Published:Updated:

நீட்டுக்கு அடுத்து `நெக்ஸ்ட்’ - சாதக பாதகங்கள் என்ன?

சௌந்தர்யா.தொ

தற்போது இருக்கும் அனைத்து மருத்துவக் கல்லூரித் தேர்வுகளையும் இந்திய மருத்துவக் கழகம் (MCI) நடத்திவருகிறது. இந்தக் கழகத்தை அகற்றிவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் (NMC) என்கிற புதிய அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம்(NMC)
தேசிய மருத்துவ ஆணையம்(NMC)

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ள நீட் தேர்வின் அடிப்படையில், கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள நெக்ஸ்ட் தேர்வு, மருத்துவ மாணவர்களுக்கு எதிரான மற்றுமொரு தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது.

தேசிய மருத்துவ ஆணையம்(NMC)
தேசிய மருத்துவ ஆணையம்(NMC)

நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் படித்த ஒரு மாணவி மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். நீட் தேர்வுக்கு இன்னும் எதிர்ப்பு அலைகள் ஓயாத நிலையில், தேசிய வெளியேற்றத் தேர்வு (national exit examination) என்ற மற்றுமொரு தேர்வை நடுவண் அரசு நடத்துகிறது.

தற்போது இருக்கும் அனைத்து மருத்துவக் கல்லூரித் தேர்வுகளையும் இந்திய மருத்துவக் கழகம் (MCI) நடத்திவருகிறது. இந்தக் கழகத்தை அகற்றிவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் (NMC) என்ற புதிய அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் சட்ட முன்வடிவில் குறிப்பிட்டுள்ள நெக்ஸ்ட் தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவம் (bridge course) பல விமர்சனங்களைச் சந்தித்தது.

மருத்துவம்
மருத்துவம்

எய்ம்ஸ் உட்பட அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவர்களும் அந்தத் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராகப் பணிபுரிய முடியும். புதிய தேர்வு ஒன்றை அறிமுகப்படுத்துவதனால் பல்வேறு புதிய கார்ப்பரேட் கம்பெனிகளின் முக்கியமான வணிகத்துறையாக மாறிவிடும். இக்களத்தில் தேர்வுகளை நடத்துதல், புத்தகங்களைத் தயாரித்தல் எனச் சந்தை உருவெடுக்கும். ஈ.டி.எஸ் என்ற அமைப்பு உலகம், முழுவதும் பல போட்டித் தேர்வுகளை நடத்திவருகிறது.180 நாடுகளில் இது செயல்படுகிறது. இந்த ஈ.டி.எஸ் என்ற அமைப்புடன் இணைந்து இந்தியத் தேர்வு முகமை, இந்தத் தேர்வுகளை நடத்தவிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் வருவது மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரானது. இதுகுறித்து சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத், "நெக்ஸ்ட் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி தெளிவாக இல்லை. இறுதி ஆண்டில் எழுதும் தேர்வு கடினமாக உள்ளது. நெக்ஸ்ட் தேர்வைத் தகுதித்தேர்வு மற்றும் போட்டித் தேர்வாக நடத்தினால் இரண்டின் நோக்கமும் சிதைந்துவிடும். ஒரு தகுதித்தேர்வைப் போட்டித் தேர்வாக மாற்றினால், பல்வேறு பிரச்னைகள் உருவெடுக்கும். நெக்ஸ்ட் தேர்வே முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாக மாறிய பிறகு, முதல் வருடம் முதல் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்வார்களே தவிர, பரந்த அளவிலான அறிவை வளர்த்துக்கொள்ளும் வகையில் பயில மாட்டார்கள், போட்டித் தேர்வில் வெற்றிபெறும் எண்ணமே அதிகரிக்கும்.

மருத்துவர் ரவீந்திரநாத்
மருத்துவர் ரவீந்திரநாத்

இதனால் திறமையான மருத்துவர்களை உருவாக்க முடியாது. தேசியக் கல்விக் கொள்கையின்படி தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனிப்பட்ட பாடத்திட்டம் மற்றும் கட்டணங்களை நிர்ணயித்துக்கொள்ளலாம் எனும் பட்சத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கட்டுப்பாடின்றி தனியே இயங்கும். நெக்ஸ்ட் தேர்வுதான், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு எனில், ஏற்கெனவே மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, முதுநிலை மருத்துவப் படிப்புகாகக் காத்திருப்போர் என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதில் இல்லை" என்றார்.

மேலும் அவர், "ஒருமுறை எழுதும் `நெக்ஸ்ட்' தேர்வு மதிப்பெண் மூலம் முதுநிலை மருத்துவ இடம் கிடைக்காவிட்டால், மீண்டும் முயலவும் இதில் வழி இல்லை. பல்கலைக்கழகம் நடத்தும் இறுதி ஆண்டுத் தேர்வில் உள்ளதுபோல், கிளினிக்கல் தேர்வு (clinical exam), வாய்மொழித் தேர்வு போன்றவை `நெக்ஸ்ட்' தேர்வில் உண்டா என்பது குறித்து எந்த விளக்கமும் இல்லை" என்றார்.

மருத்துவ நுழைவுத் தேர்வு
மருத்துவ நுழைவுத் தேர்வு

தற்போது தேசிய மருத்துவ ஆணையத்துக்கு (NMC) எதிராக தமிழகத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். ஏற்கெனவே, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 100 விழுக்காடு இடங்களும் அகில இந்தியத் தொகுப்புக்குச் சென்றுவிட்டது. முதுநிலை மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடும், இளநிலை மருத்துவக் கல்வியில் 15 விழுக்காடும் அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் மூலம் முழுக் கட்டுப்பாடும் மத்திய அரசின் கைகளில் சென்றுவிடும்.

கல்வி மக்களின் உரிமை!