Published:Updated:

2 ஆண்டுகளில் ஐஐடி-யிலிருந்து 2,400 பேர் டிராப்அவுட் - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான் அதிகம்!

கலிலுல்லா.ச

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஐஐடி-யிலிருந்து 2400 பேர் வெளியேறியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி
ஐஐடி

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. `இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ஐஐடி கல்வி நிறுவனங்களிலிருந்து 2,461 மாணவர்கள் வெளியேறியுள்ளனர்’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், 1,290 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்களும், மீதமுள்ள 1,171 எஸ்.சி. எஸ்.டி. ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

2 ஆண்டுகளில் ஐஐடி-யிலிருந்து 2,400 பேர் டிராப்அவுட் - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான் அதிகம்!

அதிகபட்சமாக டெல்லி ஐஐடி-யில் 782 மாணவர்களும் குறைந்தபட்சமாக மெட்ராஸ் ஐஐடி-யில் 128 மாணவர்களும் வெளியேறியுள்ளனர். ``பெரும்பாலான மாணவர்கள் சொந்த காரணங்கள், மற்ற கல்லூரிகளைத் தேடிச்செல்வது. உடல்ரீதியான பிரச்னை, படிப்பில் ஆர்வமின்மை” உள்ளிட்ட காரணங்களால் படிப்பை பாதியில் விட்டுச்சென்றுவிட்டதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரீயால் தெரிவித்துள்ளார்.

Vikatan

`மன அழுத்தம், சாதிய பாகுபாடு உள்ளிட்டவையால் மாணவர்கள் வெளியேறியுள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, `மாணவர்களைக் கண்காணிக்க ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, கல்வி ரீதியாக பலவீனமாக உள்ள மாணவர்களுக்கு கூடுதல் வகுப்புகள் நடத்தவும், தனிப்பட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஐஐடி-யிலிருந்து அதிக அளவிலான மாணவர்கள் வெளியேறியது கல்வி நிறுவனத்தைச் சார்ந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ``இவ்வளவு மாணவர்கள் வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஐடி
ஐஐடி

இந்தத் தரவுகளைப் பொறுத்தவரை, ஜூலை மாதத்தில், பொதுத்துறை நிறுவனங்களில் மாணவர்கள் பணியமர்த்தப்படுவதால் எம்.டெக் மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிடுகின்றனர்” என்று கான்பூர் ஐஐடி பேராசிரியர் தீரஜ் தெரிவித்துள்ளார். மேலும், ``நாங்கள் பொதுத்துறை நிறுவனங்களைக் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாக அதாவது, ஜூன் மாதங்களில் பணியமர்த்துமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளோம். இப்படிச்செய்தால் நாங்கள் காலி வகுப்பறைகளில் பாடம் நடத்தவேண்டிய கட்டாயம் இல்லை. சில சந்தர்ப்பங்களில், எம்.டெக் படிக்கும் 80 பேரிடமிருந்து 60 மாணவர்கள் வெளியேறுவதை நாங்கள் எதிர்கொண்டோம், பின்னர் நாங்கள் 20 மாணவர்களுடன் பாடம் நடத்தவேண்டியுள்ளது” என்றார்.