Published:Updated:

போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் குறைப்பு: பட்டியலின மாணவர்களின் கல்விக்கு அச்சுறுத்தலா?

போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்
News
போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் ( Representational Image )

போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் விவகாரத்தில், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மட்டுமல்லாமல், கல்வியாளர்களும் மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.

.``இந்தியாவில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் கல்வி கற்கக் கூடாது என்பதே பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ன் முதன்மை நோக்கமாக இருக்கிறது. எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை நிறுத்துவது அவர்களின் கல்விக்கு முடிவு கட்டுவதற்கான வழி” - போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொடர்பாக, ராகுல் காந்தி, தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் கருத்துகள் இவை.

அவர், மட்டுமல்ல,``புரட்சியாளர் அம்பேத்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் போராடிப்பெற்ற கல்வி உதவித்தொகைத் திட்டமான `போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ திட்டத்தைக் கைவிடுவது என்று மோடி அரசு முடிவு செய்திருக்கிறது. இது எஸ்.சி/ எஸ்.டி மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மறைமுகமாகத் தடுக்கும் சதி. மனுஸ்மிருதியை மறைமுகமாக நடைமுறைப் படுத்தும் முயற்சி'' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். மேலும், வரும் 7-ம் தேதி ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறார்.

திராவிடர் கழகத் தலைவர், கி.வீரமணி, `60 லட்சம் மாணவர்களின் கல்விக் கண்களைப் பறிக்கும் பா.ஜ.க அரசின் இந்த முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது. மறுக்கப்பட்ட வாய்ப்பு, மீண்டும் திறக்கப்பட அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்' என்றும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மட்டுமல்லாமல், கல்வியாளர்களும் மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.

திருமாவளவன்
திருமாவளவன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கிறிஸ்துதாஸ் காந்தி, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி

``போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பை நிறுத்தியது பட்டியலின மக்களுக்கு எதிராக இந்திய அளவில் நடக்கும் சதி. பி.ஜே.பி அதை தலைமையேற்று நடத்துகிறது. பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்கு உதவி செய்யும் காரணிகளாக எவையெல்லாம் இருக்கின்றனவோ, அவற்றையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். மத்திய அரசிடமிருந்து நான்கு மாதங்களுக்கு முன்பாக, போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பை நீக்கிவிட்டு, அனைவருக்குமான ஸ்காலர்ஷிப்பைக் கொண்டு வருவதற்கு மாநில அரசிடம் கருத்து கேட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், தமிழக அரசிடமிருந்து இது குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளிவரவில்லை. யாரிடமும் இது குறித்துக் கருத்து கேட்டதாகவும் தெரியவில்லை. தமிழக அரசு இது குறித்துத் தெளிவாகப் பொதுவெளியில் விளக்க வேண்டும். அதேபோல. கடந்த நான்கு வருடங்களாக, மைய அரசு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கு நிதி உதவி அளிக்காவிட்டாலும் 'நாங்கள் கொடுப்போம்' என பட்ஜெட்டில் நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனால், தமிழகத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்காலர்ஷிப்பைக் கொடுக்காமல் நிறுத்திவைத்திருக்கிறார்கள். இந்த வருடம் ஸ்காலர்ஷிப் கொடுப்பதற்கான வேலைகளையும் இன்னும் தொடங்கவில்லை. அதேபோல, முன்பு கொடுத்ததுபோல முழுமையான தொகையையும் தற்போது கொடுப்பதில்லை. உதாரணமாக, ரூ.85,000 ஸ்காலர்ஷிப் என்றால் ரூ.50,000 தான் கொடுத்திருக்கிறார்கள். மருத்துவக் கல்வியில் `நீட்’டில் தேர்வான பட்டியலின மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தால் மட்டுமே சேருகிறார்கள். தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும் அவர்களில் 90 சதவிகிதம் பேர் சேர்வதில்லை. தேர்வாணையத்தில், 18 சதவிகிதம் பேரைத் தேர்வு செய்திருக்கிறோம் எனக் காண்பிப்பார்கள். ஆனால், அவர்கள் சேர்ந்தார்களா எனக் கேட்டால், `அதைப் பார்ப்பது எங்களின் வேலையல்ல; எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டியில் கேளுங்கள்’ என அவர்களைக் கைகாட்டுகிறார்கள். அவர்களைக் கேட்டால், `எங்களுக்குச் சம்பந்தமில்லை’ என்கிறார்கள். இதைக் கண்காணிக்க வேண்டிய ஆதி திராவிட நலத்துறையைக் கேட்டால், `மருத்துவக் கல்விக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை’ என ஒவ்வொருவரும் கழன்றுகொள்கிறார்கள்.

கிறிஸ்துதாஸ் காந்தி
கிறிஸ்துதாஸ் காந்தி

அதேபோல, பொறியியல் கல்வியை எடுத்துக்கொண்டால், 2012-ல் 10,000 பட்டியலின மாணவர்கள்தான் பொறியியல் படிப்பில் சேர்ந்தார்கள். 2017-ல் கிட்டத்தட்ட 30,000 பேர் சேர்ந்தார்கள். அதற்கு முழுமுதற் காரணம் இந்த ஸ்காலர்ஷிப்தான். ஆனால், கடந்த மூன்று வருடங்களாக ஸ்காலர்ஷிப்பை வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்ததால், கடந்த ஆண்டு 15,000-க்கும் குறைவான எண்ணிக்கையில்தான் மாணவர்கள் பொறியியல் கல்வியில் சேர்ந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு, அந்த எண்ணிக்கை இன்னமும் குறையும்.

இப்படிப் பட்டியலின மக்களுக்கான கல்வி உரிமையில் பல்வேறு இடையூறுகள் இருக்கின்றன. 'ஆதிதிராவிடர் சான்றோர் அவை' என்கிற கமிட்டி இருக்கிறது. அதைக் கூட்டி விவாதிக்கலாம். அதையும் இந்த அரசு செய்யவில்லை. கல்லூரி நிர்வாகிகளையும் மாணவர்களையும் கூப்பிட்டுப் பேசலாம்... அதையும் செய்யவில்லை. பட்டியலின மாணவர்கள் படிப்பதை அச்சுறுத்தலாக நினைக்கிறார்கள். பட்டியலின மாணவர்களுக்குக் கிடைத்துவரும் கல்வியைத் தடுப்பது என்பது அவர்களை உயிரோடு கொல்வதற்குச் சமம்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துரை.ரவிக்குமார் எம்.பி

``பா.ஜ.க அரசு அமைந்ததிலிருந்து மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டிய போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை சரிவர அனுப்புவதில்லை. அதைப் பற்றி 2016-ம் ஆண்டு தேசிய எஸ்.சி ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் 2015-16-ம் ஆண்டு தமிழ்நாட்டில் கல்லூரியில் படித்த 37,089 தலித் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் மத்திய அரசு, தமிழக அரசுக்குத் தர வேண்டிய தொகையைத் தராததுதான். 2015-16-ல் மட்டுமன்றி அதற்கு முந்தைய ஆண்டான 2014-15-லும் தமிழக அரசுக்குத் தர வேண்டிய தலித் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் தொகையை பா.ஜ.க அரசு தரவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி, இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதினார். 2014-15-ம் கல்வியாண்டில் தலித் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகைக்கென மத்திய அரசு தர வேண்டிய தொகையில் 1,175.10 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறது என அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அது மட்டுமன்றி 2015-16-க்கும் பாக்கி இருக்கிறது. எல்லாமாக சேர்த்து 1,549.76 கோடி ரூபாய் தமிழ்நாட்டு தலித் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் தொகை பாக்கி இருக்கிறது என அன்றைய முதல்வர் ஜெயலலிதா, தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ரவிக்குமார் எம்.பி
ரவிக்குமார் எம்.பி

தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித் மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையே ஆண்டுக்கு சுமார் ரூ.1,500 கோடி வரும்போது, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு ஒட்டுமொத்த இந்தியாவிலும் இருக்கிற தலித் மாணவர்களின் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்துக்காக 2017-18 பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்கும் தொகை 3,347.99 கோடி ரூபாய் மட்டும்தான். இது தமிழ்நாட்டின் பழைய பாக்கியைக் கொடுப்பதற்கே போதாது.

எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு மட்டுமன்றி, ஓபிசி, மைனாரிட்டி மாணவர்களுக்கும் போஸ்ட் மெட் ரிக் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இந்த எல்லா ஸ்காலர்ஷிப்களையும் ஒழித்துவிட்டு ஒரேயொரு ஸ்காலர்ஷிப் திட்டத்தைக் கொண்டு வர மோடி அரசு முடிவுசெய்திருக்கிறது. `பிரதம மந்திரி இளம் சாதனையாளர்கள் உதவித்தொகைத் திட்டம்' என அதற்குப் பெயரிடப்பட்டிருக்கிரது. இந்தத் திட்டத்தின்கீழ் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மைனாரிட்டி மாணவர்களோடு முன்னேறிய சாதி மாணவர்களும் (EWS) சேர்க்கப்படுவார்கள். இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்றால் மட்டுமே உதவித்தொகை கிடைக்கும். அதுவும் இந்தியா முழுவதும் அனைத்துப் பிரிவினரையும் சேர்த்து 62 லட்சம் பேருக்கு மட்டும்தான் உதவித்தொகை. மருத்துவம், பொறியியல், சமூகவியல் என எந்தப் படிப்பாக இருந்தாலும் ஆண்டுக்கு வெறும் 30,000 ரூபாய் மட்டுமே தரப்படும் என மோடி அரசு கூறியிருக்கிறது.''

''2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும், பட்ஜெட்டுக்கு முன்பாகவே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வி.சி.க சார்பில் சந்தித்து மனு ஒன்றை அளித்தோம். போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கென பல்வேறு மாநிலங்களுக்கு 11,000 கோடி பாக்கி தர வேண்டியிருக்கிறது. எனவே, போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு அதில் வலியுறுத்தினோம். ஆனால் 2018-19 -ல் 6,000 கோடியாக இருந்ததை அவர் 2019-20 பட்ஜெட்டில் 3,000 கோடியாகக் குறைத்துவிட்டார். 2020-21 பட்ஜெட்டிலும் அது உயர்த்தப்படவில்லை. சுருக்கமாகச் சொன்னால் இனி எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டாக்கனியாகிவிடும்.''
துரை.ரவிக்குமார் எம்.பி

`மற்ற ஸ்காலர்ஷிப்களுக்கும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. ஆண்டுக்கு இவ்வளவுதான் ஒதுக்குவோம், இவ்வளவு சதவிகித உதவிதான் செய்வோம் என்றெல்லாம் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பில் எந்த விதிமுறைகளும் இல்லை. அதேபோல, முதல் ஆண்டில் தேர்ச்சி பெற்றால்தான் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான கட்டணங்களைத் தருவோம் என்றெல்லாம், சில கல்வி உதவித் தொகைத் திட்டங்களில் விதிகள் இருக்கின்றன. ஆனால், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பில் இது போன்ற எந்தத் தடையும் இல்லை.

எவ்வளவு மாணவர்கள் படிக்க வந்தாலும், அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கித்தான் ஆக வேண்டும். இது கொண்டு வரப்பட்டதற்கான நோக்கமும் அதுதான். அதனால்தான், சமூகரீதியாக ஒடுக்கப்பட்டு, கல்வி உரிமை மறுக்கப்பட்டிருந்த பட்டியலின மாணவர்கள் நிறைய பேர் படிக்க வந்தார்கள். அவர்களை மீண்டும் கல்வி நிலையங்களுக்குள் நுழையவிடாமல் தடுப்பது அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்’ என்பதே கல்வியாளர்களும் எதிர்க்கட்சியினரும் முன்வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

தங்கம்தென்னரசு (முன்னாள் அமைச்சர்,தி.மு.க)

''ஆண்டாண்டு காலமாக இருக்கிற உரிமைகளைப் பறிக்கும் விஷயமாகத்தான் நான், மத்திய அரசின் இந்த முடிவைப் பார்க்கிறேன். இது போன்ற ஸ்காலர்ஷிப் இருந்ததால்தான், தாழ்த்தப்பட்ட மக்கள் படிப்பதற்காக வந்தார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் இது உதவி செய்திருக்கிறது. அதை நிறுத்துவது சரியல்ல. அடிமட்டத்திலிருக்கும் மக்களைப் பற்றி கவலையில்லாமல், அக்கறையில்லாமல் நடந்துகொள்கிறார்கள். தங்களின் அஜெண்டாக்களையெல்லாம் இந்த பேன்டமிக் காலத்திலேயே நிறைவேற்றிவிட வேண்டும் எனத் துடிக்கிறார்கள்'' என்றார்.

மேற்கண்ட விஷயங்கள் குறித்து விளக்கம் கேட்க, தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர், ராஜலட்சுமியைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவருடைய எண்ணுக்கு அழைப்பு போகவில்லை. தொடர்ந்து அவரின் உதவியாளரை அழைத்தோம். ``அமைச்சரிடம் பேசிவிட்டு வருகிறேன்'' என்றவர் இரண்டு முறை அழைத்தும் எடுக்கவில்லை. தொடர்ந்து. அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரிடம் பேசினோம்.

வைகைச்செல்வன் (முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க)

``மத்திய அரசு கண்டிப்பாக போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பை நிறுத்தக் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. ஒருவேளை அப்படி நிறுத்தினால், மாநில அரசின் சார்பாக, எங்களின் பங்களிப்பாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம்'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்க, பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவரும் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலையைத் தொடர்புகொண்டோம்.

அண்ணாமலை
அண்ணாமலை
நா.ராஜமுருகன்

``2017 வரைக்கும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கிவந்தது. அது எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு மட்டுமல்ல, மைனாரிட்டி உள்ளிட்ட பல பிரிவினருக்கும் வழங்கி வந்தது. 2018-ம் ஆண்டிலிருந்து, மாநில அரசு, அதற்காக நிதிகளை ஒதுக்கிக்கொள்ள வேண்டும் எனப் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள். அதை மாணவர்கள் அந்த மாநில அரசிடம் கேட்க, அந்த மாநில முதல்வர், `எங்களிடம் பணம் இல்லை. மத்திய அரசிடம் கேளுங்கள்' எனக் கைகாட்டியிருக்கிறார். பல மாநிலங்களில் இந்தப் புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டு உதவி செய்துவரும் நிலையில், ஒரு மாநிலத்தில் மட்டும் அது வேண்டுமென்றே பிரச்னையாக்கப்படுகிறது. இதை முழுவதும் நிதி சம்பந்தமான பிரச்னையாகத்தான் நான் பார்க்கிறேன். பா.ஜ.க கொள்கைரீதியாக இந்த முடிவை எடுத்ததாக நான் பார்க்கவில்லை. எது, எதற்கோ கோடிக்கணக்கில் செலவு செய்யும் மாநில அரசுகள், கல்விக்காக 800 கோடி ரூபாயைச் செலவு செய்ய முடியாதா?

தமிழகத்தில் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் 2019-ம் ஆண்டுவரை வழங்கப்பட்டுவிட்டது என்றுதான் அரசின் இணையப் பக்கத்தில் இருக்கிறது. ஆனால், எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிற விவரங்கள் இல்லை. ஒருவேளை அதற்கான சரியான புள்ளிவிவரங்கள், ஆதாரங்கள் வழங்கப்பட்டால், நிச்சயமாக இந்த விவகாரத்தை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறோம்'' என்றார் அவர்.