Published:Updated:

``பிஸியா இருக்கிறோம்; நீதிமன்ற அவமதிப்பு செய்யவில்லை!''-நோட்டீஸுக்குப் பெரியார் பல்கலைக்கழகம் பதில்

``பட்டமளிப்பு விழா ஏற்பாட்டிற்காக ரொம்ப பிஸியாக இருக்கிறோம். எனக்குத் தெரிந்து நீதிமன்ற அவமதிப்பு எதையும் நாங்கள் செய்யவில்லை.''

பெரியார் பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகம் ( க.தனசேகரன் )

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. தமிழக ஆளுநர், உயர் கல்வித் துறை அமைச்சர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் எனப் பலரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாக உயர் கல்வித்துறை செயலாளர், பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் ( பொறுப்பு) ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இது பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துணை வேந்தர் குழந்தைவேல்
துணை வேந்தர் குழந்தைவேல்
க.தனசேகரன்

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழக ஊழியர்களிடம் கேட்டபோது, ``பெரியார் பல்கலைக்கழகத்தில் நெல்சன், குழந்தைவேலு உட்பட 5 பேர் தினக்கூலி அடிப்படையில் தற்காலிகப் பணியாளர்களாகச் சேர்ந்தார்கள். இவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாகவோ, நீதிமன்ற உத்தரவு மூலமாகவோ, தேர்வு எழுதியோ பணியில் சேராமல் துணைவேந்தரின் சிபாரிசு மூலமாகவும் பணியில் சேர்ந்தவர்கள்.

இவர்களுக்குப் பிறகு பல்கலைக்கழகம் முறையாக அரசாணையைப் பின்பற்றி விளம்பரம் கொடுத்து நேர்முகத் தேர்வு நடத்தி பலரையும் நியமித்தது. 2009 ல் நெல்சன், குழந்தைவேலு உட்பட 5 பேருக்குப் பல்கலைக்கழகம் பதவி உயர்வு கொடுக்க முடிவு செய்தது. முறையாக அவர்களுக்கு நிரந்தர அலுவலக உதவியாளர் பதவி கொடுக்க வேண்டும். ஆனால், நேரடியாக இளநிலை உதவியாளர் பதவி வழங்கியது. இதனால், முறையாக அரசாணை பின்பற்றிப் பதவியில் சேர்ந்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதால் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், `மீண்டும் பதவி உயர்வு கொடுக்கும் போது முறையாக அரசாணை பின்பற்றி நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்குப் பதவி உயர்வு கொடுத்த பிறகே நெல்சன், குழந்தைவேலு உட்பட 5 பேருக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவைப் பின்பற்றாமல் மீண்டும் நெல்சன், குழந்தைவேலுக்குப் பிரிவு அலுவலர் பதவி வழங்காமலேயே நேரடியாக உதவி பதிவாளர் பதவியை வழங்கி உயர் நீதிமன்ற உத்தரவை மீறி இருக்கிறார்கள். இதையடுத்து நேற்று மாலை உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் குழந்தைவேலு, பதிவாளர் (பொறுப்பு) தங்கவேலு ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது'' என்றார்கள்.

பெரியார் பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகம்

இதுபற்றி பதிவாளர் (பொறுப்பு) தங்கவேலிடம் கேட்டதற்கு, ``இன்று பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் ஆளுநர், அமைச்சர் எனப் பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நாங்கள் நேற்றிலிருந்து பட்டமளிப்பு விழா ஏற்பாட்டிற்காக ரொம்ப பிஸியாக இருக்கிறோம். எனக்குத் தெரிந்து நீதிமன்ற அவமதிப்பு எதையும் நாங்கள் செய்யவில்லை. நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பல்கலைக்கழகத்திற்கு வந்திருக்கலாம். ஆனால் நான் இன்னும் அந்த நோட்டீஸைப் பார்க்கவில்லை'' என்றார்.