Published:Updated:

ஜே.என்.யு மாணவர் போராட்டம்... நடந்தது, நடப்பது, நடக்க வேண்டியது என்ன?

ஜே.என்.யு மாணவர் போராட்டம்
ஜே.என்.யு மாணவர் போராட்டம்

ஜே.என்.யு என்றாலே போராட்டமும் போராட்ட குணமுடைய மாணவர்களும்தான் என சமூகம் நினைக்கிறது. ஆனாலும், அதன் கல்வித்தரம் வியக்க வைப்பதாகவே உள்ளது.

புதுதில்லியில் இயங்கிவரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் முதன்மையான கல்விநிலையங்களுள் ஒன்று. சுமார் 8,000 மாணவர்கள் பயிலும் இப்பல்கலைக்கழகத்தில் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தங்கிப் படிப்பவர்களே. நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து படிக்கின்றனர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் கனவுப் பல்கலைக்கழகமான இதன் பொன்விழா ஆண்டு தற்போது (2019) கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி இக்கல்வியாண்டு முழுதும் சிறப்பு நிகழ்ச்சிகள் பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைபெற்றுவருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், தேசமே திரும்பிப் பார்க்கவைக்குமளவு போராட்டத்தை பல்கலைக்கழக மாணவர்கள் கையில் எடுத்துள்ளனர்.

ஜே.என்.யு மாணவர் போராட்டம்
ஜே.என்.யு மாணவர் போராட்டம்

ஜே.என்.யு என்றாலே போராட்டமும் போராட்ட குணமுடைய மாணவர்களும்தான் என சமூகம் நினைக்கிறது. சொல்லப்போனால், மற்ற கல்வி நிறுவனங்களில் இல்லாத அளவு அதிகபட்ச போராட்டம் அங்கு நடக்கிறது. ஆனாலும், அதன் கல்வித்தரம் வியக்க வைப்பதாகவே உள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கிவரும் தேசிய நிறுவனங்களின் தரவரிசைக்கான அமைப்பு (NIRF) 2019-ம் ஆண்டிற்கான உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்களில் ஏழாமிடத்தையும் பல்கலைக்கழக அளவில் இரண்டாமிடத்தையும் ஜே.என்.யு பெற்றிருக்கிறது.

போராட்டம் என்பது மாணவர்களின் உரிமை. கோரிக்கைகளைப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டியது பல்கலைக்கழக நிர்வாகத்தின் கடமை. இது நிகழாததாலேயே மாணவர்களின் இப்போதைய போராட்டம் தொடர் போராட்டமாக மாறியுள்ளது.

எதனால் போராட்டம்?

அண்மைக்காலமாக ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் சமூக இயங்கியலை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. பல்கலைக்கழக சுவர்களின் அழகினைப் பராமரிக்க எனச் சொல்லி, பல்வேறு மாணவர் அமைப்புகளின் சார்பில் ஒட்டப்பட்டிருந்த சமூக விழிப்புணர்வு போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. ஒவ்வொரு கட்டடத்திலும் தகவல் பலகை என்ற சிறிய அளவிலான பலகைக்குள்ளேயே எல்லா அறிவிப்புகளும் இடம்பெற வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கூடும் இடங்களான தாபாக்களின் நேரத்தைக் குறைப்பது, கூட்டங்கள் நடத்துவதற்கான நேரத்தை வரையறுப்பது, வகுப்பு வருகைப் பதிவை கட்டாயமாக்குவது உள்ளிட்ட பல நிலைகளில் ஜே.என்.யுவின் சுதந்திர அமைப்பை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற பின், இதெல்லாம் அதிகம் நடப்பதாக பல்கல்லைக்கழக மாணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஜே.என்.யு மாணவர் போராட்டம்
ஜே.என்.யு மாணவர் போராட்டம்

இதன் தொடர்ச்சியாக, மாணவர்கள் தங்கும் விடுதிக்கான விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர நிர்வாகம் முடிவெடுத்தது. முன்வரைவு ஒன்றையும் வெளியிட்டு, மாணவர்களிடம் கருத்துகளையும் கேட்டிருந்தது. அவ்வரைவில் மாணவர்கள் வெளியில் செல்வதற்கான நேரக் கட்டுப்பாடு, திரும்புவதற்கான நேரக்கட்டுப்பாடு முதலானவை பெருநகரத்தில் பயில்பவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. மேலும், விடுதிக்கான கட்டணத்தை எக்கச்சக்கமாக உயர்த்தியிருந்தது. இதனால், வெளியான முன்வரைவு மாணவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புக்குள்ளானது.

