Published:Updated:

``ஸ்மார்ட்போன் இல்லை, ஆன்லைன் கிளாஸ் புரியவில்லை!'' - அதிகரிக்கும் தற்கொலைகள்

online class
online class

பள்ளிகள் திறக்கும் வரை, ஆன்லைன் வகுப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

''ஐந்து நாள் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை; ஆன்லைன் வகுப்பினை நடத்த தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு; ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் உடல் மற்றும் மனச் சோர்விற்கு ஆளாகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கொதிப்பு!'’ - ஆன்லைன் வகுப்புகளுக்காக சட்டப் போராட்டங்கள் ஒருபக்கம் நடக்க, ஆன்லைன் வகுப்பிற்கு மெபைல் போன் வாங்கிக்கொடுக்கவில்லை என்பதற்காக மாணவி தற்கொலை, ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என மாணவர்கள் தற்கொலை எனக் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வகுப்புகளால் தற்கொலைச் சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன.

online class
online class

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. அப்பகுதி அரசு ஒப்பந்ததாரராக இருக்கும் இவருக்கு மூன்று குழந்தைகள். இரண்டாவது மகனான அபிஷேக் (வயது 15) கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். கடந்த இரண்டு மாதங்களாக, ஆன்லைன் வகுப்பின் மூலம் பள்ளி நிர்வாகம் பாடங்களை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகள் தனக்கு புரியவில்லை என கூறி, கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி பூச்சிமருந்தை குடித்து வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் அபிஷேக்.

”உசிலம்பட்டியில் இருக்கும் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தார் அபிஷேக். அங்கே சரிவர படிக்கவில்லை எனக் கூறி, அவருடைய அப்பா, கொடைக்கானல் பண்ணைக்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு சேர்த்துவிட்டார். அங்கேயே ஹாஸ்டலில் தங்கி படித்துவந்தார். 10-ம் வகுப்பிற்கான பாடங்களை ஆன்லைன் மூலம் பள்ளி நிர்வாகம் நடத்திவந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து ஆன்லைன் கிளாஸ் மூலம் படித்துக்கொண்டிருந்தார். யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார். அவருக்கு என ஏரியாவில் சில நண்பர்கள் இருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து வெளியே செல்வது, விளையாடுவது என இருப்பார். இதனால் சில நாள்களாக ஆன்லைன் வகுப்பிற்குச் செல்லவில்லை. இதனை பள்ளி ஆசிரியர், அபிஷேக்கின் அப்பா, பாண்டிக்கு போன் போட்டுச் சொல்லியிருக்கிறார். ’ஒருவாரமாக ஆன்லைன் கிளாஸ் போகாமல் என்ன செய்கிறாய், விளையாட்டுதான் முக்கியமா?’ என பாண்டி, அபிஷேக்கை கண்டித்திருக்கிறார்.

அபிஷேக்
அபிஷேக்

'எனக்கு ஆன்லைன் கிளாஸ் புரியவில்லை. அதனால் இனி ஆன்லைன் கிளாஸ் போக மாட்டேன்!' எனக் கூறியிருக்கிறார் அபிஷேக். அன்றைய இரவு, சாப்பிடாமல் தூங்கச் சென்றுவிட்டார். கோபத்தில் பாண்டியும் கண்டுகொள்ளவில்லை. அதிகாலையில் வீட்டில் உள்ளவர்கள் வாயில் நுரையோடு மயங்கிய நிலையில் இருந்த அபிஷேக்கை பார்த்திருக்கிறார்கள். இரவு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு படுத்திருக்கிறார்!” என்கிறார் அபிஷேக்கின் பக்கத்துவீட்டுக்காரர் சரவணக்குமார்.

அபிஷேக் தற்கொலையைத் தொடர்ந்து, செப்டம்பர் 3-ம் தேதி ஆண்டிபட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டி எனும் கிராமத்தில், ஆன்லைன் கிளாஸ் புரியாததால் 11-ம் வகுப்பு மாணவன் விக்கிரபாண்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் ஊருக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விக்கிரபாண்டி
விக்கிரபாண்டி

“விக்கிரபாண்டியின் அப்பா இளங்கோவன், திருச்சியில் உள்ள கிரானைட் குவாரியில் வேலை பார்க்கிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன்தான் விக்கிரபாண்டி. திருச்சி தொட்டியத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார் விக்கிரபாண்டி. கொரோனா ஊரடங்கு காரணமாக ஊருக்கு வந்தனர். இங்கே வந்த விக்கிரபாண்டி, ஊர் பசங்களோடு சேர்ந்து வைகை அணைக்குப் போவது, கிரிக்கெட் விளையாடுவது என இருந்தார். இதனால் ஆன்லைன் கிளாஸை தவறவிட்டுள்ளார். இதனை அறிந்த இளங்கோவன், ’ஏன் ஆன்லைன் கிளாஸிற்குச் செல்லவில்லை?' எனக் கேட்டுள்ளார். அதற்கு, விக்கிரபாண்டி, தனக்கு பாடங்கள் புரியவில்லை என்றும், இனி கிளாஸுக்கு போவதாகவும் கூறியிருக்கிறார். அதற்கு இளங்கோவன், விக்கிரபாண்டியை திட்டியுள்ளார். மறுநாள் காலையில் ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் செய்ய வேண்டும் எனக் கண்டிப்போடு கூறியிருக்கிறார். அன்றைய தினம் காலை 7 மணி இருக்கும். ஆன்லைன் கிளாஸ் ஆரம்பிக்கும் முன்னரே, விக்கிரபாண்டி வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார். உடனடியாக விக்கிரபாண்டியை உயிரோடு மீட்டு, கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால், வழியில் உயிர் பிரிந்துவிட்டது" என்றார் விக்கிரபாண்டியின் மாமா குமார்.

மதுரை TOP KIDS மனநல ஆலோசனை மையத்தின் மனநல மருத்துவர் தீப் நம்மிடையே பேசும் போது, ”ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு புதிதான ஒன்று. கடந்த மூன்று நான்கு மாதமாகத்தான் இதனை பரிசோதித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில் உள்ள சிக்கல்களைப் புரிந்துகொள்ள முயல்கிறோம். வகுப்பறையில் போர்டில் எழுதி பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும், சந்தேகம் வந்தால் உடனே எழுந்து கேட்கும் மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு சற்று கடினமாகதான் இருக்கும். இப்படியான சூழலில், பெற்றோர்களின் பங்கு இங்கே மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என தனது மகன் கூறுகிறான் என்றால், அதனை எப்படி கையாள வேண்டும் என பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும்.

மனநல மருத்துவர் தீப்
மனநல மருத்துவர் தீப்

’கொரோனா காலம் என்பதால்தான் ஆன்லைன் வகுப்பு நடக்கிறது; இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் எல்லாம் சரியாகிவிடும்; ஸ்கூலுக்கு போகலாம்…’ - இப்படி சொல்வதால், ஆன்லைன் வகுப்பினால் ஏற்படும் மன அழுத்ததில் இருந்து குழந்தையை வெளியே கொண்டுவரலாம். இன்னும் சில பெற்றோர்கள், ‘புரியவில்லை என்றாலும் பரவாயில்லை. சும்மா ஆன்லைன் கிளாஸ்க்கு போ… நான் எதுவும் சொல்ல மாட்டேன்’ எனக் கூறுபவர்களும் இருக்கிறார்கள். இப்படியான அணுகுமுறைகள்தான் ஆரோக்கியமானதாக இருக்க முடியும். இதுதான் நிரந்தர தீர்வாக இருக்கும்” என்றார்.

ஆல் க்ளியர் அரியர், 10 கோடி பப்ளிசிட்டி, ஆன்லைன் அலப்பறைகள்!

”பள்ளிக்கூடத்திற்கு இணையாக ஆன்லைன் வகுப்பு முறைகள் இருக்க முடியாது. ஆன்லைன் வகுப்புகளால், ஒரே இடத்தில் அமர்ந்து மொபைல், கம்யூட்டர் பார்த்துக்கொண்டிருப்பதால், மாணவர்களுக்கு கண் பிரச்னைகள், மூளை நரம்பு பிரச்னைகள் ஏற்படுகிறது. கூடவே உளவியல் சிக்கல்களும் ஏற்படுவதால்தான் தற்கொலை வரை மாணவர்கள் செல்கிறார்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழலில், பெற்றோர்கள் கடன் வாங்கி பள்ளிக் கட்டணம் செலுத்துகிறார்கள். இந்நேரத்தில் தன்னுடைய குழந்தை ஆன்லைன் வகுப்பிற்குச் செல்லவில்லை என அறிந்தால் நிச்சயம் கோபம் வரும். அதனை வெளிப்படுத்தும் போது தற்கொலை செய்துகொள்ளும் வரை மாணவர்களால் செல்ல முடிகிறது என்றால், ஆன்லைன் வகுப்பு எப்படியான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்துகிறது என நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

ஆசிரியர்கள், தங்கள் பகுதியில் இருக்கும் மாணவர்களை தொடர்புகொண்டு ஊர் பொதுவான இடத்தில், மரத்தடியில், சமூக இடைவெளியோடு அமர வைத்து தினமும் 1 மணி நேரம் பாடம் நடத்தினாலே போதும். அதற்கான திட்டத்தை அரசு வகுக்க வேண்டும். இன்னும் பல கிராமங்களில் இணைய வசதி இல்லை. மின்சார வசதி இல்லை. ஸ்மார்ட்போன் வாங்க முடியாத சூழல் உள்ளது. அங்குள்ள மாணவர்களின் நிலை என்ன? ஒவ்வொரு மாணவனின் ஆரோக்கியம், மன நலம் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அதில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும். இதில் எதற்குமே வழியில்லாத ஆன்லைன் வகுப்பினை உடனே நிறுத்த வேண்டும்” என்கிறார் பொதுப்பள்ளிக்கான அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க, ஐந்து நாள்கள் ஆன்லைன் வகுப்பிற்கு விடுமுறை மட்டுமே தீர்வாக இருக்கமுடியாது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
அடுத்த கட்டுரைக்கு