Published:Updated:

`மாலை 3.30 மணிக்குத்தான் சத்துணவு சாப்பாடு!' - டீசலுக்குக்கூட வழியில்லாமல் தவிக்கும் புதுவை அரசு

டீசல் வாங்கப் பணம் இல்லாததால் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மதிய உணவு மாலை வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

புதுச்சேரி மாநிலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாடு, டீசல் தட்டுப்பாடு, காய்கறிகள் தட்டுப்பாடு, அரசு ஊழியர்களுக்குப் பல மாதங்களாக சம்பள நிலுவை என திணறிக்கொண்டிருக்கிறது புதுச்சேரி அரசு.

பள்ளியில் இறக்கி வைக்கப்படும் மதிய உணவு
பள்ளியில் இறக்கி வைக்கப்படும் மதிய உணவு

அதேபோல பாப்ஸ்கோ, கான்ஃபெட், அமுதசுரபி உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான பெட்ரோல் பங்குகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரின் வாகனங்களுக்குக் கடனில் பெட்ரோல், டீசல்கள் நிரப்பப்பட்டு வந்தன. அரசுத் தரப்பில் இருந்து வரவேண்டிய தொகை வராததால் நஷ்டத்தில் இயங்கிய பாப்ஸ்கோ, கான்ஃபெட் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன.

இதையடுத்து, அமுதசுரபி மட்டும் அமைச்சர்களுக்கு கடனில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டிருந்தது. ஆனால், அங்கும் கடன் பாக்கி 2.3 கோடி ரூபாயைத் தொட்டுவிட்டதால், ``அமைச்சர்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப முடியாது” என்று தெரிவித்த அமுதசுரபி நிர்வாகம், கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனின் வாகனத்துக்குப் பெட்ரோல் நிரப்பாமல் திருப்பி அனுப்பியது. அதையடுத்து அமைச்சர் கமலக்கண்னன் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்காக காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு அரசுப் பேருந்தில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அரசுப் பேருந்தில் செல்லும் அமைச்சர் கமலக்கண்ணன்
அரசுப் பேருந்தில் செல்லும் அமைச்சர் கமலக்கண்ணன்

இந்த வரிசையில் தற்போது பள்ளி மாணவர்களையும் புலம்ப வைத்திருக்கிறது அரசு. புதுச்சேரியில் 161 ஆரம்பப் பள்ளிகளும் 37 நடுநிலைப் பள்ளிகளும் 44 உயர்நிலைப் பள்ளிகளும் 43 மேல்நிலைப் பள்ளிகளும் 26 அரசு உதவிபெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. அதேபோல காரைக்காலில் 107 பள்ளிகளும் மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் 42 பள்ளிகளும் இயங்கி வருகின்றன.

இவற்றில் படிக்கும் மாணவ, மாணவிகள் சுமார் 1,00,000 பேருக்கு மதிய உணவுத் திட்டத்தின்கீழ் உணவு வழங்கப்பட்டு வருகின்றது. அதற்காக புதுச்சேரியில் மட்டும் சேதராப்பட்டு, கூனிச்சம்பட்டு, கிருமாம்பாக்கம், குருசுக்குப்பம், அரியாங்குப்பம், பிள்ளைச்சாவடி, சண்முகாபுரம், லாஸ்பேட்டை, தொண்டமாநத்தம், ஏம்பலம், வில்லியனூர், கல்மண்டபம், கலிதீர்த்தால்குப்பம் உள்ளிட்ட இடங்களில் 10 மத்திய சமையல் கூடங்கள் இயங்கி வருகின்றன.

மாணவர்கள்
மாணவர்கள்

ஆனால், கடந்த சில மாதங்களாக இவற்றில் தயாரிக்கப்படும் உணவு பள்ளிகளுக்குச் சரியான நேரத்தில் செல்வதில்லை என்பதுடன், மாணவர்களுக்கு மதியம் வழங்க வேண்டிய உணவு மாலைதான் வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ காட்சியில், D.L.D என்று எழுதப்பட்ட திறந்தவெளி மினி வேன் அரசுப்பள்ளி ஒன்றினுள் நுழைந்து மதிய உணவை இறக்குகிறது.

அங்கு மாணவர்கள் தரையில் அமர்ந்திருக்கிறார்கள். அதைக்காட்டி பின்னணியில் பேசும் ஒருவர், `இது மண்ணாடிப்பட்டு கொம்யூனில் இருக்கும் குமாரபாளையம் அரசுத் தொடக்கப்பள்ளி. மதிய உணவை எத்தனை மணிக்கு எடுத்துவருகிறார்கள் பாருங்கள்' என்று தனது கைக்கடிகாரத்தைக் காட்டுகிறார்.