தனிநபர் அறைவாடகை ஒரு மாதத்துக்கு 20 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும், இருநபர் அறையில் வசிப்பவருக்கான ஒரு மாத வாடகை 10 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும் உயர்த்தப்படவிருந்தது. திரும்பப்பெறும் வகையிலான ஒருமுறைக் கட்டணம் 5,500 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தப்படவும் அந்த வரைவு வகை செய்தது. மேலும், நிர்வாகம், உணவாளர், உதவியாளர் ஆகியோருக்கு என ஒவ்வொரு மாணவரிடமிருந்து 1,700 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பூட்டு போட்டு போராட்டம்

பொருளாதாரத்தில் தன்னிறைவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. JRF, RJNF முதலான உதவித்தொகை வாங்கும் மாணவர்களுக்குக் கூட இது சமாளிக்கூடியதாக இருக்கலாம். ஆனால், ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களில் 40%க்கும் மேல் பொருளாதாரத்தால் நலிவுற்றவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு இத்தொகையைச் செலுத்துதல் என்பது இயலாத ஒன்றாகும். இக்கட்டண உயர்வு அவர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி உயர்கல்வி பயிலவிடாமல் வேலைக்குச் செல்ல வழிவகுக்கும். இது மறைமுகமாக பொருளாதாரத்தால் நலிவுற்ற மாணவர்கள கல்வியிலிருந்து விலக்கி வைப்பதற்கான ஏற்பாடாகவே பார்க்க முடிகிறது.

ஜே.என்.யு மாணவர் போராட்டம்
ஜே.என்.யு மாணவர் போராட்டம்

இக்கட்டண உயர்வைப் பொருளாதார, சாதிய இடஒதுக்கீட்டின் அடிப்படையிலும் பகுக்காமல், பொதுவாக எல்லாருக்குமான கட்டண உயர்வாக அறிவித்தது எல்லா மாணவர்கள் மத்தியிலும் அதிகப்படியான வெறுப்பை உண்டாக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்பிருந்தே, ஒவ்வொரு விடுதியிலும் பொதுக்குழுக் கூட்டம், ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காண மாணவர்குழாம் முனைந்தது. மாணவர் புல முதன்மையரைச் (dean of students) சந்தித்து விவாதிக்க மாணவர்கள் சென்றனர். ஆனால், அவர் மாணவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால், அவரது அறைக்கு மாணவர் சங்கத்தினர் பூட்டு போட்டிருக்கின்றனர். இதையடுத்து, கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தின் வகுப்புகளும் புறக்கணிக்கப்பட்டு, போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த விஷயத்தில் ஜே.என்.யு மாணவர் சங்கத்தோடு பல்கலைக்கழகத்தினுள் இயங்கும் அனைத்தும் மாணவர் அமைப்புகளும் இணைந்து போராடி வருகின்றன.

துணைவேந்தரைக் காணவில்லை!

மாணவர்களின் எதிர்ப்பு வெகுவாக அதிகரித்துக்கொண்டே வந்த நிலையில் போராட்டம் வீதிக்கு வந்தது. இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தினுள் துணை ராணுவமும் மத்திய சேமக் காவல் படையும் (CRPF) குவிக்கப்பட்டது. கன்ஹையா குமார் விவகாரத்திற்குப் பிறகு, சுதந்திரச் சதுக்கம் (freedom square) அமைந்துள்ள நிர்வாகக் கட்டடத்திற்கு 100 மீட்டருக்கு வெளியே மட்டும் போராட வேண்டும் என அறிவிப்பு வந்திருந்தது. ஆனால், விடுதிக்கான புதிய வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நிர்வாகக்கட்டடத்தையே முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.

கடிதம்
கடிதம்

04.11.2019 அன்று, பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் காவல் சரகத்திற்குட்பட்ட வசந்த் குஞ்ச் காவல்நிலையத்திற்கு மாணவர்கள் பேரணியாகச் சென்றுள்ளனர். காவல்நிலையத்திற்குச் சென்ற அவர்கள் ``துணைவேந்தரைக் காணவில்லை” என்று புகாரளித்துள்ளனர். மாணவர்களின் போராட்டத்திற்குப் பதிலளிக்கும் வகையில் நவம்பர் 6-ம் தேதி பல்கலைக்கழகத்தின் அனைத்து விடுதித் தலைவர் (president), பாதுகாவலர்களுடனான (warden) provost கூட்டம் நடத்தி பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என துணைவேந்தர் தரப்பில் அறிவிப்பு வெளியானது. பல்கலைக்கழகத்தின் மொத்த விடுதிகளும் இட அமைப்பின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இந்த ஐந்து பிரிவுகளுக்கன provost கூட்டம் 06.11.2019 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்பு, சிலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தும் சிலர் விடுதி வரைவை நிராகரித்தும் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், இவற்றை ஜே.என்.யு துணைவேந்தர் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

காவலர்களுடன் தள்ளு முள்ளு

இந்த நிலையில் 12.11.2019 அன்று காலை ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா ஏ.ஐ.சி.டி.இ வளாகத்தில் நடைபெற்றது. அதில் துணைக்குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உள்ளிட்டோர் பங்கெடுத்தனர். பட்டமளிப்பு விழா நடைபெற இருந்த அரங்கத்தை நோக்கிப் பேரணியாகச் சென்று, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக போலீஸார் தடுப்புகளை அமைத்து போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர். ஆனால், அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருகட்டத்தில் போலீஸாரின் தடுப்பு வளையங்களை மீறி மாணவர்கள் செல்லத்தொடங்கினர். இதனால் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Sathya Kumar
Sathya Kumar

