Published:Updated:

நீட் தேர்வு விலக்கும், கல்வியில் மாநிலங்களின் உரிமையும் #MyVikatan

கல்வியில் மாநிலங்களின் உரிமை காப்பாற்றப்பட்டு கூட்டாட்சி நிலைநிறுத்தப்படும் வரை நீட் போன்ற பல சிக்கல்களை மாநில அரசுகள் சந்தித்துதான் ஆக வேண்டியிருக்கும்.

நீட் தேர்வு விலக்கும், கல்வியில் மாநிலங்களின் உரிமையும் #MyVikatan

கல்வியில் மாநிலங்களின் உரிமை காப்பாற்றப்பட்டு கூட்டாட்சி நிலைநிறுத்தப்படும் வரை நீட் போன்ற பல சிக்கல்களை மாநில அரசுகள் சந்தித்துதான் ஆக வேண்டியிருக்கும்.

Published:Updated:
எந்தச் சட்டமும் அந்த மாநிலத்துக்குத் தேவையா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு மட்டுமே உள்ளதே தவிர, ஆளுநருக்கு இல்லை.

முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நீட் தேர்வு மீதான தன் 165 பக்க அறிக்கையை தாக்கல் செய்த பிறகு, கடந்த 13 செப்டம்பர் 2021 அன்று தமிழக சட்டமன்றத்தில் நீட் நிரந்தர விலக்குக்கான தீர்மானம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்தத் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்தினார் என்பதும், பிரதமர் மோடி பங்கேற்ற புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவிலும் முதல்வர் நீட் விலக்கு தொடர்பாகவே பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அதற்கு ஆளுநர் காலம் தவறாமல் ஒப்புதல் அளிப்பரா? அதன் பின் குடியரசு தலைவர் அதற்கு ஒப்புதல் கொடுப்பாரா? சட்ட போராட்டம் மூலம் விலக்கு பெற முடியுமா? இப்படியான விவாதங்கள் தொடர்ந்து நடந்த வந்த நிலையில் அளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்குக்கான தீர்மானத்தை, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 142 நாட்களுக்குப் பிறகு திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர் தீர்மானத்தை திருப்பி அனுப்பியதை தொடர்ந்து, 2022 பிப்ரவரி 5 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானத்தை ஆளுநருக்கு மீண்டும் அனுப்புவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் 200-வது பிரிவின்படி ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட தீர்மானத்தை மீண்டும் சட்டமன்றத்தால் திருத்தத்துடன் அல்லது திருத்தம் செய்யப்படாமல் அனுப்பி வைக்க முடியும். அப்படி தீர்மானத்தை அனுப்பி வைக்கும்போது ஆளுநர் அதை ஏற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதுதான் அவருக்கான ஒரே வழி. அதை இரண்டாவது முறை சட்டமன்றத்துக்கு திரும்ப அனுப்பும் உரிமை அவருக்கு இல்லை.

எந்தச் சட்டமும் அந்த மாநிலத்துக்குத் தேவையா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு மட்டுமே உள்ளதே தவிர, ஆளுநருக்கு இல்லை. அவர் அந்தத் தீர்மானத்தின் மீதான விளக்கங்களைக் கேட்டுப் பெறலாமே தவிர, அவராகவே முடிவெடுக்கும் உரிமை இல்லை. மேலும், மொத்தமாக நிராகரிக்கும் உரிமையும், திருத்தம் செய்யும் உரிமையும் அவருக்கு இல்லை. அவர் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று அனுப்பலாம். ஆனால், அதை ஏற்று மறுபரிசீலனை செய்வதும் செய்யாததும் மாநில சட்டமன்றத்தின் விருப்பமே. அதை மறுபரிசீலனை செய்யாமலே மாநில அரசு அனுப்ப முடியும். இது தவிர தமிழ்நாடு என்பது இந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலம்... யூனியன் பிரதேசம் அல்ல. அதனால், மாநிலங்களின் ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவர், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான அரசியல் தொடர்பான உறவுகளை மேம்படுத்தி ஒருங்கிணைப்பவரே தவிர, ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டு மாநில அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடும் உரிமை அரசியலமைப்பு சட்டப்படி அவருக்கு இல்லை.

stalin
stalin

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்வி என்பது அந்த மொழிவழி இனத்தின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலாசாரம்,வரலாறு சார்ந்ததாகவே இருக்க வேண்டும்.

’ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?’ என்று அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா. இதையேதான் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களும் அண்ணா அவர்களின் நினைவு நாளில், அதாவது நீட் தேர்வு தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய அந்த நாளில் நினைவு கூர்ந்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நீட் தேர்வு விலக்குக்கான தீர்மானம் என்பது மொத்தமுள்ள 234 உறுப்பினர்களில் 230 உறுப்பினர்கள் ஆதரவோடு - அதாவது 98 சதவிகித உறுப்பினர்கள் - நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம். சட்டமன்ற உறுப்பினர் என்பவர் தான் சார்ந்த சட்டமன்றத் தொகுதியின் மக்கள் பிரதிநிதி. அவர் ஒரு தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கிறார் என்றால் அந்த சட்டமன்றத் தொகுதி மக்களின் கருத்தை சட்டமன்றத்தில் பிரதிபலிக்கிறார் என்பதே பொருள். இப்படியாக பெரும்பான்மை பலத்தோடு ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆதரிக்கும் நீட் விலக்குக்கான தீர்மானத்தை திருப்பி அனுப்பியதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு ஆளுநர் மதிப்பளிக்கத் தவறியதாகவே தெரிகிறது.

ஆளுநர் மற்றும் மாநில அரசுக்குமான நீட் தொடர்பான பிரச்னை ஒருபுறம் இருந்தாலும், இதற்கான மூல காரணம் கல்வி என்பது பொதுப் பட்டியலில் இருப்பதுதான். எப்போது வரை கல்வி என்பது பொதுப் பட்டியலில் இருக்கிறதோ, அதுவரை கல்வியில் மாநிலங்களின் உரிமை என்பது கேள்விக்குறியே. 1976-ல் இந்தியாவில் பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியலமைப்பு சட்டம் 57வது பிரிவில், 42வது சட்ட திருத்தம் மூலமாக கல்வியானது பதிவு 11(என்ட்ரி 11) மாநில பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, பதிவு 25(என்ட்ரி 25) ஆக பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதன்பின், தமிழ்நாடு போன்ற மாநில சுயாட்சியை வலியுறுத்தும் சில மாநிலங்களில் இதற்கான எதிர்ப்புக் குரல் எழுந்தாலும், பெரிய அளவிலே அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. இதன் விளைவாக, இன்றுவரை கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றும் கோரிக்கை நிறைவேறாமலே இருக்கிறது.

இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட ஒரு துணை கண்டத்தில், அதுவும் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாநிலத்துக்கும் மொழி, கலாசாரம்,பண்பாடு என எல்லாம் மாறக்கூடிய ஓர் ஒன்றியத்தில், அந்த அந்த மொழிவழி தேசிய இனங்களோ, அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசோ அவர்களுக்கான கல்வி திட்டத்தை தீர்மானிப்பதே முறையாகும். ஏனென்றால் கல்வி என்பது அந்த மொழிவழி இனத்தின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலாசாரம்,வரலாறு சார்ந்ததாகவே இருக்க வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நீட் விலக்கு தீர்மானம் போலவே, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், மாநில சுயாட்சி பேசும் அரசியல் கட்சிகளும் எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், கடந்த 2022 பிப்ரவரி 4 அன்று நாடாளுமன்றத்தில் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரும் பொருட்டு தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் மாநில அரசுகள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள மாநில அரசுகளுக்கு முழு உரிமையும் பெறப்படும். இன்று கல்வியில் முன்னேறி இருக்கும் பல மாநிலங்கள் கல்விக்கென அந்த மாநிலங்களில் நிதி ஒதுக்கி பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றன. அப்படி இருக்கும்போது கல்வியில் மாநிலங்களுக்கான உரிமை என்பது அந்தந்த மாநிலங்களிடமே இருக்க வேண்டும் என்பதே சரி.

NEET 2022
NEET 2022

நீட் விலக்கு தீர்மானம் போலவே, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், மாநில சுயாட்சி பேசும் அரசியல் கட்சிகளும் எடுக்க வேண்டும். அதுமட்டுமே, கல்வியில் மாநிலங்களுக்கான உரிமையை நிலைநிறுத்த உதவும். கல்வியில் மாநிலங்களின் உரிமை காப்பாற்றப்பட்டு கூட்டாட்சி நிலைநிறுத்தப்படும் வரை நீட் போன்ற பல சிக்கல்களை மாநில அரசுகள் சந்தித்துதான் ஆக வேண்டியிருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism