Published:Updated:

வேகமெடுக்கும் புதிய கல்விக் கொள்கை: இந்திய கல்விக் கொள்கையில் மாற்றம் தேவைதானா?

புதிய தேசிய கல்விக் கொள்கை

`இந்தியக் கல்விக் கொள்கையில் மாற்றம் தேவையா?' என்ற நோக்கில் எழுப்பப்பட்டுவரும் கேள்விகளுக்கு பதில்தேடும்விதமாக இரண்டு தரப்பு கல்வியாளர்களிடமும் இதே கேள்வியை முன்வைத்தோம்.

வேகமெடுக்கும் புதிய கல்விக் கொள்கை: இந்திய கல்விக் கொள்கையில் மாற்றம் தேவைதானா?

`இந்தியக் கல்விக் கொள்கையில் மாற்றம் தேவையா?' என்ற நோக்கில் எழுப்பப்பட்டுவரும் கேள்விகளுக்கு பதில்தேடும்விதமாக இரண்டு தரப்பு கல்வியாளர்களிடமும் இதே கேள்வியை முன்வைத்தோம்.

Published:Updated:
புதிய தேசிய கல்விக் கொள்கை

கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை வாரணாசியில் மூன்று நாள் அகில இந்திய கல்வி மாநாடு நடைபெற்றது. மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி, ``ஆங்கிலேயர்கள் தங்களுக்கான வேலைகளைச் செய்யும் பணியாளர்களை உருவாக்கும் வகையில்தான் இந்தியாவில் ஒரு கல்வி முறையை அறிமுகப்படுத்தினர். அது ஒருபோதும் இந்திய கல்விமுறையாக இருக்க முடியாது. சுதந்திரத்துக்குப் பிறகு கல்வி முறையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டாலும், இன்னும் ஏராளமான மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கிறது. கல்வியைக் குறுகிய சிந்தனையிலிருந்து விடுவித்து, 21-ம் நூற்றாண்டின் நவீன சிந்தனைகளுடன் இணைப்பதே, தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடு. இது தாய்மொழிக் கல்விக்கு வழிவகுக்கிறது. சம்ஸ்கிருதம் போன்ற தொன்மையான மொழிகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கிறது. இதனால் விரைவில் உலகின் கல்வி மையமாக இந்தியா உருவெடுக்கும்" என நம்புவதாகத் தெரிவித்திருக்கிறார்.

 மோடி
மோடி
ட்விட்டர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதேபோல தமிழ்நாசு ஆளுநர் ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் இதே கருத்தைச் செல்லும் இடங்களிளெல்லாம் தொடர்ந்து பேசிவருகின்றனர். இந்த நிலையில், இந்தக் கருத்துகளை வரவேற்றும் எதிர்த்தும் பல்வேறு அரசியல் விமர்ச்சகர்கள் விவாதித்துவருகின்றனர். `இந்திய கல்விக் கொள்கையில் மாற்றம் தேவையா?' என்ற நோக்கில் எழுப்பப்பட்டுவரும் கேள்விகளுக்கு பதில்தேடும்விதமாக இரண்டு தரப்பு கல்வியாளர்களிடமும் இதே கேள்வியை முன்வைத்தோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கல்வியாளர் ஈ.பாலகுருசாமி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்:

``ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மாதிரியான கல்வியை போதித்தால், நாளை வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்கள் வெவ்வேறுவிதமாகப் புரிந்துகொள்ளப்படுவார்கள். இந்தியா போன்ற பல்வேறு மாநிலங்களைக்கொண்ட நாட்டுக்கு ஒருங்கிணைந்த ஒரு கல்விக் கொள்கை தேவை. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்குப் பிறகு அழிந்துபோன நம்முடைய பாரம்பர்யக் கல்விமுறையை மீட்டெடுப்பது மிக முக்கியம். அதேபோல இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த ஒரு புதிய கல்விக்கொள்கை அவசியம். அப்படி, இந்திய இளைஞர்களுக்கு 21-ம் நூற்றாண்டுக்குத் தேவையான தகுதிகளை வளர்க்கவும், வேலைவாய்ப்புகளைப் பெறவும், தொழில்முனைவோர்களாக உருவாக்கவும் வழிசெய்வதே இந்தப் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்.

