Published:Updated:

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம்: கண்டுகொள்ளாத அரசு... அரசு பள்ளிகளுக்குப் படையெடுக்கும் பெற்றோர்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

``தனியார் பள்ளி நிறுவனங்கள் 40 சதவிகித கல்விக் கட்டணத்தை வசூலித்துக்கொள்ளலாம்" என்ற உயர் நீதிமன்ற உத்தரவு நடுத்தர மக்களின் தலையில் இடியை இறக்கியிருக்கிறது.

``கொரோனா காலகட்டத்தில், கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது" என ஏற்கெனவே தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையிலும், சில தனியார் பள்ளி நிறுவனங்கள் கல்விக் கட்டணம் செலுத்தக்கோரி பெற்றோர்களுக்கு மறைமுக அழுத்தம் கொடுத்துவந்தன. இந்நிலையில், நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவையடுத்து, `கல்விக் கட்டணம் செலுத்தச் சொல்லி' நேரடியாகவே பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன தனியார் பள்ளிகள்.

``கொரோனா காலகட்டத்தில், வருமானமின்றி வாடிக்கிடக்கும் பெற்றோரிடம் கல்விக் கட்டணம் கேட்டு தனியார் பள்ளி நிறுவனங்கள் துன்புறுத்தினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்துத் தனியார் பள்ளிகள், நீதிமன்றத்தை நாடின. இந்த வழக்கில்தான், ``40 சதவிகிதம் கல்விக் கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம்" என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இதுகுறித்துப் பேசும் பெற்றோர்கள், ``கொரோனா ஊரடங்கினால், வருமானமின்றி அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றவே தவித்து வருகிறோம். இந்தநிலையில்தான் தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவையும் கண்டுகொள்ளாமல், கல்விக் கட்டணம் வசூலிப்பதில் கறாராக இருந்துவந்தன. ஆனால், `கட்டணம் வசூலிக்கக் கூடாது' என்று அரசு உத்தரவு பிறப்பித்த பிறகு அந்தப் பள்ளிகள் கொஞ்சம் அமைதியாக இருந்தன. இந்தநிலையில், நீதிமன்றமே இப்போது கட்டணம் வசூலிக்கச் சொல்லி உத்தரவு போட்டுவிட்டது.

சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கும் நாங்கள் எப்படி ஆயிரக்கணக்கான ரூபாயைக் கட்டப்போகிறோம் என்றே தெரியவில்லை. பிள்ளைகளை அரசுப் பள்ளிகளுக்கே மாற்றிவிடலாம் என்றாலும்கூட, பள்ளிக்கூடம் எப்போது திறக்கும் என்றே அரசு இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை. அதனால், தனியார் பள்ளிகளிலிருந்து மாற்றுச் சான்றிதழையும் வாங்க முடியாமல் தவித்துவருகிறோம். இப்படி மாற்று சான்றிதழை நாங்கள் வாங்காமலே இருப்பதால், `உங்கள் குழந்தை ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுத்து வருவதால், நீங்கள் கட்டாயம் கல்விக் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும்; இல்லையெனில், ஆன்லைன் வகுப்பை கட் செய்துவிடுவோம்' என்று சொல்லி மிரட்டுகிறார்கள். தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் செலுத்தி பிள்ளைகளைத் தொடர்ந்து படிக்க வைக்கவும் முடியவில்லை. மாற்றுச் சான்றிதழை வாங்கிக்கொண்டு அரசு பள்ளிகளில் சேர்த்துவிடவும் வழியில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை... அரசுதான் இப்பிரச்னையில் நல்லதொரு முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும்" என்று கலங்குகிறார்கள்.

எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் த.முத்து மாரியப்பன், இந்தப் பிரச்னை குறித்துப் பேசும்போது, ``அரசுதான் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையிலும்கூட, தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பில் தீவிரமாகத்தான் இருந்துவந்தன. இப்போது, நீதிமன்ற உத்தரவும் அவர்களுக்குச் சாதகமாக வந்துவிட்டது. எனவே, இப்போது கட்டண வசூலிப்பில் கறாராக ஈடுபட்டு வருகிறார்கள்.

மாணவர்கள்
மாணவர்கள்

ஒன்றுமில்லாத வழக்குகளில் எல்லாம், மேல்முறையீடு செல்லும் தமிழக அரசு, தற்போது இந்த வழக்கிலும் இடைக்கால உத்தரவுக்குத் தடை கேட்க வேண்டும். இல்லையெனில், அப்பாவி பொதுமக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். அரசு இந்த விஷயத்தில் கண்டும்காணாமல் இருப்பது, தனியார் பள்ளிகளுக்கு செய்யப்படும் சலுகையாகவே கருதப்படும்.

