Published:Updated:

`நம்ம ஸ்கூல்’ திட்டம்: இபிஎஸ் விமர்சனம் டு கல்வியாளர்கள் எதிர்ப்பு - பள்ளிக்கல்வியில் நடப்பது என்ன?!

'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்
News
'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த, தனியார்களிடம் நிதியுதவி பெறும்விதமாக `நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 19-ம் தேதி தொடங்கிவைத்தார்.

`நம்ம ஸ்கூல்’ திட்டம்: இபிஎஸ் விமர்சனம் டு கல்வியாளர்கள் எதிர்ப்பு - பள்ளிக்கல்வியில் நடப்பது என்ன?!

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த, தனியார்களிடம் நிதியுதவி பெறும்விதமாக `நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 19-ம் தேதி தொடங்கிவைத்தார்.

Published:Updated:
'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்
News
'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த, தனியார்களிடம் நிதியுதவி பெறும்விதமாக `நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 19-ம் தேதி தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம், அரசுப்பள்ளிகளைத் தத்தெடுத்து, அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கழிப்பறை வசதிகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர் அமைத்தல், வர்ணம் பூசுதல், இணையதள வசதி செய்துதருவது போன்ற அடிப்படை வசதிகளை பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்கள், தனியார் பெருநிறுவனங்களின் நிதியுதவியுடன் பூர்த்திசெய்யலாம் என்கிறது தமிழ்நாடு அரசு. இந்த `நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டத்துக்கு டி.வி.எஸ் நிறுவனரான வேணு சீனிவாசனைத் தலைவராகவும், நல்லெண்ணத் தூதராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தையும் அறிவித்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல், பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதி சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை நிதி வழங்கியவர்கள் அறியும் வகையில் பிரத்யேக இணையதளம் ஒன்றையும் அரசு உருவாக்கியிருக்கிறது.

'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்'  திட்டம்
'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டம்

மு.க.ஸ்டாலின் பெருமிதம், எடப்பாடி விமர்சனம்:

இந்தத் திட்டம் குறித்து பெருமிதம் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ``கல்வி எனும் பேராயுதத்தைக் கொடுத்து, ஏழை, எளிய பின்புலத்திலிருந்து வரும் மாணவர்களை ஏற்றிவிடும் ஏணியாக இருக்கும் நமது அரசுப் பள்ளிகளைக் காத்திட 'நம்ம பள்ளி ஃபவுண்டேஷன்' தொடங்கப்பட்டிருக்கிறது. அனைத்துத் தரப்பினரும் பரந்த உள்ளத்தோடு நிதியுதவி தாருங்கள்! வேருக்கு நீராவோம்!" எனப் பொதுமக்களுக்கு தனது ட்விட்டரில் கோரிக்கை வைத்தார். மேலும், தனது சொந்த நிதியாக ரூ.5 லட்சத்தையும் அறிவித்தார்.

அந்த நிலையில், அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ``கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த சி.எஸ்.ஆர் திட்டத்துக்குத் தங்களுடைய ஸ்டிக்கரை ஒட்டி, `நம்ம ஸ்கூல்‌' என்ற தங்கிலீஷில்‌ பெயரைவைத்து திட்டத்தை மீண்டும்‌ தொடங்கியிருக்கிறார் விடியா தி.மு.க அரசின்‌ நிர்வாகத்‌திறனற்ற முதலமைச்சர்‌" எனக் காட்டமாக அறிக்கை வெளியிட்டார்.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

அந்த அறிக்கையில், ``கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது 23.5.2017-ல் பள்ளிக்‌கல்வித்‌துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன்‌ அரசுப்‌ பள்ளிகளின்‌ உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும்‌ வகையில்‌, தொழிலதிபர்களுடன்‌ ஆலோசனை நடத்தி, சி.எஸ்.ஆர் (Corporate Social Responsibilities) எனப்படும்‌ நிறுவனங்களின்‌ சமூக பங்களிப்பு நிதித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்‌. அரசுப்‌ பள்ளிகளை மேம்படுத்துவதற்கு உதவிசெய்யும்‌ ஆர்வத்துடன்‌ இருந்த தொழில்‌ நிறுவனங்களுக்கும்‌, ஆர்வலர்களுக்கும்‌, முன்னாள்‌ பள்ளி மாணவர்களுக்கும்‌ எளிய, நம்பகத்தன்மைகொண்ட இணையவழித்தடத்தையும்‌ ஏற்படுத்தும்‌விதமாக, நான்‌ 5.11.2019 அன்று தலைமைச்‌ செயலகத்தில்‌, இணையவழி நிதி திரட்டும்‌ இணையதளத்தைத் (https://contribute.tnschools.gov.in) தொடங்கும்‌ விழாவை எளிமையாகத் தொடங்கிவைத்தேன்‌.

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

இணையவழியில்‌ திரட்டப்படும்‌ நிதி, அதற்கென தொடங்கப்பட்டிருக்கும் தனி வங்கிக்‌ கணக்கில்‌ பெறப்படுவதுடன்‌, அந்த நிதி தொடர்பான விவரங்களை பொதுமக்கள்‌ இணையவழியில்‌ நேரடியாக அறிந்துகொள்ளும்‌ வசதியும்‌ செய்யப்பட்டது. இவ்வாறு திரட்டப்படும்‌ நிதிக்கு தமிழ்நாடு பெற்றோர்‌-ஆசிரியர்‌ கழகம்‌ தொடர்பு அலுவலகமாகச்‌ செயல்படும்‌ என்றும்‌, அந்தக் கழகத்தின்‌ பொருளாளரும்‌ செயலாளரும்‌ தொடர்பு அலுவலர்களாக இருந்து நிதி மேலாண்மை செய்வார்கள்‌ என்றும் அரசு செய்திக்‌குறிப்பும்‌ வெளியிடப்பட்டது. ஆனால், சந்தர்ப்பவாதத்தால் ஆட்சிக்கு வந்த இந்த விடியா தி.மு.க அரசு, வெற்றிகரமாகச் செயல்பட்டுவந்த இந்தத் திட்டத்தையும்‌, இந்தத் திட்டத்துக்காக தனியாகத் தொடங்கப்பட்ட இணையதளத்துக்கும்‌ மூடுவிழா நடத்தியது. என் ஆட்சிக்‌காலத்தில்‌ எளிமையாகத் தொடங்கிவைக்கப்பட்ட, அரசுப்‌ பள்ளிகளின்‌ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்ய நிதி வசூலிக்கும்‌ இந்தத் திட்டத்தை பெயர்‌ மாற்றம்‌ செய்து, நட்சத்திர ஹோட்டலில்‌ நடத்தப்பட்ட தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு சுமார்‌ 3 கோடி ரூபாயும்‌ செலவழிக்கப்பட்டிருக்கிறது" எனக் கடுமையாக விமர்சித்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் விளக்கம்:

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ``கடந்த அ.தி.மு.க அரசு இணையதளம் உருவாக்குவதாக அறிவித்தாலும், அது வெளிப்படையானதாக இல்லை. பல்வேறு குறைபாடுகளில் சிக்கித் திணறியது. பள்ளிக்கல்வித்துறைக்கு பள்ளிகளுக்கு வரவேண்டிய நன்கொடைகளை மாநில அளவிலான பெற்றோர்-ஆசிரியர் கழகமே பெற்றுக்கொண்டது. இந்தக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு தனியான சேமிப்புக் கணக்கில் 2019-ம் ஆண்டு முதல் சி.எஸ்.ஆர் நிதிகள் பெறப்பட்டுள்ளன. எனினும், அந்த நிதியுதவியைப் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கான ஒரு நம்பத்தகுந்த கட்டமைப்போ, வெளிப்படைத்தன்மையுடன்கூடிய வழிமுறையோ அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்படவில்லை. அனைவராலும் அறியப்பட்ட வழிமுறையும் ஏற்படுத்தப்படவில்லை. கையாளும் வழிமுறை, நிதி சென்று சேரும் முறை, பொறுப்பாக நிதியைக் கையாளும் தன்மை போன்றவற்றில் அந்தத் திட்டம் மிக பலவீனமாகவும் மேலோட்டமாகவும் இருந்தது.

அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

இவ்வளவு குறைபாடுகளுடன்கூடிய ஒன்றைத் தொடர இயலாது என்னும் நிலையில், அதற்கான மாற்றுத் திட்டத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு தி.மு.க அரசுக்கு இருந்தது. தி.மு.க அரசில் தொடங்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய திட்டம் சி.எஸ்.ஆர் மூலமாகப் பெறப்படும் நிதி மட்டுமல்லாமல், முன்னாள் மாணவர்கள், புரவலர்கள், தனிநபர்கள் போன்றவர்களிடமிருந்து பெறப்படும் நிதியை நிர்வகிக்க இலகுவான வழிமுறைகளுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் உருவாக்கப்பட்டிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையிலும், நிதித்துறையிலும் உள்ள மூத்த அதிகாரிகளை இயக்குநர்களாகக்கொண்ட ஒரு குழுவால் இந்தத் திட்டம் நிர்வகிக்கப்படவிருக்கிறது. தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் இந்தத் திட்டத்தின் கௌரவ தலைவராக இருப்பார். ஒவ்வொரு பள்ளிக்கும் என்னென்ன தேவை என்பதை அந்தந்தப் பள்ளியைச் சார்ந்த பள்ளி மேலாண்மைக்குழுக்கள் கண்டறிந்து, அவற்றை நிறைவேற்றத் தேவைப்படும் திட்டங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக அனுப்பிவைக்கப்படவிருக்கின்றன.

அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்

`நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ தொடக்கவிழாவுக்காக 3 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகக் கூறுவது அபத்தம்; அரைவேக்காட்டுத்தனமான தகவல்! தி.மு.க அரசின் புதிய திட்டத்துக்கு வரும் நன்கொடையாளர்களையும் தடுக்கும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்படுவது அவருக்கும் அழகல்ல. அவர் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் பொருத்தமல்ல" எனக் காட்டமாகப் பதிலளித்தார்.

கல்வியாளர்கள் கூறுவது என்ன?

`தனியார்மயமாக்கும் முயற்சி!'

``நம்ம ஸ்கூல் திட்டமானது அரசுப் பள்ளிகளை அரசு கைவிடும் மற்றும் அதிரடியாக தனியார்மயமாக்கும் ஒரு வஞ்சகத் திட்டம்; இந்தத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என அகில இந்திய கல்விப் பாதுகாப்புக்குழுவின் தமிழ்நாடு பிரிவு தலைவர் வெ.சுதாகர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``நம்ம ஸ்கூல் திட்டத்தில் தனியார் நிதிப் பங்களிப்பை நிர்வகிக்கக்கூடிய பொறுப்பையும் தனியார் கையில் கொடுத்திருப்பது, அரசுப் பள்ளிகளை நிச்சயமாக தனியார்மயத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்பது கேள்விக்கு அப்பாற்பட்ட வகையில் இருக்கிறது.

அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு
அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு

மேலும், பல ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், வகுப்பறைகள், கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளி கட்டுமான அமைப்புகள் சிதைவுற்றிருக்கும் நிலையில், தொகுப்பூதியத்தின் அடிப்படையில் தற்காலிகப் பணியில் ஆசிரியர்கள் பணியாற்றிவரும் நிலையில், நிரந்தர அடிப்படையில் ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்யாத நிலையில், அவற்றையெல்லாம் சரிசெய்ய அரசு போதுமான நிதி ஒதுக்கி ஆவன செய்யும் என ஆசிரியர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் எதிர்பார்த்திருந்த வேளையில்... அரசுப் பள்ளிகளைக் கைகழுவி படிப்படியாகத் தனியார்வசம் ஒப்படைக்கக்கூடியவிதத்தில் நம்ம ஸ்கூல் திட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது கல்விமீது அக்கறைகொண்ட அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது! இந்த நம்ம ஸ்கூல் திட்டம், மக்கள் வரிப்பணத்தில் இதுநாள் வரை செயல்பட்டுவந்த அரசுப் பள்ளிகள் மீதான இறுதித் தாக்குதல்; தமிழ்நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் ஒரே நம்பிக்கை ஆதாரமாகத் திகழ்ந்துவரும் அரசுப் பள்ளிகளைப் படுவேகமாகத் தனியார்மயமாக்கும் இந்த முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல அரசுப் பள்ளி ஆசிரியரும், கல்வியாளருமான உமா மகேஸ்வரி, ``மத்திய பா.ஜ.க அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை-2020 திட்டத்தை மற்ற மாநிலங்களைவிட வேகமாகப் புதுப்புது பெயர்களில் படிப்படியாக செயல்படுத்திவருகிறது தி.மு.க அரசு. குறிப்பாக, புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் பல்வேறு அம்சங்களான இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், திறன் மேம்பாடு என்ற நான் முதல்வன் திட்டம் போன்றவற்றைப் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் இடையில் தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்திவருகிறது. அந்த வரிசையில் ஒன்றுதான் இந்த `நம்ம ஸ்கூல்’ திட்டமும்! ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என யாரையுமே கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக இது போன்ற திட்டங்களைக் கொண்டுவருகிறது. Bottom to Top என்ற இயல்பான கல்வி வளர்ச்சிக்கு மாறாக, Top to Bottom என்கிற மேலே உள்ளவர்களின் அழுத்தம் மற்றும் உத்தரவுக்கிணங்க இது போன்ற திட்டங்களை தமிழ்நாடு அரசு திணித்துவருகிறது.

கல்வியாளர் எஸ்.உமா மகேஸ்வரி
கல்வியாளர் எஸ்.உமா மகேஸ்வரி

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மக்களின் கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடிய மாபெரும் மனிதர்களான பாரதியார், வ.உ.சி., நேதாஜி, பகத்சிங் போன்றவர்கள் தங்களின் உயிரைத் தியாகம் செய்து பெற்ற சுதந்திரத்தின் பலனாகவே நாடு முழுவதும் பொதுமக்கள் வரிப்பணத்தில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் எனக் கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், மக்கள் வரிப்பணத்தில் உருவான அரசுக் கல்வி நிறுவனங்களை, பொது சொத்துகளைப் பாதுகாத்து அவற்றை வளர்த்தெடுக்கத் தேவையான நிதியை மாநில அரசாங்கம் ஒதுக்குவதே நியாயம். ஏற்கெனவே, கல்வித்துறையில் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்படாமல் கிடக்கும் திட்டங்களை முறைப்படுத்தி, பிரச்னைகளை ஒழுங்கு செய்தாலே போதும். ஆனால், அதை விடுத்து தனியார் நிறுவனங்களுக்கு மக்களின் பொதுச் சொத்தாகத் திகழும் அரசுப் பள்ளிகளைப் படிப்படியாகத் தாரை வார்க்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டிருக்கும் `நம்ம ஸ்கூல் திட்டம்' ஓர் ஆபத்தான திட்டம். இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்றார்.

திருமாவளவன்
திருமாவளவன்

`நிர்வாகக் கட்டமைப்பை மாற்ற வேண்டும்!'

