Published:Updated:

`ஏபிவிபி-யின் எதிர்ப்பு; அருந்ததி ராய் புத்தகம் நீக்கம்!’ - நெல்லை பல்கலைக்கழக சர்ச்சை

எழுத்தாளர் அருந்ததி ராய்
எழுத்தாளர் அருந்ததி ராய்

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய ’வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ என்ற புத்தகம் ஏபிவிபி எதிர்ப்பின் காரணமாக நீக்கப்பட்டதற்குப் பல்வேறு தரப்பிலுமிருந்து கண்டனம் எழுந்திருக்கிறது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலம் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாவது பருவத்துக்கான பாடத் திட்டத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய `வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்' (Walking With The Comrades) என்ற புத்தகத்தின் பகுதிகள் இடம்பெற்றிருந்தன.

அருந்ததி ராயின் புத்தகம்
அருந்ததி ராயின் புத்தகம்

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் புத்தகம் பாடத்திட்டத்தில் இருப்பதால் மாணவர்கள் படித்துவந்தார்கள். ஆனால், இந்த ஆண்டு இந்தப் புத்தகத்தைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என திடீரென பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏபிவிபி வலியுறுத்தியது.

அருந்ததி ராய் எழுதிய புத்தகத்தில் இருக்கும் கருத்துகள், தேச விரோத மாவோயிஸ்ட் சிந்தனைகளை நேரடியாக ஆதரித்துவருவதாகவும், அதனால் இந்தப் பாடத்தைப் படிக்கும் மாணவர்களுக்கு நாட்டைப் பற்றிய எதிர்மறையான சிந்தனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஏபிவிபி அமைப்பு குற்றம்சாட்டியது.

ஏபிவிபி அமைப்பு
ஏபிவிபி அமைப்பு

இது தொடர்பாக அந்த அமைப்பின் மாநிலச் செயலாளரான விக்னேஷ் பாபு என்பவர் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணியிடம் கடந்த வாரம் மனு அளித்தார். அதில், ’தேச விரோதச் சிந்தனைகளைக்கொண்ட அருந்ததி ராயின் புத்தகத்தைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில், எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய, `வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ புத்தகம் முதுகலை ஆங்கிலப் பாடத்திட்டத்தின் மூன்றாம் பருவத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டது. இது கல்வியாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

மாணவர்கள் எதைப் படிக்க வேண்டும் என்பதை அரசியல் கட்சிகள் தீர்மானிக்கக் கூடாது.
கல்வியாளர்கள்

மாணவர்களின் பாடத்திட்டத்தில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசும், அதன் அமைப்புகளும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்திவருவதாகவும், மாணவர் எதைப் படிக்க வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிப்பது ஆபத்தான சூழலை ஏற்படுத்தும் எனவும் கல்வியாளர்கள் பலரும் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

ஏபிவிபி அமைப்பு கொடுத்த அழுத்தத்துக்குப் பணிந்து மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகத்தின் துணைவேந்தர் பிச்சுமணி, பாடத்திட்டத்தை மாற்றியமைத்திருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக எம்.பி-க்களான கவிஞர் கனிமொழி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

கனிமொழி எதிர்ப்பு
கனிமொழி எதிர்ப்பு

தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் கூட்டமைப்பான `மூட்டா’ சார்பாகவும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இது குறித்து மூட்டா அமைப்பின் பொதுச் செயலாளரான நாகராஜன் கூறுகையில், ``பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய துணைவேந்தருக்கு அதிகாரம் கிடையாது. பாடத்திட்டத்திலிருந்து குறிப்பிட்ட பகுதியை நீக்கவோ அல்லது சேர்க்கவோ வேண்டுமானால் பாடத்திட்டத்துக்கான கமிட்டி கூடியே முடிவு செய்யும்.

பாடத்திட்டத்திலிருந்து எந்தவொரு பகுதியையும் நீக்கவோ, சேர்க்கவோ துணைவேந்தருக்குத் தன்னிச்சையாக அதிகாரம் கிடையாது.
நாகராஜன், ’மூட்டா’ பொதுச் செயலாளர்

அதன் பின்னர் கமிட்டியின் முடிவு தொடர்பாக பல்கலைக்கழக பாடத்திட்டத்துக்கான நிலைக்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து செனட் கூட்டத்தில் பாடத்திட்டத்தை நீக்குவது அல்லது சேர்ப்பது குறித்த இறுதி முடிவுகள் எடுக்க வேண்டும்.

ஆனால், அப்படி எந்த நடைமுறையும் இங்கே பின்பற்றப்படவில்லை. புகார் கிடைத்த ஒரு வாரத்தில் அவசரமாக சிறப்பு கமிட்டியைக் கூட்டி அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அதே வேகத்தில் பாடத் திட்டத்தை நீக்கியிருக்கிறார்கள்.

Vikatan

யாரை திருப்திப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், அரசியல் அழுத்தம் காரணமாக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. பல்கலைக்கழகத்தின் இந்த அவசர முடிவுக்கு எங்கள் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

இந்தச் சர்ச்சை குறித்து விளக்கமளித்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பிச்சுமணி, ``அருந்ததி ராய் எழுதிய புத்தகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இருப்பதால் அதைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தார்கள்.

நெல்லை பல்கலைக்கழகம்
நெல்லை பல்கலைக்கழகம்

அதனால் சிறப்பு கமிட்டி அமைத்து அந்தப் புகார் குறித்து ஆய்வு செய்தோம். அந்த கமிட்டியின் பரிந்துரைப்படிதான் அருந்ததி ராய் புத்தகத்துக்கு பதிலாக நெல்லையைச் சேர்ந்த எழுத்தாளர் கிருஷ்ணன் எழுதிய `மை நேடிவ் லேண்ட்’ என்ற புத்தகத்தை பாடத்திட்டத்தில் சேர்த்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு