Published:Updated:

''உக்ரேன்லதான் என் டாக்டர் கனவு நனவாகும்!" - 'நீட்' அழகுலட்சுமி!

சக்தி தமிழ்ச்செல்வன்

`மூணு வருஷமா என்ட்ரன்ஸ் எக்ஸாம்தான் எழுதுறேன். இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலைனு நினைச்சாதான் வருத்தமா இருக்கு.’

அழகுலட்சுமி
அழகுலட்சுமி

``நீட் தேர்வில் மூன்று முறை பாஸாகியும், எனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்கவில்லை" எனக் கோவையைச் சேர்ந்த அழகுலட்சுமி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியது வைரலானது. நன்றாகப் படித்து மருத்துவராக வேண்டுமென்பதுதான் தமிழகத்திலுள்ள பல ஏழை மாணவர்களின் கனவு. மாணவர்கள் 12-ம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்ணைப் பொறுத்து முன்பு மருத்துவ கவுன்சிலிங் நடைபெற்றது. ஆனால், நீட் தேர்வு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்களே மருத்துவம் படிக்கும் மாணவர்களை முடிவு செய்தது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

'நீட்' தேர்வு நடைமுறைப்படுத்தபட்டது முதலே அது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சி.பி.எஸ்.இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் எப்படி ஒரே பாடத்திட்டம் கொண்ட தேர்வை எழுத முடியும் எனப் பலரும் கேள்வி எழுப்பினர். அனிதா, பிரதீபா என சில மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறாததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளையும் விவாதங்களையும் உண்டாக்கின.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டம் கொண்டு நீட் தேர்வை அணுகுவது சிரமம். தமிழகத்துக்கு நீட் தேவையில்லை எனப் பல கல்வியாளர்கள் கூறினர்.

நீட் தேர்வின் மூலம் தனியார் கல்லூரிகளின் கல்விக் கட்டணக் கொள்ளை குறையும் எனவும் கூறப்பட்டது. இந்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே நீட் தேர்வுக்கென நிறைய தனியார் பயிற்சி மையங்களும் நகரங்களில் ஆங்காங்கே தொடங்கப்பட்டன.

ஒவ்வொரு முறை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் `அரசுப் பள்ளியில் படித்த மாணவி தேர்ச்சி பெற்றார்’ என்ற செய்திகள் வெளிவரும். அதில் சிலருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இந்த வருடம் நீட் தேர்வு முடிவுகள் வெளியானபோது அழகுலட்சுமியின் பெயரும் கொண்டாடப்பட்டது. கோவையைச் சேர்ந்த அழகுலட்சுமி அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்தவர்.

அழகுலட்சுமி தனது குடும்பத்துடன்
அழகுலட்சுமி தனது குடும்பத்துடன்

அவரின் அம்மா ஹோட்டலில் சப்ளையராக வேலை பார்க்கிறார். அவரின் அப்பா வாட்ச்மேனாக வேலை பார்க்கிறார். அழகுலட்சுமி அவரின் பெற்றோருக்கு ஒரே மகள். 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் 420 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். ஆனால், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலில் நுழைய அழகுலட்சுமியின் மதிப்பெண்கள் போதவில்லை.

வறுமையான சூழலில் படித்து வெற்றி பெற்றார் என அவரது பெயர் கொண்டாடப்பட்டது. ஆனால், தனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை எனச் சொல்கிறார் அழகுலட்சுமி. அவரிடம் பேசினோம்.

"நீட் எக்ஸாம்ல பாஸானதும் நிறைய பேர் போன் பண்ணி பாராட்டினாங்க. ஆனா, எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கல. பி.டி.எஸ்தான் கிடைச்சது. நான் மூணாவது தடவை நீட் எழுதியிருக்கேன். மூணு தடவையுமே பாஸாகிட்டேன். ஆனால், மூணு தடவையும் எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கல. சின்ன வயசுல இருந்தே டாக்டர் ஆகணும்கிறது என்னோட ஆசை. அதுக்காகத்தான் ஸ்கூல் முடிச்சதும் நீட் எக்ஸாமுக்கு படிக்க ஆரம்பிச்சேன்.

முதல் தடவை நீட்ல 202 மார்க் எடுத்தேன். அடுத்த வருஷம் 316 மார்க் எடுத்தேன். சமீபத்துல நடந்த தேர்வுல 420 மார்க் எடுத்துருக்கேன். மூணு தடவை பாஸாகியும் சீட் கிடைக்காதது  வருத்தமா இருக்கு.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இப்போ உக்ரைன்ல மெடிக்கல் படிக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன். டாக்டராகணும்கிறது ஆசை. அப்பா, அம்மாவை நினைச்சாதான் கஷ்டமா இருக்கு. இந்நேரம் நான் வேற ஏதாவது கோர்ஸ் படிச்சிருந்தா, படிப்பை முடிக்குற நிலைக்கு வந்திருப்பேன். மூணு வருஷமா என்ட்ரன்ஸ் எக்ஸாம்தான் எழுதுறேன். இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலைனு நினைச்சாதான் வருத்தமா இருக்கு. உக்ரைன்ல கிடைச்சாதான் உண்டு" என்றார் அழகுலட்சுமி.