இந்தத் திட்டத்தின் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி-யுமான திருமாவளன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ``மாவட்ட அளவில் இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் குழுக்கள், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மட்டுமேகொண்ட குழுவாக இருக்கின்றன. மாநில அளவிலான குழுக்களிலோ, மாவட்ட அளவிலான குழுக்களிலோ மக்கள் பிரதிநிதிகள் எவரும் இடம்பெறவில்லை. கல்வியில் ஈடுபாடுகொண்ட மக்கள் பிரதிநிதிகளை மாநில, மாவட்ட அளவிலான குழுக்களில் இடம்பெறச் செய்வது மிக மிக அவசியம். ஆதிதிராவிட நலப் பள்ளிகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும், தன்னார்வத்தின் அடிப்படையில் பள்ளியைத் தத்தெடுக்கவோ, நன்கொடை அளிக்கவோ முன்வருகிறவர்கள் ஆதிதிராவிட நலப் பள்ளியைத் தேர்வு செய்வார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, அந்தப் பள்ளிகள் விடுபட்டுப்போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய நிலை ஏற்படாமல், அந்தப் பள்ளிகளும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அடுத்து வரும் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதோடு நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் நிர்வாகக் கட்டமைப்பை ஜனநாயகபூர்வமாகத் திருத்தி அமைக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

நந்தகுமார்
நந்தகுமார்

பள்ளிக்கல்வித்துறையின் பதில்:

`தனியார் கைகளில் செல்லவில்லை; அரசு அதிகாரிகள் வசம்தான் இருக்கிறது!'

இந்க்த கோரிக்கைகள், குற்றச்சாட்டுகள் குறித்து பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்-ஸிடம் விளக்கம் கேட்டோம். ``பள்ளி சீரமைப்பு மாநாடுகள் என்பது காமராஜர் காலம்தொட்டே தொடர்ச்சியாக நடைபெற்று வரக்கூடிய ஒன்றுதான். அதன் மூலம் அரசுப் பள்ளிகளைச் சீரமைக்க பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், வணிக நிறுவனங்கள், தனியார் தன்னார்வலர்கள் எனப் பல்வேறு தரப்பிலிருந்து நிதி பெறப்படும் முறை ஒவ்வொரு காலகட்டத்திலும், தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல மாற்றியமைக்கப்பட்டுவருகின்றன. சி.எஸ்.ஆர் முறையும் அப்படித்தான் கொண்டுவரப்பட்டது. அந்த வகையில், அரசுப்பள்ளிகளைச் சீரமைக்க நிதியுதவி அளிக்க முன்வருபவர்கள் உலகத்தின் எந்த ஓர் மூலையில் இருப்பினும் அவர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் தளமாகவும், அவர்கள் கொடுக்கக்கூடிய நிதி சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சரியாகச் சென்று சேர்ந்திருக்கிறதா... முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகச் செயல்படுத்தும் ஒரு நல்ல திட்டம்தான் நம்ம ஸ்கூல் திட்டம்.

இந்தத் திட்டத்தின்மூலம், பள்ளிகள் தங்களுக்கான தேவைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவிடம் தெரிவிக்கும். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு அதை பள்ளிக்கல்வித்துறையிடம் எடுத்துச் சென்று, `நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டத்தின் நிர்வாக செயற்குழுவிடம் (Executive Committee) ஒப்படைக்கும். அதன் பின்னர் மூன்று கட்ட பரிசோதனைக்குப் பிறகு, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவின் இறுதி ஒப்புதலைப் பெற்று சம்மந்தப்பட்ட பள்ளியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வேண்டிய நிதி விடுவிக்கப்படும். சம்பந்தப்பட்ட பள்ளி கிராமப் பஞ்சாயத்துகளில் இருந்தால் ஊரக வளர்ச்சித்துறையைக்கொண்டும், நகர்ப்புறங்களில் இருந்தால் பொதுப்பணித்துறையைக்கொண்டும் உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தின் நிதிகள் முழுக்க முழுக்க பள்ளிக்கல்வித்துறைச் செயலர், ஆணையர், SSA திட்ட இயக்குநர், நிதித்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளால் மட்டுமே நிர்வகிக்கப்படும். அதாவது, நிதி கையாளுகை என்பது முழுக்க அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்" என விளக்கமளித்தார்.