Published:Updated:

``வார்த்தைகளால் கற்பிப்பதைவிட இப்படிச் செய்தால் எளிதாகப் புரியும்!” - தேசிய விருது பெற்ற ஆசிரியை

அரசுப்பள்ளி
அரசுப்பள்ளி

``சில மாணவர்களுக்கு வெறும் புத்தகத்தை வாசித்துக் காட்டினால்கூட படித்துவிடுவார்கள். ஆனால், சில மாணவர்களுக்கு கூடுதல் கவனம் தேவைப்படும். அவர்களுக்கு என்ன மொழி முறையைக் கையாள வேண்டும் என்பதை முடிவு செய்வதுதான் ஆசிரியரான எனது பணி”

தகவல் தொழில்நுட்பத்தில் படைப்பாற்றலைக் கொண்டு மாணவர்களுக்குச் சிறப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2010-ம் ஆண்டு முதல் மத்திய கல்வி அமைச்சகம் ஐ.சி.டி (ICT–Information and Communication Technology) விருதை அளித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT-The National Council of educational Research and Training) மூலம் இந்த விருது விழா நடத்தப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பங்களைக் கொண்டு கல்வித்துறையில் கற்பிக்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இந்தத் தேசிய விருதை அளித்து வருகிறது மத்திய அரசு.

தேசிய விருது பெற்ற ஆசிரியை ரேவதி
தேசிய விருது பெற்ற ஆசிரியை ரேவதி

மாநில கல்வித்துறை சார்பில் பரிந்துரைக்கப்படும் பட்டியலில் இருந்து தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 2018 மற்றும் 2019-ம் ஆண்டுக்கான விருது பெற்றவர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்த விருதுக்கு நாடு முழுவதும் 25 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். அந்தப் பட்டியலில் புதுச்சேரி கல்வித்துறை 3 வது வட்டம் பிள்ளையார்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியின் இளம் ஆசிரியையான ரேவதி இடம்பெற்றிருக்கிறார்.

2012-ம் ஆண்டு முதல் புதுச்சேரி கல்வித்துறையில் பணியாற்றிவரும் ரேவதி குழந்தைகளுக்கு எப்போதும் பிடித்த ஒன்றான பொம்மைகளைக் கொண்டு பொம்மலாட்டம் மூலம் மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பித்து வருகிறார். பொம்மைகள் செய்வதில் ஆர்வம் மிக்கவரான ரேவதி, 2018-ம் ஆண்டு ஆசிரியர்களுக்கான காட்சிப் பொருள் போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவில் பரிசு பெற்றவர்.

வீடியோ பாடம்
வீடியோ பாடம்
அட்மிஷன் போட்டால் ₹1,000 ஊக்கத்தொகை, வகுப்பறையில் உண்டியல்; அசத்தும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்!

பொம்மலாட்டத்தின் மூலம் பாடங்களைக் கற்பிக்கும்போது மாணவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படாததுடன், உற்சாகத்துடன் அவர்கள் பாடங்களைக் கவனிப்பார்கள் என்பது ஆசிரியை ரேவதியின் கருத்து. கடந்த ஆண்டு கேரளா ஐ.சி.டி மேளாவில் இவர் தயாரித்த வீடியோ ஒன்று ரூ.40,000 பரிசுத் தொகையை வென்றது. ஆசிரியை ரேவதியைத் தொடர்புகொண்டு விகடன் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.

நம்மிடம் பேசிய அவர், ``சிறு வயதில் இருந்தே எனக்கு ஓவியம் வரைவது, பொம்மைகள் செய்வது போன்றவற்றில் ஆர்வம் அதிகம். புதுச்சேரி கல்வித்துறையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்ததும் மாணவர்களுக்குப் பிடித்த மொழியில் அவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

பொம்மைகளைப் பிடிக்காத குழந்தைகள் யாரும் இருக்கிறார்களா என்ன? அதனால் பொம்மைகளையே பாட மொழியாக்க முடிவெடுத்தேன். கடந்த பத்து ஆண்டுகளாக பொம்மைகளை நானே செய்து பொம்மலாட்டம் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை எடுத்து வந்தேன். ஆண்டுதோறும் பொம்மைகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே சென்றதால் அதைப் பராமரிப்பது எனக்கு மிகவும் சவாலாகவும் சிரமமாகவும் இருந்தது. அதன் பிறகுதான் பொம்மைகளை வீடியோவாக மாற்றுவது குறித்து யோசித்தேன்.

