Published:Updated:

`மூலிகைத் தோட்டம்; சுகாதாரமான வளாகம்; ஆனால்..ஒரே ஒரு குறை!' - வருந்தும் அரசுப் பள்ளி தலைமையாசிரியை

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

இயற்கை சாகுபடி முறையில் ரசாயன உரங்கள் கலப்பில்லாமல் பயிர் செய்யப்படும் கத்தரிக்காய், தக்காளி, முளைக்கீரை, முருங்கைக் கீரை உள்ளிட்ட காய்கறிகளை மாணவர்களின் மதிய உணவுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

ஆத்துப்பக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மூலிகைத் தோட்டம், இயற்கை சாகுபடியில் காய்கறிகள் மற்றும் செடி, கொடிகளை வளர்த்து பசுமையான சூழலுடன் அரசு பள்ளிகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது

மூலிகைத் தோட்டம்
மூலிகைத் தோட்டம்

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அத்துப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. வசதியான தனியார் பள்ளிகளில் இருப்பதைவிட பசுமையும் இயற்கை அழகும் கொண்டதாக இப்பள்ளி திகழ்கிறது. சுகாதாரமான சூழல், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், இயற்கை சாகுபடியில் விளைவிக்கப்படும் காய்கறிகளைக் கொண்ட மதிய உணவு, மூலிகைச் செடிகள் கொண்டு அமைக்கப்பட்ட தோட்டம் ஆகியவற்றைக் கொண்டு முன்மாதிரிப் பள்ளியாக இருக்கிறது.

சளி, காய்ச்சல் போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படும் கருந்துளசி, தூதுவளை போன்ற செடிகளும் எல்லா வகை விஷத்தையும் முறிக்கும் சிறியானங்கை உள்ளிட்ட மூலிகைச் செடிகளும் இதயத்திற்குப் பலம் சேர்க்கும் செம்பருத்திச் செடிகளும் இப்பள்ளி வளாகத்தில் வளர்க்கப்படுகின்றன. இயற்கையான மருத்துவக் குணமுள்ள செடிகள் பள்ளி வளாகத்தில் வளர்க்கப்படுவதால் சுகாதாரமான காற்றை இப்பள்ளி மாணவர்கள் சுவாசிக்க முடிகிறது. மேலும், இங்கு இயற்கை சாகுபடி முறையில் ரசாயன உரங்கள் கலப்பில்லாமல் பயிர் செய்யப்படும் கத்தரிக்காய், தக்காளி, முளைக்கீரை, முருங்கைக் கீரை உள்ளிட்ட காய்கறிகளை மாணவர்களின் மதிய உணவுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

இதுபற்றி பள்ளி தலைமையாசிரியை கலையரசியிடம் பேசியபோது, ``இயற்கைச் சூழலில் அனைத்து வசதிகளையும் கொண்ட இத்தொடக்கப் பள்ளியில் 24 மாணவர்கள் மட்டுமே படிப்பதுதான் பெரும் குறையாக உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு மேலான கல்வியைப் போதிக்கிறோம். ஒவ்வொரு மாணவரின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துகிறோம். எனவே, இப்பகுதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு