Published:Updated:

3 ஆண்டுகளில் 9 தற்கொலைகள்: என்ன நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி-யில்?

ஃபாத்திமா லத்தீப், சென்னை ஐ.ஐ.டி-யில் நிகழும் முதல் தற்கொலை அல்ல. 2016-ம் ஆண்டு தொடங்கி அங்கே 9 தற்கொலைகள் நடந்திருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.

மாணவி ஃபாத்திமா லத்தீப் ஐ.ஐ.டி
மாணவி ஃபாத்திமா லத்தீப் ஐ.ஐ.டி

சென்னை ஐ.ஐ.டி-யில் படித்த 19 வயது மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் மரணம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியிருக்கிறது. இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.டி-யில் சேர்வது என்பது ப்ளஸ் டூ படிக்கும் எந்த ஒரு மாணவருக்கும் கனவாக இருக்கும். ஐ.ஐ.டி-யில் படிப்பவர்கள் எல்லோருக்குமே தனித்த அறிவுத்திறன் இருக்கும் என்று பிள்ளைகளின் பெற்றோராலும், இந்தக் கல்விச் சூழலாலும் புகட்டி வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அறிவுத் திறனை வளர்க்கும் அதே ஐ.ஐ.டி, தனியொரு மாணவரின் நலனில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக்கொள்கிறது என்பதைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது மானுடம் மற்றும் சமூக அறிவியல் துறை மாணவியான ஃபாத்திமாவின் மரணம்.

அண்மையில் பிரதமர் மோடி சென்னை ஐ.ஐ.டி-யில் பேசியபோது...
அண்மையில் பிரதமர் மோடி சென்னை ஐ.ஐ.டி-யில் பேசியபோது...

`ஃபாத்திமா படிப்பில் முதலிடம். அதனால், படிப்பு கொடுத்த அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை' என்கிறார் அவரின் தந்தை அப்துல் லத்தீப். முதலிடம் பெற்றதாலேயே அவருக்குப் படிப்பு சார்ந்த அழுத்தம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று நாம் மறுதலிக்க முடியாது. உண்மையில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்கிற புறச்சூழல் தரும் அழுத்தம் முதலிடம் பிடிக்கும் மாணவர்களால் மட்டுமே உணர முடியும்.

2016-ல் மட்டும் தொடர்ச்சியாக நான்கு பேர் ஐ.ஐ.டி வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இதில் மூன்று பேர் மாணவர்கள்.
2000-ம் ஆண்டு வரை மும்பை ஐ.ஐ.டி-யில் படித்துவிட்டு அடுத்தகட்டமாக அமெரிக்கா சென்றவர்கள் 41 சதவிகிதம் பேர்.
`ஐ.ஐ.டி -யில் மட்டும் ஏன் இவ்வளவு பிரிவினைகள்?’- ஃபாத்திமா விவகாரத்தில் கொதிக்கும் கேரள அமைச்சர்

அமெரிக்கத் தொழில்வளர்ச்சிக்குப் போட்டியாக இந்தியாவிலேயே தொழில்நுட்பக் களத்தை உருவாக்க, நிபுணர்கள் பரிந்துரையின் பேரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உருவாக்கியவை மத்திய அரசின் ஐ.ஐ.டி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள். இவற்றில் சென்னையில் இருக்கும் ஐ.ஐ.டி மெட்ராஸ், 1959-ல் உருவாக்கப்பட்டது. ஐ.ஐ.டி-யில் படித்துவிட்டால் அதோடு எதிர்பார்ப்புகள் நின்றுவிடுவதில்லை. அங்கே படித்தவர்கள் அடுத்தகட்டமாக அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி. 2000-ம் ஆண்டு வரை மும்பை ஐ.ஐ.டி-யில் படித்துவிட்டு அடுத்தகட்டமாக அமெரிக்கா சென்றவர்கள் 41 சதவிகிதம் பேர். கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை கரக்பூர் ஐ.ஐ.டி-யில் படித்தவர். அமெரிக்காவுக்குப் போட்டியாக தொழில்நுட்பத்துறையை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்கிற நேருவின் இந்தியக் கனவுக்கு நகைமுரணாகவே அமைந்தது ஐ.ஐ.டி.