பாடத்தில் வரும் ஒரு கதையை ஆயிரம் வார்த்தைகளில் கூறுவதைவிட, மணிக்கணக்கில் நடித்துக் காட்டுவதைவிட பொம்மைகள் மூலம் ஐந்து நிமிடங்களில் அவர்களுக்குப் புரிய வைத்துவிட முடியும். அந்தப் பாடங்களும், அவை சொல்லும் நீதிகளும் வாழ்வு முழுவதும் அவர்களின் மனதைவிட்டு நீங்காது.
ஆசிரியை ரேவதி

பாடப் புத்தகங்களில் இருக்கும் பாத்திரங்களின் உடைகள், பாவனைகளுடன் அப்படியே பொம்மையாக வடிவமைத்து அதை வீடியோவாகப் பதிவு செய்தேன். அதன் பிறகு, `ஸ்டாப் மோஷன் அனிமேஷன்’ முறையில் அந்த பொம்மைகள் பாடங்களில் வருவதைப் போல பேசுவது, நடிப்பது என்று மாற்றி உயிர் கொடுத்தேன். ஆரம்பத்தில் நான் நினைத்தது போல வீடியோ அமையவில்லை. திரும்ப திரும்ப முயற்சி செய்ததற்கு கைமேல் பலன் கிடைத்தது. ஆனால், பொம்மைகள் செய்து ஒரு பாடத்தை உருவாக்க 5 நாள்கள் தேவைப்பட்டது.

புதுச்சேரி அரசுப்பள்ளி
புதுச்சேரி அரசுப்பள்ளி

பேசுவது, சிரிப்பது, நடப்பது எனப் பாடங்களில் இருப்பதை அப்படியே அனிமேஷன் உதவியுடன் வீடியோவில் கொண்டு வந்தேன். வழக்கமான முறையில் நடத்தும் பாடத்துக்கும், இந்த முறையில் நடத்தும் பாடத்துக்கும் மாணவர்கள் மத்தியில் நல்ல வித்தியாசத்தைக் காண முடிந்தது. பாடங்களில் வரும் கடினமான வார்த்தைகளைக்கூட இந்த முறையில் மாணவர்கள் எளிதாகக் கற்றுக்கொண்டு உச்சரித்தனர். அனைவரும் மகிழ்ச்சியுடனும் அனுபவித்தும் பாடங்களைப் படிக்க ஆரம்பித்தனர்.

அதேபோல வீடியோ எடிட்டிங், ஸ்டாப் மோஷன் போன்றவற்றை, மாணவர்களுடன் அமர்ந்து செய்வதால் அதையும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். பொம்மைகளுக்கு என்ன வண்ணத்தில் ஆடை கொடுக்க வேண்டுமென்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். கடந்த இரண்டு வருடங்களில் இதுவரை பத்து பாடங்களை வீடியோவாக மாற்றியிருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த பழங்குடியின மாணவன் ஒருவன் என்னிடம் மட்டுமல்ல சக மாணவர்களிடமும் ஒதுங்கியே இருந்தான். நாம் பேசுவதுகூட அவனுக்குப் புரியவில்லை. அதன்பிறகு பொம்மைகள் செய்வது, அனிமேஷன் செய்து காட்டியது போன்றவற்றால்தான் எங்களுடன் ஒன்றிணைந்தான். இப்போது நன்றாக எழுதப் படிக்கக் கற்றுக்கொண்ட அந்த மாணவன் ஆறாம் வகுப்புக்குச் செல்கிறான்.

அரசுப்பள்ளி மாணவர்கள்
அரசுப்பள்ளி மாணவர்கள்
தேசிய விருது பெற்ற தமிழகத்தின் மூன்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! #ICT_Award

சில மாணவர்களுக்கு வெறும் புத்தகத்தை வாசித்துக் காட்டினால்கூட படித்துவிடுவார்கள். ஆனால், சில மாணவர்களுக்கு கூடுதல் கவனம் தேவைப்படும். அவர்களுக்கு என்ன மொழி முறையைக் கையாள வேண்டும் என்பதை முடிவு செய்வதுதான் ஆசிரியரான எனது பணி.

பாடத்தில் வரும் ஒரு கதையை ஆயிரம் வார்த்தைகளில் கூறுவதைவிட, மணிக்கணக்கில் நடித்துக் காட்டுவதைவிட பொம்மைகள் மூலம் ஐந்து நிமிடங்களில் அவர்களுக்கு புரிய வைத்துவிட முடியும். அதேபோல வாழ்வு முழுவதும் அந்தப் பாடங்களும், அவை சொல்லும் நீதிகளும் அவர்களின் மனதைவிட்டு நீங்காது. எனது இந்த முயற்சிக்கு ஊக்கம் அளித்தது புதுச்சேரி கல்வித்துறையும், யுனிவர்சல் டீச்சர்ஸ் அகாடமியும்தான். அதேபோல எங்கள் பள்ளியின் துணை ஆய்வாளர் எஸ்.பக்கிரிசாமி ஐயா அவர்கள் எங்களுக்கெல்லாம் சிறந்த வழிகாட்டி. பல ஆசிரியர்களின் வெற்றிக்குப் பின்னால் அவரது தூண்டுதல் இருக்கிறது” என்றார்.

ரேவதி போன்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் கல்வித்துறையின் கையிலிருக்கும் நம்பிக்கை ஆயுதம்.

அடுத்த கட்டுரைக்கு