயல்வழி கற்றல்
www.mutthafoundation.org

``கல்வி மூலமாகவே மாற்றங்கள் சாத்தியப்படும். நல்ல பண்புகளையும் வளர்ச்சியையும், நற்குடிமக்களை கல்வியின் மூலமாகவே உருவாக்க முடியும். பல கவனச்சிதறல்கள் இருக்கும் இன்றைய சமூகச் சூழலில், ஒரு குழந்தையிடம் நன்மையை ஆழமாக விதைப்பதற்குக் கல்வி மட்டுமே ஒரே வழி, அந்த விதை விருட்சமாகி, நாட்டுக்கு நலன் தர அது அதிக மாணவர்களிடம் விதைக்கப்பட வேண்டும். இதை சாத்தியப்படுத்த ஒரே வழி அரசுப் பள்ளிகள்" என்று ஒரு பேட்டியில் தன்னுடைய கனவை விவரிக்கிறார் சாந்திலால் முத்தா.

இந்தத் திட்டம் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்திருக்கும் மூத்த கல்வியியலாளர் ரமேஷ் பான்ஸே, ``இந்தத் திட்டம் முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நல்ல ஒழுக்கங்கள் மிக இளம் வயதிலேயே ஊட்டப்பட வேண்டும். அதன்படி முதலில், இந்தத் திட்டம் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளிடமிருந்து ஆரம்பிக்கிறது. இரண்டாவதாக, கூடிக் கற்றல். ஒரு விஷயத்தை ஒரு குழந்தை புரிந்துகொள்வதற்கான சிறந்த வழி இங்கு செயல்படுத்தப்படுகிறது. மூன்றாவதாக, இது பாடங்களாக இல்லாமல் செயல்வழி கற்றலாக இருக்கிறது அதனால், இதைவிட சிறந்த முறையில் ஒரு நல்ல குடிமகனை உருவாக்கும் கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட முடியாது" என்று கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்.. மைக்கைப் பிடுங்க ஓடிய ஓவைசி.. பெங்களூரு போராட்டத்தில் நடந்தது என்ன?

இளம் கல்விப் பருவத்திலேயே மாணவர்களைப் பக்குவப்படுத்தி, மனிதநேயத்தோடு அவர்களை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்காற்றும் இந்தத் திட்டம், நிச்சயம் இன்றைய காலத்தின் கட்டாயம். வருங்கால நம் சமூகம் அறத்தோடு செயல்பட, உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு என்ற தன்னுடைய பெருமையை இந்தியா தக்கவைத்துக்கொள்ள, நம் குழந்தைகளை தயார்ப்படுத்துவதும் அவசியம் எனும் பட்சத்தில், தமிழகமும் இத்தகைய ஒரு திட்டத்தை வரவேற்கும்.

அடுத்த கட்டுரைக்கு