Election bannerElection banner
Published:Updated:

NEP2020: `மாநில அரசுகளின் பங்களிப்பு; புதிய கொள்கை!'- பெ.மணியரசன் முன்வைக்கும் யோசனை

மாணவர்கள்
மாணவர்கள்

``புதிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் கோரிப் பயனில்லை. புதிதாக ஒரு வரைவுக் கல்வித் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் பிரதமர் நரேந்திர மோடி அரசு, தனது புதிய கல்வித் திட்டத்தை முரட்டுத் தனமாகத் திணிக்கக்கூடாது. அவ்வாறு திணித்தால், அதை தமிழ்நாடு ஏற்க கூடாது''.

மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக்கொள்கை நாடு முழுவதும் விவாதங்களை கிளப்பியுள்ளது. இது மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாகவும், இந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை வலுக்கட்டாயமாக திணிப்பதாகவும், தமிழ்நாட்டில் இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில்தான் புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் எனவும், மாநில அரசுகளின் பங்களிப்புடன் புதிய ஆய்வுக்குழுஒன்றை உருவாக்கி, கல்விக்கொள்கைக்கான புதிய வரைவை உருவாக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.

பெ.மணியரசன்
பெ.மணியரசன்

இதுகுறித்து நம்மிடம் விரிவாக பேசிய அவர்,``மத்திய அரசின் புதிய கல்வித் திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, `மும்மொழித் திட்டத்தையும், இந்தி மொழித் திணிப்பையும் தமிழ்நாடு அரசு ஏற்காது’ என்று கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. ஆனால், வருந்தத்தக்க செய்தி என்னவெனில் மழலையர் கல்வியிலிருந்து பல்கலைக்கழகக் கல்வி வரை அனைத்தும் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்வது குறித்து, ஒரு சொல்கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமது அறிக்கையில் கூறாதது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. அவற்றையெல்லாம் முதலமைச்சர் ஏற்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய இயக்கங்களும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும், புதிய கல்வித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்தித் திணிப்பு, வர்ணாசிரம நோக்கு, மாணவர்களை உயர்கல்வி செல்லாமல் கழித்துக்கட்டும் விதிமுறைகள், மாநில உரிமைப் பறிப்பு, ஆர்.எஸ்.எஸ். சார்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்துக்காகவும் எதிர்க்கின்றன. மோடி அரசின் புதிய கல்வித் திட்டத்தில் திருத்தங்கள் கோரிப் பயனில்லை. முற்றிலும் அத்திட்டத்தைக் கைவிட்டு, மாநில அரசுகளின் பங்களிப்புடன், பல்துறைக் கல்வி மற்றும் உளவியல் வல்லுநர்கள் பங்கேற்பில் புதிய ஆய்வுக் குழு அமைத்து, புதிதாக ஒரு வரைவுக் கல்வித் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை: `எப்படி சிந்திக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது!’ - பிரதமர் மோடி

அவ்வாறில்லாமல் பிரதமர் நரேந்திர மோடி அரசு, தனது புதிய கல்வித் திட்டத்தை முரட்டுத் தனமாகத் திணிக்கக்கூடாது. அவ்வாறு திணித்தால், அதை தமிழ்நாடு ஏற்காது என்ற முழக்கத்துடன் ஆளுங்கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும், அனைத்து இயக்கங்களும், அனைத்து மக்களும் இணைந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அறப்போராட்டங்களை நடத்த வேண்டும். இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக, `புதிய கல்வித் திட்டத்தை முற்றிலுமாக மறுக்கிறோம்; அதைச் செயல்படுத்த மாட்டோம்’ என்ற அறிவிப்பை தமிழக முதலமைச்சர், மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்’’ என்று அவர் வலியுறுத்தினார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு