மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐடி முதலான கல்வி நிறுவனங்களில் உள்ள இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி-க்கள் மற்றும் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இப்பணி சேர்க்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்துக் கேள்வியெழுப்பிய மாநிலங்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனுக்குப் பதிலளித்துள்ள மத்திய கல்வி அமைச்சகம் கண்டறியப்பட்ட 1439 காலி பணியிடங்களில் வெறும் 30% மட்டுமே இந்தக் குறிப்பிட்ட காலத்தில் நிரப்பப்பட்டுள்ளதாகத் தரவுகளை வெளியிட்டிருக்கிறது.

மொத்தமுள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் சுமார் 33-ல் மட்டும் 1097 காலி பணியிடங்கள் கண்டறியப்பட்டன. அதில் தற்போது வரை வெறும் 212 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கின்றன. மேலும், 18 பல்கலைக்கழகங்களில் SC, ST மற்றும் OBC பிரிவினரைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் கூட பணியமர்ந்தபடவில்லை எனவும் தெரிகிறது. ஒரு இடம் கூட நிரப்பப்படாத பட்டியலில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் ஆகியவையும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்று. பணிசேர்க்கையை தொடங்கிடாத 12-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் தங்கள் கல்வி நிறுவனங்களில் ஒரு காலியிடம் கூட இல்லை எனத் தெரிவித்திருக்கிறது.
இதே பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் ஆகிய பணிகளுக்கு 10 ஐஐடி-க்களில் 342 காலியிடங்கள் கண்டறியப்பட்டன. ஆனால், மொத்தமாகவே வெறும் 237 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில் 13-க்கும் மேற்பட்ட ஐஐடி-களில் எந்தக் காலியிடங்களும் இல்லை எனவும் காரக்பூர், ரூர்கி, திருப்பதி, கோவா முதலிய இடங்களில் உள்ள ஐஐடி-க்களில் SC பிரிவினரைச் சேர்ந்த ஒருவர் கூட பணியமர்த்தப் படவில்லை எனத் தெரிகிறது.

பிரிவுவாரியாகப் பார்த்தால் SC பிரிவினருக்கான மொத்தமுள்ள 522 இடங்களில் 170 இடங்களும், ST பிரிவினருக்கான மொத்தமுள்ள 317 காலியிடங்களில் 57 இடங்களும், OBC பிரிவினருக்கான கண்டறியப்பட்ட 564 இடங்களில் வெறும் 222 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து பதிலளித்துள்ள மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி காலியிடங்களுக்கான இந்தப் பணி நியமனம் ஒரு தொடர்ச்சியான பணி என்று மட்டும் தெரிவித்திருக்கிறார்.