64 வயதில் மெடிக்கல் சீட் வாங்கிய ஜெய் கிஷோர் பிரதான்... இது சரியான முன்னுதாரணம்தானா?

இளம் தலைமுறைக்கான ஒரு மெடிக்கல் சீட் 64 வயதான ஜெய் கிஷோர் பிரதானுக்குக் கிடைத்திருக்கிறது.
சில விஷயங்கள் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு பாசிட்டிவ்வாகத் தெரிந்தாலும், நுட்பமாகக் கவனிக்கும்போதுதான் அவற்றின் நெகட்டிவ் பக்கமும் நமக்குப் புலப்படும். அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் இது.

ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஜெய் கிஷோர் பிரதான் தன்னுடைய 64-வது வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். ஒடிசாவின் பர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், எம்.பி.பி.எஸ் படிப்பிலும் சேர்ந்துள்ளார். இளம்வயதில் மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட ஜெய், அதற்கான நுழைவுத்தேர்வில் தோல்வியடைந்ததால் பி.எஸ்ஸி முடித்துவிட்டு வங்கிப் பணியில் சேர்ந்திருக்கிறார். திருமணமாகி இவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மகள்கள் இருவரும் நீட் தேர்வுக்குத் தயாராக, அவர்களுக்கு உதவ ஆரம்பித்திருக்கிறார் ஜெய் கிஷோர் பிரதான். அப்பாவின் ஆர்வத்தைப் பார்த்த மகள்கள் அவரையும் நீட் தேர்வு எழுதும்படி வற்புறுத்த, இளம் வயதில் தொலைத்த கனவை முதுமையில் நிறைவேற்றிக்கொள்ள நீட் தேர்வுக்குத் தயாராகியிருக்கிறார்.
சென்ற வருடம் (2019) உச்ச நீதிமன்றம் மருத்துவம் படிப்பதற்கான வயது வரம்பை நீக்கியது இவருக்கு வசதியாகப் போய்விட்டது. நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தும்விட்டார். அதாவது, இளம் தலைமுறைக்கான ஒரு மெடிக்கல் சீட் 64 வயதான ஜெய் கிஷோர் பிரதானுக்குக் கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் கருத்து கேட்டோம்.

``படிப்புக்கு வயதில்லை என்ற கருத்தைப் பொதுவாகப் பார்த்தால் நல்ல விஷயம்தான். ஆனால், சமூகத்துக்கு சர்வீஸ் செய்கிற மருத்துவப் பணிக்கான படிப்பில் 64 வயதான ஒருவர் சேர்வது என்பது நல்ல விஷயம் கிடையாது. இத்தனை வயதுக்கு மேல் படித்து, இவர் எப்படி பிராக்டிஸ் செய்து சமூகத்துக்குப் பயன்பட முடியும்? இதுவே 18 வயது மாணவர் ஒருவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்திருந்தால் சமூகத்துக்கு நீண்ட காலம் உதவியாக இருந்திருப்பார்.
64 வயதிலும் நீட் தேர்வை க்ளியர் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் என்பது தனிப்பட்ட ஒரு நபரின் வெற்றி. இவர் மருத்துவம் தவிர, வேறு ஏதாவது படிப்பைப் படித்திருந்தால் இவருடைய வெற்றியை நாமும் கொண்டாடியிருக்கலாம். இவரைப் பார்த்துவிட்டு, அடுத்த வருடம் இன்னும் பத்து பேர் `எத்தனை வயதானால் என்ன, எங்களாலும் நீட் தேர்வை க்ளியர் செய்ய முடியும்’ என்று ஆரம்பித்துவிட்டால், மருத்துவக் கனவுகளுடன் இருக்கிற இளம் தலைமுறையினர் அல்லவா பாதிக்கப்படுவார்கள். 0.5 மதிப்பெண்ணில்கூட ஒரு மாணவருக்கு சீட் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது. தவிர, சமூகத்துக்கு நீண்ட காலம் பயன்பட முடியாமல் போவதற்கு வாய்ப்பிருக்கிற ஒருவருக்கு மக்களின் வரிப்பணத்தைச் செலவழிப்பது சரியில்லை. தனிப்பட்ட நலனா, சமூக நலனா என்று கேள்வி வந்தால், சமூக நலனுக்காகத் தனிப்பட்ட நலனை விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும்.

இனியொருவர் இப்படிச் செய்யாமல் இருக்க, மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு அரசு கண்டிப்பாக வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும். தவிர, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் அதிகபட்சமாக 25 வயதுக்குள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும். அப்போதுதான் எம்.பி.பி.எஸ்ஸை முடித்துவிட்டு, உயர்படிப்பு, பிராக்டிஸ் என்று செய்வதற்குச் சரியாக இருக்கும்’’ என்கிறார் டாக்டர் ரவீந்திரநாத்.