Published:Updated:

`நீட் தேர்வு நடத்தும் அதே அமைப்பு...!' -ஜே.என்.யூ நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

மருத்துவக் கல்விக்கான நீட் தகுதித் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமைதான், இந்தாண்டு முதல் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வையும் நடத்த இருக்கிறது.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன. 2 மார்ச் 2020 தொடங்கி 31 மார்ச் 2020 வரை நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. 11 மே 2020 தொடங்கி 14 மே 2020 வரை நுழைவுத் தேர்வுகள் நடைபெறுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

மருத்துவக் கல்விக்கான நீட் தகுதித் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமைதான் இந்தாண்டு முதல் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வையும் நடத்த இருக்கிறது. தேசியத் தேர்வு முகமை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு சிறப்புப் பிரிவாகச் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முகமை, பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வை நடத்தும் பொறுப்பு தங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதைக் கணினி வழியில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

தேர்வு முகமையின் கணினி வழித்தேர்வு வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மாணவர்களுக்கும் கிராமப்புறப் பகுதிகளில் வாழும் மாணவர்களுக்கும் கடினமாக இருக்கும் எனக்கூறி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அமைப்புகள் இதற்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு