அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பணிக் காலம் நிறைவு பெற்றதையடுத்து புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதுமிருந்து 160 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 10 பேர்கொண்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டது. அந்தப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஐந்து பேராசிரியர்கள் , சென்னை ஐஐடி-யின் பேராசிரியர்கள் இரண்டு பேர் உட்பட 10 பேருக்கான நேர்காணல் 9.8.2021-ம் தேதி நடந்தது.

இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவந்த டாக்டர் ஆர்.வேல்ராஜ், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.வேல்ராஜ் துணைவேந்தராக மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார் என ஆளுநர் மாளிகை அறிவித்திருக்கிறது. புதிய துணைவேந்தர் வேல்ராஜுக்கு அண்ணா பல்கலைக்கழக டீச்சர்ஸ் அசோசியேஷனின் (AUTA) தலைவர் அருள் ஆரம், செயலாளர் சந்திரமோகன், பொருளாளர் சக்திவேல் ஆகியோர் கூட்டமைப்பு சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். அந்த வாழ்த்து செய்தியில் புதிய துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் இந்தப் பல்கலைக்கழகம் வளர்ச்சியடையும் எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
புதிய துணைவேந்தர் வேல்ராஜ் குறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் பேசினோம். ``நாகர்கோவிலைச் சேர்ந்த வேல்ராஜ், கடந்த 1986-ம் ஆண்டு யு.ஜி-யை அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் 1992-ம் ஆண்டு பி.ஜி-யை அண்ணா பல்கலைக்கழகத்திலும் படித்தார். இவர், 1999-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1987-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை ஸ்ரீபெரும்புதூரிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

கடந்த 1992-ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக கிண்டி இன்ஜினீயரிங் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றினார். 2004-2010-ம் ஆண்டு வரை துணை இயக்குநராகவும், 2010-2013-ம் ஆண்டு வரை இயக்குநராகவும், 2013-ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக institute for energy studies -ல் இயக்குநராகவும் பணியாற்றிவந்தார். தற்போது துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கிறார்’’ என்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய வேல்ராஜை புதிய துணைவேந்தராக நியமித்ததற்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.