Published:Updated:

"புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தால் 17 பி சட்டம்!" - மிரட்டுகிறார்களா நீலகிரி மாவட்ட அதிகாரிகள்?

ரா.சதீஸ்குமார்

நீலகிரி மாவட்டக் கல்வி அலுவலர் நாசருதின், போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

Jacto-Geo Strike
Jacto-Geo Strike

தேசியப் புதிய கல்விக் கொள்கை 2019-ஐ அறிவித்த நாளிலிருந்து நாடு முழுக்க பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன. புதிய கல்விக் கொள்கை 2019-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்த ஜாக்டோ - ஜியோ அமைப்பு திட்டமிட்டு, நேற்று (6-ம் தேதி) மாலை நேர போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், தமிழக அரசு மீண்டும் 17 b சட்டம் என்ற ஒடுக்குமுறை ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளது, என ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.

Jacto-Geo Protest
Jacto-Geo Protest

இந்த நிலையில், நீலகிரி மாவட்டக் கல்வி அலுவலர் நாசருதின் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள எச்சரிக்கை சுற்றறிக்கையில், "சில ஆசிரியர் சங்கங்கள் சார்பில் 6-ம் தேதி முதல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பள்ளிகளுக்கு பல நாள்கள் விடுமுறை வழங்கப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இன்னல்கள் ஏற்படும் நிலையை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டாம். நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த அறிவுரைகளைப் பின்பற்றாமல் 6-ம் தேதி அரசுக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்குபெற்றாலோ அல்லது பிற ஆசிரியர்களைப் பங்கு பெறத் தூண்டும் விதத்தில் செயல்பட்டாலோ மற்றும் பள்ளி வளாகத்தில் கோரிக்கைகள் சார்பான போராட்டம் நடத்தினாலோ, தமிழ்நாடு குடிமுறைப் பணி ஒழுங்கு நடவடிக்கை 17(பி)ன்கீழ் உடன் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது" என எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "இந்தப் புதிய கல்விக் கொள்கை அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை நேரடியாகப் பாதிக்கும் முறையாக உள்ளது. மேலும், பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு முறை உள்ளது. இது, மாணவர்களைத் தேர்வு பயத்தில் மன உளைச்சலை ஏற்படுத்தும். மேலும், பள்ளிகளின் இணைப்பு மூலம் அரசு தொடக்கப் பள்ளிகளை இல்லாமல் செய்யும். மேலும், பழங்குடி மற்றும் முதல் தலைமுறை மாணவர்கள் பள்ளிப் படிப்பையே முழுமையாக முடிக்காமல் வெளியில் செல்லும் நிலைக்குத் தள்ளப்படும். எனவே, இந்தக் கல்வி கொள்கையைத் தமிழகத்தில் ரத்துசெய்ய வேண்டும். மேலும், இதுகுறித்து பேசினாலோ அல்லது பேட்டி அளித்தாலோ கடுமையான நடவடிக்கை எடுப்போம் எனக் கல்வி அதிகாரிகள் ஆரம்பம் முதல் மிரட்டி வருகின்றனர்” என்றார்.

Jacto-Geo Protest
Jacto-Geo Protest

இதுகுறித்து நீலகிரி மாவட்ட அரசு ஊழியர் சங்கத் தலைவர் முத்துக்குமார், "தற்போது புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்தவுள்ளோம். இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் தற்போது மீண்டும் 17b சட்டத்தைக் காட்டி மிரட்டுகின்றனர். நீலகிரி மாவட்டக் கல்வி அலுவலர் நாசருதின் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இதுபோன்று சுற்றறிக்கை வெளியிடவில்லை.

நீலகிரியில் ஆசிரியர் போராட்டங்களை ஆரம்பத்திலேயே ஒடுக்கும் நோக்கில் செயல்படும் அதிகாரிகளைக் கண்டிக்கிறோம். மேலும், கூடலூர், கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள்மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

Jacto-Geo Protest
Jacto-Geo Protest

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஆசிரியர்களிடையே பிளவை ஏற்படுத்தி போராட்டத்தை ஒடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். கட்டாயப் பணி மாறுதல், பதவி உயர்வுக்குத் தடை, ஊக்க ஊதியம் பாதிப்பு போன்றவற்றைக் காரணம் காட்டி போராட்டத்தைத் தடுக்கும் முயற்சியில் உள்ளனர்” என்றார்.

இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி கூறுகையில், "மாணவர்களின் கல்வியைக் கேள்விக்குறியாக்கும் தேசியப் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஆதரித்துள்ள நிலையில், அரசு ஆசிரியர்கள் இதை எதிர்த்துப் போராட முன்வந்துள்ளதே வரவேற்க வேண்டிய ஒன்று.

Nilgiri Cheif Education Officer
Nilgiri Cheif Education Officer

இதனுடன் சேர்த்து 9 அம்ச கோரிக்கைகளை முன்னெடுத்து 6-ம் தேதி ஒன்றிய அளவிலான மாலை நேர ஆர்ப்பாட்டமும் (நேற்று), 13-ம் தேதி மாவட்ட அளவிலான பேரணியும், 24-ம் தேதி மாவட்ட அளவிலான உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறவுள்ளது. திட்டமிட்டபடி போராட்டங்கள் நடைபெறும்." என்றார்.