Published:Updated:

`படிப்பை நிறுத்திவிட்டு வரச் சொல்கிறார்கள்!’ -ஜே.என்.யூ தாக்குதலால் கலங்கும் வெளிநாட்டு மாணவர்கள்

``பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற சூழலைப் பார்க்கும்போது தொடர்ந்து படிப்போமா, மிகப்பெரிய கட்டணத்தைச் செலுத்துவோமா என்று தெரியவில்லை” எனத் தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர் மாணவர்கள்.

வெளிநாட்டு மாணவர்கள்
வெளிநாட்டு மாணவர்கள்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர். டெல்லி, காவல்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜே.என்.யூ-வில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வருமாறு பெற்றோர்கள் வற்புறுத்துவதாகவும் மாணவ மாணவிகள் கூறியுள்ளனர்.

ஜே.என்.யு  மோதல்
ஜே.என்.யு மோதல்

ஜே.என்.யூ-வின் மாணவர் அமைப்புத் தலைவர் ஆய்ஷி கோஷ் மற்றும் பேராசிரியர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு ஹிந்து ரக்‌ஷா தள அமைப்பைச் சேர்ந்தவர்கள் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர். மாணவி ஆய்ஷி கோஷ் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் நடந்த இந்தத் தாக்குதலால் வெளிநாட்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பாக அம்மாணவர்கள் இந்தியா டுடே ஊடகத்திடம் பேசியுள்ளனர்.

பங்களாதேஷைச் சேர்ந்த மாணவி ஃபாஹ்மீ பேசும்போது, ``நான் கலைப் பிரிவில் முதலாமாண்டு படித்து வருகிறேன். என்னுடைய முதல் செமஸ்டர் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சென்றது. தாக்குதல் நடந்த பிறகு என்னுடைய பெற்றோர்கள் நான் இங்கு இருப்பதை நினைத்துப் பயப்படுகிறார்கள். திரும்ப என்னுடைய நாட்டுக்கே வரச் சொல்லுகின்றனர். என்னுடைய அடுத்த செமஸ்டர் தேர்வுக்குப் பதிவு செய்ய வேண்டுமா என்ற சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``இந்தியாவின் பணமதிப்பைவிட பங்களாதேஷின் பண மதிப்பு குறைவு. நாங்கள் 1,200 டாலர்களைக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. இது எங்களுக்கு மிகப் பெரிய தொகை. பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற சூழலைப் பார்க்கும்போது நான் தொடர்ந்து படிப்பேனா, மிகப்பெரிய கட்டணத்தைச் செலுத்துவேனா என்று எனக்குத் தெரியவில்லை. இது கல்வி நிறுவனம். நாங்கள் இங்கு படிப்பதற்கு வந்துள்ளோம். தயவுசெய்து எங்களைப் படிக்க விடுங்கள்” என்று கூறியுள்ளார்.

ஜே.என்.யு
ஜே.என்.யு

நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர் சரோஜினி பேசும்போது, ``எனது மேற்பார்வையாளர் தாக்கப்பட்டதால் மிகுந்த வருத்தத்தில் உள்ளேன். துணைவேந்தர் எங்கே சென்றார், தாக்குதலின்போது பாதுகாவலர்கள் எங்கே சென்றார்கள், பெண்கள் விடுதியிலிருந்த காவலர்களை ஏன் துணைவேந்தர் வெளியேறக் கூறினார். அவர் ஏன் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை, இந்த விவகாரத்தில் துணைவேந்தர் பதவி விலக வேண்டுமென நான் கோரிக்கை விடுக்கிறேன்.

தாக்குதல் நடந்தது குறித்து எந்தத் தகவலையும் பெற்றோர்களிடம் நான் தெரிவிக்கவில்லை. அவர்களிடம் சொல்வதற்குப் பயமாக இருக்கிறது” என்று அச்சத்துடன் கூறியுள்ளனர்.

தாக்குதல் தொடர்பாக பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். தொடர்ந்து ஜே.என்.யூ-வில் பதற்றமான சூழ்நிலைகள் நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.