ஃபாத்திமா லத்தீப் மரணம், சென்னை ஐ.ஐ.டி-யில் நிகழும் முதல் தற்கொலை அல்ல. 2016-ம் ஆண்டு தொடங்கி அங்கே 9 தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன என்று செய்திகள் வெளிவருகின்றன. 2018-ல் கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இதே சென்னை ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்துகொண்டார். வருகைப் பதிவேட்டில் பற்றாக்குறை (Attendance Deficiency) காரணமாக, அவர் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்பட்டது. இவை தவிர, ஆய்வு மாணவர் ஒருவரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலைத் தொழில்நுட்ப மாணவர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டார்கள். மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது காரணமாகக் கூறப்பட்டாலும் இன்று வரை தற்கொலைக்கான சரியான காரணம் தெரியவரவில்லை. இவர்கள் தவிர, 2018-ல் தனிப்பட்ட காரணங்களுக்காகப் பேராசிரியர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டார். 2016-ல் மட்டும் தொடர்ச்சியாக நான்கு பேர் ஐ.ஐ.டி வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இதில் மூன்று பேர் மாணவர்கள்.

ஃபாத்திமா
ஃபாத்திமா

ஃபாத்திமாவின் தற்கொலை அங்கே நிகழ்ந்திருக்கும் ஒன்பதாவது மரணம். ஆனால், இத்தனைக்குப் பிறகும் மாணவர்கள் நலனில் ஐ.ஐ.டி ஒரு கல்வி நிறுவனமாக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்கிற கேள்வி எழுகிறது. ஐ.ஐ.டி நிர்வாகத்தால் மாணவர்களுக்காக கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அத்தனையும் மீறி தற்கொலைகள் தொடர்வது எதனால்? மனரீதியாகச் சிக்கல், மன அழுத்தம் மட்டும்தான் பிரச்னை என்று கூறிக் கடப்பது சரியா?

ஐ.ஐ.டி-யிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாணவர் ஒருவர், அங்கே படிக்கும் மாணவிகளுக்குத் தகாத வகையில் தொடர்ச்சியாகச் செய்திகள் அனுப்பிவந்திருக்கிறார். அதுகுறித்து மாணவர்கள் ஒருங்கிணைந்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒருவகையில் பிரச்னையின்மீது நடவடிக்கை எடுக்கத் தவறியிருக்கிறது அந்த நிர்வாகத்தின் மாணவர்கள் நலன்துறை. பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் அதன்மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னாலும் இதுவரை அந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது கேள்விக்குறி!

ஃபாத்திமா - ரோகித் - பாயல்
ஃபாத்திமா - ரோகித் - பாயல்

ஃபாத்திமாவின் மரணம் மத அடையாளத்தால் நிகழ்ந்த நிறுவனப் படுகொலை என்று ஒருபக்கம் கூறப்படுகிறது. பேராசிரியர் ஒருவர்தான் ஃபாத்திமாவின் மரணத்துக்குக் காரணம் என, ஃபாத்திமா எழுதியுள்ளதாகச் சில செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. மரணம் குறித்த விசாரணை ஒருபக்கம் நடைபெற்று வருகிறது.

இன்னொரு பக்கம், வருகைப் பற்றாக்குறைக்காக உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு மாணவர் தூண்டப்படுகிறார் என்றால், மற்ற மாணவர்களின் தற்கொலையைப் பொறுத்தவரை அவை மன அழுத்தம் என்று மட்டும் எளிதாகக் கடந்துவிடமுடியவில்லை. ஐ.ஐ.டி-யின் கல்விச் சூழல் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியிருக்கிறது.

ரோகித், பாயல்... இப்போது ஃபாத்திமா - மாணவர்கள் தற்கொலைகள் தொடர்வது ஏன்?

ஒரு கல்வி நிர்வாகமாகத் தனது நிர்வாகத் திறனை மீளாய்வு செய்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன ஐ.ஐ.டி-கள். இந்தியாவின் தலைசிறந்த அரசு கல்விநிறுவனத்தில் படிக்கும் பிள்ளைகளும், இந்தியாவின் தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிள்ளைகளும் கல்விச்சூழல் மனஅழுத்தம் என்கிற ஒரே காரணத்துக்காகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்றால் இங்கே விவாதிக்கப்பட வேண்டியது மாணவர்களின் மனநலன் அல்ல; அந்தக் கல்வி நிறுவனங்களின் கல்விச்சூழல்தான்.