அண்டை மாநிலங்கள் எல்லாம், பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து உத்தேசமான அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், தமிழக அரசு இன்னும் இதுகுறித்து தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை. இதனால், தனியார் பள்ளிகளிலிருந்து விடுபட்டு தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வரும் பெற்றோர்களும்கூட அதற்கான வழியின்றி முடிவெடுக்க முடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள். மக்களின் சங்கடங்களைப் புரிந்துகொண்டு, இந்த விஷயத்தில் தமிழக அரசு விரைந்து ஒரு முடிவெடுக்க வேண்டும்!'' என்றார் கோரிக்கையாக.

கல்வியாளர் பேராசிரியர் கல்யாணி, இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ``கெட்டதிலும் ஒரு நல்லது என்பார்கள். அதுபோல, இந்த கொரோனா காலத்திலாவது நம் பிள்ளைகள் தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிகளை நோக்கி திரும்பிவருவது வரவேற்கத்தக்கது. ஏனெனில், தாய்மொழிக் கல்விதான் புரிதலுடன்கூடிய கல்வியாக இருக்குமே தவிர, பிற மொழிக் கல்வி என்பது வெறும் மனப்பாட பயிற்சியாக மட்டுமே இருக்கும். அதனால்தான், அகில இந்தியத் தேர்வுகளுக்குச் செல்லும் தமிழக மாணவர்கள் பெரிய அளவில் தேர்ச்சி பெற முடியாமல் தவிக்கின்றனர்.

தற்போது தனியார் கல்வி நிறுவனங்கள் கல்விக் கட்டணம் வசூலித்துவரும் இந்த நேரத்தில், நீதிமன்ற உத்தரவும் அவர்களுக்குத் துணையாக இருப்பதால், தமிழக அரசுதான் இந்த விஷயத்தில் பொதுமக்களின் நலன் கருதி சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களும்கூட, தங்கள் பிரச்னைக்குத் தீர்வு தேடி போராடத் தயாராக வேண்டும்!'' என்றார்.

முத்து மாரியப்பன் - கல்யாணி - லட்சுமி
முத்து மாரியப்பன் - கல்யாணி - லட்சுமி

தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் பெற்றோர், அரசு பள்ளிகளுக்குப் படையெடுத்துவரும் தகவல்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக அம்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான `சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி'யின் தலைமை ஆசிரியை லட்சுமியிடம் பேசியபோது,

'``சமூகத்தில் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்போரின் குழந்தைகள்தான் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வருகிறார்கள். எனவே, தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டுவருவது போன்ற ஆன்லைன் வகுப்புகள், அரசு பள்ளிகளில் சாத்தியம் இல்லாதது. இதனால், `தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைனில் படிக்கிறார்களே... ஆனால், நமக்கு இன்னும் பள்ளியே திறக்கப்படவில்லையே' என்ற மனக்குறை - தாழ்வு மனப்பான்மை நம் குழந்தைகளிடையே வந்துவிடக் கூடாது. மேலும், பல மாதங்களாக தொடர்ந்து விடுமுறையிலேயே இருந்துவரும் குழந்தைகள் தங்கள் படிப்பு ஆர்வத்தில் பின் தங்கிவிடவும் கூடாது.

இந்தச் சிக்கல்களை எல்லாம் உணர்ந்துதான், மாணவர்களுக்கான பாடங்களை வாட்ஸ்அப் வழியே அனுப்பி வைத்து தொடர்ச்சியான கற்றல் முயற்சிகளை நாங்கள் செய்துவருகிறோம். அது நல்ல பலனையும் தந்திருக்கிறது. இதுதவிர, மாணவர்களின் கற்றல் ஆர்வத்தோடு அவர்களது பொது அறிவையும் வளர்க்கும் நோக்கில், செய்தித் தாள் வாசிக்கும் பழக்கம், யோகா தினம், காமராஜர் பிறந்த தினம் போன்ற விசேஷ நாட்களில் ஓவிய ஆர்வத்தை வளர்ப்பதற்கான போட்டிகள், திருக்குறளை மனப்பாடம் செய்து பாடலாகப் பாடுவது போன்ற பல்வேறு பயிற்சிகளையும் போட்டிகளையும் நடத்திவருகிறோம். இதனால், குழந்தைகள் தொடர்ந்து கற்றலில் ஆர்வத்தோடு பங்கேற்றுவருவதோடு, அவர்களின் தேவையற்ற தாழ்வு மனப்பான்மையும் தவிர்க்கப்படுகிறது.

மாணவர்கள்
மாணவர்கள்

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், அரசு பள்ளிகள் அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளும் தரமான கல்வியை அளித்து வருகின்றன. எனவேதான் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களே எங்கள் பள்ளியில் சேர்ந்து படிக்க அதிக ஆர்வம் காட்டிவருகிறார்கள். இன்னும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும், என்னென்ன விதிமுறைகளைக் கடைப்பிடித்து தனிநபர் இடைவெளியைப் பின்பற்றப்போகிறோம் போன்ற விவரங்கள் எதுவும் இதுவரை துறை ரீதியாக எங்களுக்கு அறிவுறுத்தப்படவில்லை. இந்தச் சூழலில், முன் எப்போதையும்விட இந்த வருடம், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பெரும்பான்மையான மாணவர்கள் எங்கள் பள்ளியில் சேர அனுமதி கேட்டு வருகிறார்கள்'' என்றார்.

கல்விக் கட்டணம் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது, ``கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் பெரும்பான்மையான பெற்றோர் சிரமப்பட்டு வருவதாக" அரசுத்தரப்பிலான வாதத்தின்போது குறிப்பிடப்பட்டது. ஆனாலும்கூட, `தனியார் பள்ளிகள் 40 சதவிகித கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம்' என்ற இடைக்கால உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத்தரப்பில் மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை.

இதனால், பெரும்பான்மையான பெற்றோர், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் தொடர்ந்து படிக்க வைக்கவும் முடியாமல், அரசுப் பள்ளிகளில் சேர்க்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் திண்டாடி வருகின்றனர். பொதுமக்களின் இந்தப் பிரச்னையைக் களையும் நோக்கில், `பள்ளிக்கல்வித்துறை எந்த மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளப்போகிறது...' என்ற கேள்விக்கு விடை கேட்டு, அமைச்சர் செங்கோட்டையனை அவரது கைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். `உபயோகத்தில் இல்லை' என்ற அறிவிப்பு மட்டுமே கிடைத்தது.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

இதையடுத்து சென்னையிலுள்ள அவரது உதவியாளரிடம் பேசியபோது, ``அமைச்சர் கோபிசெட்டி பாளையத்தில் இருக்கிறார். அங்குள்ள அமைச்சரின் உதவியாளரைத் தொடர்புகொள்ளுங்கள்'' என்று பதில் கிடைத்தது. உடனே அந்த உதவியாளரது கைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு, விவரம் கூறினோம். ``அமைச்சரிடம் கேட்டு சொல்கிறேன்...'' என்றார். ஆனாலும் நமக்கு அழைப்பு வராததையடுத்து அமைச்சரின் மின்னஞ்சல் முகவரிக்கு நமது கேள்விகளை அனுப்பி வைத்துவிட்டு, மீண்டும் உதவியாளரைத் தொடர்புகொண்டு, ``அமைச்சரின் விளக்கத்துக்காகத் தொடர்ந்து முயற்சி செய்துவருகிறோம்...'' என்றோம்.

``சரி... அதற்கு என்ன பண்ணலாம் என்கிறீர்கள்...'' என்று `பொறுப்பாக' பதிலளித்தார் அந்த உதவியாளர். ``அமைச்சரிடம் கூறுகிறேன்... என்றீர்களே...'' என்று நாம் கேட்ட கேள்விக்கு, ``அமைச்சரிடம் கூறினேன்... பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டார்'' என்றார் தெளிவாக.

ஆன்லைன் (அ) தொலைக்காட்சி வழி வகுப்புகள்... அமைச்சருக்கு சில கோரிக்கைகள்!

இதையடுத்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் தற்போதைய செய்தித்தொடர்பாளருமான வைகைச்செல்வனிடம், ``நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்குத் தடை கேட்டு தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமா?" என்ற கேள்வியை கேட்டோம்...

``தனியார் பள்ளிகள் 40 சதவிகித கட்டண வசூலிப்பு செய்யலாம் என்றாலும்கூட, இப்போதைய நெருக்கடியான காலகட்டத்தில், `கட்டணம் செலுத்தச்சொல்லி' பெற்றோர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பும் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, கல்வி கட்டணத்தை செலுத்த முடிந்தவர்கள் செலுத்திக்கொள்ளலாமே தவிர, செலுத்த முடியாத அளவுக்கு வறுமையில் தவிப்பவர்களை யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது.

வைகைச் செல்வன்
வைகைச் செல்வன்

ஒருவேளை எந்தக் கல்வி நிறுவனமாவது அப்படி வலுக்கட்டாயப்படுத்தினால், அதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவரிடம் புகார் தெரிவிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்ததாக, பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக, பெற்றோர் கருத்துக் கேட்புக்கூட்டத்தை விரைவில் தமிழக அரசு நடத்தவிருக்கிறது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகுதான் இதுகுறித்த அனைத்துக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்!'' என்றார் விளக்கமாக.

அடுத்த கட்டுரைக்கு