பாலகுருசாமி
பாலகுருசாமி

தற்போது, இந்தியாவில் பொறியியல் படித்தவர்கள் 85% வேலைவாய்ப்பற்றவர்களாக இருக்கிறார்கள். கலை, அறிவியல் படித்த 90% பேருக்கு வேலையில்லை. ஏனென்றால், அவர்களுக்குத் திறமை இல்லை; வேலை செய்யத் தெரியாது, சிந்திக்கத் தெரியாது, ஒரு ஃபார்முலாவைக்கூட தீர்க்கத் தெரியாது. மேலும், தற்போது தொழில்துறையில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. கடந்த பத்தாண்டுகளாக Data Science, AI, Robotics, Machine Learning என Fourth Industrial Revolution நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதற்குத் தகுதி படைத்த மாணவர்களை நமது கல்வி முறையால் உருவாக்க முடியுமா... உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் எந்தவோர் இந்திய பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை. காரணம் நம்மிடம் ஆராய்ச்சித்திறனை வளர்க்கக்கூடிய கல்விமுறை இல்லை. மாணவர்களுக்கு மதிப்பெண்ணையும் டிகிரியையும் மட்டுமே கொடுக்கும் இந்தப் பல்கலைக்கழகங்கள் அவர்களுக்கு அறிவுத்திறனை, ஆராய்ச்சித்திறனை, சிந்திக்கும் திறனை வளர்க்காமல் விட்டுவிட்டன. முதலில் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கே இந்தத் திறமைகள் இல்லை; இந்தக் குறைபாடுகள் எல்லாவற்றையும் தீர்க்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது.

புதிய கல்விக்கொள்கை
புதிய கல்விக்கொள்கை
விகடன்

கல்வியில் தமிழ்நாடு No.1, உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 51 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதிகம் பேர் படிக்கிறார்கள் என்பது உண்மைதான், ஆனால் தரம் (Quality) இல்லையே! எங்களுக்கு தமிழ், ஆங்கிலம் இரு மொழிகள் போதும் எனச் சொல்பவர்கள் இரண்டு மொழிகளையுமே முறையாக மாணவர்களுக்குக் கற்பிக்கவில்லை. தமிழக மாணவர்களிடம் Communication Skills என்பது அறவே இல்லை. இவை எல்லாவற்றையுமே மாற்ற வேண்டும். Morally, Ethically, Technically மாணவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் உருவாக்க வேண்டும். மெக்காலே கல்விமுறை, ஆங்கிலேயர்கள் சொல்லும் வேலைகளை அடிமைபோலச் செய்வதற்காக உருவாக்கப்பட்டது. அதை நாம் மாற்றாமல் விட்டுவிட்டோம். அடுத்தடுத்த தலைவர்கள் பல்வேறு பாலிசிகளைக் கொண்டுவந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்தாமல் விட்டுவிட்டோம். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டும். அதற்குப் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் இன்னும் பத்தாண்டுகளில் இந்தியாவிலுள்ள இளைஞர்கள் புத்திசாலிகளாகவும், தைரியமும் திறமையும் படைத்தவர்களாகவும் வருவார்கள்."

கல்வியாளர் சபாபதி மோகன், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்:

``பல்வேறு மாநிலங்கள், மொழிகள், இனங்கள், கலாசாரங்கள், நிலப்பரப்புகள் என பன்மைத்துவம் வாய்ந்த ஒரு நாட்டில் ஒரே கல்விமுறை என்பது பொருத்தமற்றது. ஏன் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களிலேயே ஒரே பாடத்திட்டம் கிடையாது. அப்படி இருக்கவும் முடியாது. இவர்கள் சொல்வதுபோல, மெக்காலே கல்வி முறையெல்லாம் இப்போது இந்தியாவில் இல்லை. சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில் கல்விமுறை எவ்வளவோ மாறிவிட்டது. இந்தியா முழுக்க குறைந்தது மூன்று ஆண்டுகளிலாவது பல்கலைக்கழக, கல்லூரி பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு புதிய சிந்தனைகள், புதிய புத்தகங்கள் என அப்டேட்டுடன் புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

சபாபதி மோகன் முன்னாள் துணை வேந்தர்
சபாபதி மோகன் முன்னாள் துணை வேந்தர்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பொதுவாகக் கல்விக்கு ஒரு தகுதி இருக்கிறது, வேலைவாய்ப்புக்கு ஒரு தகுதி இருக்கிறது. இவற்றுக்கிடையேயான இடைவெளியைக் களைந்து ஓர் இணைப்புப் பாலத்தை உருவாக்கும்விதமாக தமிழ்நாடு அரசும் உயர்கல்வித்துறையும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்த `இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. உயர்கல்வி நிலையங்களில் Incubation Center, Data Center எனப் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், தமிழக மாணவர்கள், இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாமல், அறிவில், சிந்தனை, ஆற்றல், திறமை அனைத்திலும் மேம்பட்டு வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் `நான்‌ முதல்வன்'‌ என்ற திறன்‌ மேம்பாட்டு மற்றும்‌ வழிகாட்டுதல்‌ திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டானின் கொண்டுவந்திருக்கிறார்.

`நான் முதல்வன்’ திட்டம் தொடக்கம்
`நான் முதல்வன்’ திட்டம் தொடக்கம்

மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு தகுதியை உருவாக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஹைடெக் ஐடி கம்பெனிகள், லெதர், காட்டன் இண்டஸ்ட்ரீஸ் போன்ற தொழில் நிறுவனங்களை டைஅப் செய்து மாணவர்களுக்குக் குறைந்தது ஆறு மாதகாலப் பயற்சி வழங்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, ஐ.டி.ஐ போன்ற தொழிற்கல்வி கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த 100 கோடி ஒதுக்கீடு செய்தும், கல்லூரிகளின் அருகில் இருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுடன் டைஅப் செய்து மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

தேசியக் கல்விக்கொள்கை
தேசியக் கல்விக்கொள்கை

அதுமட்டுமல்லாமல், அரசுக் கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்புகூட, பயோடெக் மாணவர்களின் கல்வி, ஆராய்ச்சித்திறனை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் டிட்கோ-டைடல் பூங்காவும் இணைந்த டைசல் நிறுவனத்துடன் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நம் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. புதிய கல்விக் கொள்கையில் உள்ள சில அம்சங்கள் குலக்கல்வியை மீண்டும் கொண்டுவருவதாவும், சம்ஸ்கிருதத் திணிப்பை கொண்டதாகவும் இருக்கின்றன. அதேசமயம், புதிய கல்விக் கொள்கை நோக்கமாக மத்திய அரசு சொல்லும் நேர்மறையான விஷயங்கள் அனைத்தும் மாநிலப் பாடத்திட்டத்தின் மூலம் சிறப்பாக தமிழ்நாட்டில் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. எந்த மாநிலம் கல்வித்துறையில் பின்தங்கியிருக்கிறதோ, எந்த மாநிலம் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறதோ அந்தந்த மாநிலங்களின் கல்விமுறையில் மத்திய அரசு மாற்றத்தை ஏற்படுத்தட்டும். தமிழ்நாட்டுக்கு புதிய கல்விக் கொள்கை எப்போதுமே தேவையில்லை. முதலில் கல்வியை அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைத்தாலே சிறந்த வளர்ச்சியை அடைய முடியும்" என்றார்.