மதிய உணவுத் திட்டம்
மதிய உணவுத் திட்டம்

தொடர்ந்து பேசும் அவர், ``மாணவர்கள் அனைவரும் பசியுடன் அமர்ந்திருக்கிறார்கள் (காட்சியில் மாணவர்களைக் காட்டுகிறார்). கடந்த 2 மாதங்களாக தினமும் இப்படி மாலை 3.30 மணிக்கு மேல்தான் உணவை வழங்குகிறார்கள். இன்னும் 45 நிமிடங்களில் மாணவர்கள் வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். இதுதொடர்பாக கல்வி வட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று கூறுவதுடன் அந்தக் காட்சி முடிவடைகிறது.

மற்றொரு வீடியோவில் பேசும் உணவை எடுத்து வந்த மினி லாரியின் ஓட்டுநர், ``எங்களுக்கு தொண்டாமாநத்தம் சமையல்கூடம். அங்கு கடந்த 2 மாசமா டீசல் கொடுக்கவில்லை. போன மாசம் முழுக்க சண்முகாபுரம் கேண்டீனில் சப்ளை செய்தார்கள். அவர்களுக்குப் போக மீதியைத்தான் எங்களுக்குக் கொடுப்பாங்க. அதனாலதான் லேட். இப்போ இங்க (தொண்டமாநத்தம்) அதைவிட மோசமா லேட் ஆகுது.

புதுச்சேரி அரசு கல்வித்துறை
புதுச்சேரி அரசு கல்வித்துறை

12.30 மணிக்கு உணவைக் கொடுத்தால்கூட 1.30 மணிக்கு பள்ளிக்கு எடுத்து வந்துவிடுவோம். ஆனால் அங்கேயே 1.30 மணிக்குத்தான் கொடுக்கிறார்கள்” என்றவரிடம்,

``இதுகுறித்து நீங்கள் அதிகாரிகளுக்கு புகார் அளித்தீர்களா?” என்று பின்னணியில் கேள்வி கேட்கப்படும்போது, ``புகார் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்கிறார் அந்த ஓட்டுநர்.

`ரொட்டியும் உப்பும்தான் சத்துணவு!' - வீடியோ எடுத்த பத்திரிகையாளர் மீது உ.பி அரசு வழக்கு

`அதற்கு உங்கள் வண்டியால்தான் தாமதமாகிறது' என்று அதிகாரிகள் கூறுகிறார்களே என்று கேட்கப்படும் கேள்விக்கு, `` சரி என்னைக்காவது ஒருநாள் ரிப்பேர் ஆகலாம். 2 மாசம் தொடர்ந்தா ரிப்பேர் ஆகுமா.. என் வண்டிதான் ரிப்பேர் ஆகிறது சரி. செல்லிப்பட்டு, சேதராப்பட்டில் இருப்பவர்களுக்கு போன் செய்து கேட்டுப்பாருங்க. அந்த லைன்லதான் மோசமா இருக்குது” என்று கூறுவதுடன் அந்தக் காட்சி முடிகிறது.

புதுச்சேரி அரசு தொடக்கப்பள்ளி
புதுச்சேரி அரசு தொடக்கப்பள்ளி

இதுகுறித்து விளக்கம் கேட்க கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனைத் தொடர்புகொண்டோம். ``இது தொடர்பாக எந்தப் புகாரும் எனக்கு வரவில்லை. இருந்தாலும் உடனே அதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்” என்றவர், அடுத்த சில நிமிடங்களில் நம்மைத் தொடர்புகொண்டு,

``இந்த விவகாரத்தை உடனே கவனத்துக்குக் கொண்டுவந்ததற்கு நன்றி. கல்வித்துறை அதிகாரிகளுடன் பேசினேன். அனைத்து சமையல்கூடங்களுக்கும் எரிவாயுக் குழாய்கள் பொருத்தப்பட்டுவிட்டன. வில்லியனூர் சமையல்கூடம் மட்டும் இன்னும் டீசல் முறையில்தான் இயங்கி வருகின்றது. அதனால் ஒருநாள்தான் தாமதமானது என்கிறார்கள். இருந்தாலும் நானே நேரில் சென்று அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்” என்று உறுதியளித்தார்.