பின்னர் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதில் சில மாணவர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. போராட்டம் பெரிய அளவில் தொடர்ந்ததை அடுத்து துணை ராணுவப்படை கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே பட்டமளிப்பு விழாவுக்குப் பட்டம் வாங்க வந்த முன்னாள் மாணவர்கள் சிலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததாகத் தெரிகிறது. காலை விழா முடிந்ததும் துணைக்குடியரசுத் தலைவர் சென்றதாகவும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாலை வரை அரங்கத்திலேயே இருந்ததாகவும் கூறப்படுகிறது. துணைவேந்தரும் அமைச்சரும் மாணவர்களைச் சந்திக்கவில்லை. மாலை வரை போராட்டம் தொடர்ந்ததால் அங்கு பதற்றம் நிலவியது.

கடந்த 13-ம் தேதியன்று பல்கலைக்கழகத்தின் செயற்குழுக்கூட்டம் கூடியது. அதற்குப் பின், விடுதி வரைவில் கட்டண உயர்வை பகுதியளவு திரும்பப்பெறுகிறோம் என நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், மாணவர்கள் இதை ஏற்கவில்லை. மாணவர்கள் சார்பில், நிர்வாகத்திடம் பேசவேண்டும் எனவும் முழுவதுமாகப் புதிய வரைவினைத் திரும்பப் பெறவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு எதிரான அதிகாரப் போக்கைக் கண்டித்துப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் கோஷங்கள் எழுதப்பட்டுள்ளன. இன்னும் திறக்கப்படாமலுள்ள விவேகானந்தர் சிலைக்குக் கீழ்ப்புறமாக பா.ஜ.க-விற்கு எதிராக கோஷங்கள் எழுதப்பட்டுள்ளன. இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் போராட்டம் தொடர்பாக, ஜே.என்.யுவின் ஜீலம் விடுதித் தலைவராகச் செயல்பட்டுவரும் தமிழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சத்தியகுமார் தெரிவிக்கையில், ``மற்ற கல்வி நிறுவனங்களை விட ஜே.என்.யு சமூகத்தோடு மிகுந்த தொடர்புடையது. ஏற்கெனவே உயர்ந்த தரத்தில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் மேலும் விதிகளை மாற்றி என்ன செய்யப்போகிறார்கள்? இது ஒரு பல்கலைக்கழகம். ஏன் கல்லூரியைப் போல் செயல்படவேண்டும்? விடுதிக்கான வரைவு அறிக்கையில் `அநாவசியமாக வெளியாட்களை ஜே.என்.யுவில் தங்க வைப்பதை தடுப்பது’ போன்ற சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், மாணவர்களின் அரசியல் அறிவை மட்டுப்படுத்துவதற்கான மறைமுக அறிவிப்புகளும் கலந்திருக்கின்றன. அதனால்தான், விடுதி வரைவை எதிர்க்கிறோம்” என்றார்

Sri raman
Sri raman
` எங்கள் துணைவேந்தரைக் காணவில்லை’ - காவல்நிலையத்தில் புகார் அளித்த ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள்

ஜே.என்.யுவில் இயங்கி வரும் பாப்சா (BAPSA)அமைப்பின் துணைத்தலைவராக இயங்கிவரும் ஆய்வாளர் ஸ்ரீராமன் கூறுகையில், ``இங்கு படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் குறைந்தபட்ச அரசியல் அறிவு இருக்கிறது. அதை ஒடுக்க மாணவர்கள் மீது, தொடர்ச்சியாக உளவியல் வன்முறை தொடுக்கப்பட்டுவருகிறது. பட்டமளிப்பு விழாவின் போதான போராட்டத்தில் தண்ணீர் பீய்ச்சியடித்ததிலும் காவலர்களுடனான தள்ளுமுள்ளிலும் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். விடுதி வரைவைத் திரும்பப்பெற வேண்டும். துணைவேந்தர் உள்ளிட்ட நிர்வாகத்தின் அங்கத்தினர் மாணவர்களைச் சந்திக்க முன்வரவேண்டும். மாணவர்களுடன் பேசித் தீர்வு காணுவதே ஜே.என்.யுவின் நீடித்த நிலைத்த எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்”. `கல்வி’ தனியார்மயமாகிவரும் சூழலில், அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்வி நிறுவனங்களும் தனியார்மயச் சூழலுக்கு ஆட்படுவதைத் தடுக்கவேண்டியுள்ளது. நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கு நிர்வாகம் தேர்ந்தெடுக்கும் வளர்ச்சிப் பாதையென்பது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கவேண்டுமென்பதையே இம்மாணவர் போராட்டம் எடுத்துரைக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, தேவையற்ற கட்டணச் சுமைகளை மாணவர்கள் மீது திணிப்பதை நிர்வாகம் கைவிட வேண்டுமென்பதே எல்லாரின் எதிர்பார்ப்பும்.'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு