Published:Updated:

காட்டாற்றைக் கடந்து படித்த பழங்குடி மாணவியின் நர்ஸிங் கனவு... நிறைவேற்றுமா தமிழக அரசு?

மாணவி மகாலட்சுமி

சின்னூரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர், காட்டில் நடந்து 3 ஓடைகளைக் கடந்துதான் பெரியகுளத்தை அடைய முடியும். கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் தொட்டிகட்டித்தான் தூக்கிச் செல்ல முடியும். மழைக்காலத்தின்போது ஓடை காட்டாறாக மாறிவிடும்; கடப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.

காட்டாற்றைக் கடந்து படித்த பழங்குடி மாணவியின் நர்ஸிங் கனவு... நிறைவேற்றுமா தமிழக அரசு?

சின்னூரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர், காட்டில் நடந்து 3 ஓடைகளைக் கடந்துதான் பெரியகுளத்தை அடைய முடியும். கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் தொட்டிகட்டித்தான் தூக்கிச் செல்ல முடியும். மழைக்காலத்தின்போது ஓடை காட்டாறாக மாறிவிடும்; கடப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.

Published:Updated:
மாணவி மகாலட்சுமி

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலையில்,  கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் வெள்ளக்கவி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர், கடப்பாரை, பெரியூர் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதியைச் சேர்ந்த பளியர், புலையர் இன மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. குறிப்பாக, சாலை வசதி இல்லாததால் காட்டில் பல ஓடைகளைக் கடந்து தேனி மாவட்டம் பெரியகுளம் வழியாகத்தான் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க வர முடியும்.

ஓடையைக் கடக்கும் பழங்குடி மக்கள்
ஓடையைக் கடக்கும் பழங்குடி மக்கள்

இப்பகுதி மாணவர்களும்கூட காட்டு வழியாக நடந்தே, பெரியகுளம், போடிக்கு சென்றுதான் படிக்க முடியும். அவ்வாறு அரசுப் பள்ளியில் ப்ளஸ் டூ படித்த பழங்குடி மாணவி மகாலட்சுமி, பி.எஸ்ஸி நர்ஸிங் படிக்க விரும்பியுள்ளார். கவுன்சலிங்கில் அவருக்குத் தனியார் கல்லூரி கிடைக்க, கட்டணம் செலுத்த முடியாத நிலையில் படிப்பை கைவிட்டுள்ளார். 

பழங்குடி மாணவி மகாலட்சுமியிடம் பேசினோம்... ``நாங்கள் வாழும் இடம் கொடைக்கானல் மலைப்பகுதியாக இருந்தாலும், கொடைக்கானலுக்கு செல்ல வழியில்லை. மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு தேனி மாவட்டம் பெரியகுளத்துக்குதான் வர முடியும்.

மகாலட்சுமி
மகாலட்சுமி

சின்னூரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் காட்டில் நடந்து, பி.ஆர் ஓடை, பாப்பம்பாறை ஓடை, கல்லாறு ஓடைகளைக் கடந்துதான் பெரியகுளம், வத்தலக்குண்டு அடைய முடியும். இங்குள்ள கர்ப்பிணிகளுக்கு பிரசவவலி ஏற்பட்டால் தொட்டி கட்டித்தான் தூக்கிச் செல்ல முடியும். மழைக்காலத்தில் மூன்று ஓடைகளையும் கடக்கவே முடியாது. ஓடை காட்டாறாக மாறிவிடும். அப்போது ஓடையைக் கடப்பது மிகவும் சவாலானதாக இருக்கும். 

எங்களுக்கு ரேஷன் அரிசி கொடைக்கானலில்தான் கிடைக்கும். அல்லது கல்லாற்றில் கிடைக்கும். கொடைக்கானல் செல்ல வேண்டும் என்றால் பெரியகுளம் வந்துதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கீழே இருந்து அரிசி அல்லது வேறேதும் பொருள்களைக் கொண்டு வர வேண்டும் என்றால் குதிரை, கழுதை மூலமாகத்தான் கொண்டு வர முடியும். அதற்குக் கட்டணமாக 500 ரூபாய் கொடுக்க வேண்டும். எங்கள் பகுதிக்கு தேர்தலின்போது ஓட்டுப் பெட்டிகள் பெரியகுளம் சோத்துப்பாறை அணை வழியாக கழுதை மூலமாகவே கொண்டுவரப்படும். 

ஓடை
ஓடை

மின்விளக்கு, சாலை, கழிப்பறை, மருத்துவம் என எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத சூழலில், இங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி எட்டா கனியாகவே உள்ளது. அதையும் மீறி போடி, பெரியகுளத்துக்குச் சென்று படித்தாலும் பொருளாதாரப் பிரச்னை, போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களால் யாரும் 10-ம் வகுப்பைக்கூட தாண்டுவது இல்லை. தற்போது எங்கள் பகுதியைச் சேர்ந்த 18 பேர், போடியில் உள்ள பள்ளிகளில் இலவச விடுதிகளில் தங்கிப் படித்து வருகின்றனர். 

என் பெற்றோர் நாகராஜ், ராஜேஸ்வரி ஆகியோர் உட்பட இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காப்பிக் கொட்டை எடுப்பது, இலவம் பஞ்சு எடுப்பது ஆகிய வேலைக்குச் செல்வார்கள். கூலியாக 200 ரூபாய் கிடைக்கும். ஆனால், வாரம் முழுவதும் வேலை கிடைக்காது. என் பெற்றோருக்கு 3 பெண் பிள்ளைகள், இரண்டு ஆண் பிள்ளைகள். யாரும் 12-ம் வகுப்பைத் தாண்டவில்லை.

சின்னூர் பகுதி
சின்னூர் பகுதி

நான் போடி பங்கஜம் மேல்நிலைப் பள்ளியில் ப்யூர் சயின்ஸ் பிரிவில் ப்ளஸ் டூ படித்து 470 மதிப்பெண்கள் பெற்றேன். பி.எஸ்ஸி நர்ஸிங் படிக்க விரும்பினேன். தோழிகள், ஆசிரியர்கள் உதவியோடு கவுன்சலிங்க்கு விண்ணப்பித்தேன். ஆனால், போக்குவரத்து, கம்யூனிகேஷன் உள்ளிட்ட பிரச்னைகளால் கவுன்சலிங்கில் எனக்கு தனியார் கல்லூரி கிடைத்தது. அவர்கள் 1.55 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்தச் சொன்னார்கள். பலரின் உதவியை நாடியும் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏழ்மை காரணமாக உயர்கல்வி படிக்க முடியாமல் போனது. என்னுடைய நர்ஸிங் கனவு நனவாக தமிழக அரசு உதவ வேண்டுகிறேன். நான் முன்னேறினால், என் மக்களுக்கு ஒரு கல்வி முன்னோடியாக இருந்து நிச்சயம் வழிகாட்டுவேன்” என்றார். 

கல்விக்கான எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, பழங்குடி மாணவியின் நர்ஸிங் கனவை நனவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.