Published:Updated:

``கல்விக்காக இந்தியா, பூடானைவிடக் குறைவாகவே செலவிடுகிறது!” – பேராசிரியர் அனில் சட்கோபால் #NEP

பேராசிரியர் அனில் சட்கோபால் கல்வி
பேராசிரியர் அனில் சட்கோபால் கல்வி

`பால் ஜகத் பள்ளி வளாகங்களை உருவாக்கிய நானா தேஷ்முக், பாரதிய ஜன சங்கத்தைச் சேர்ந்தவர். அந்தப் பள்ளி வளாகங்களில், குழந்தைகளின் சிறு வயதிலிருந்தே அவர்களுக்குத் தூய்மைவாதத் திருமணங்கள் பற்றியும் சாதிகள் பற்றியும் மதச்சார்புச் சித்தாந்தங்களும் கற்பிக்கப்படுகின்றன.’

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் அனில் சட்கோபால், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் பணியாற்றியவர். கல்வி உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்தில், அதில் இருக்கும் தவறுகள் திருத்தப்பட வேண்டும் எனத் தொடர்ந்து குரல்கொடுத்தவர். தேசிய தகுதி நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது அது, சமூக நீதிக்கு எதிரானது எனக் கூறி, அதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த இன்றளவும் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டுவருகிறார்.

மைசூரு ஜே.எஸ்.எஸ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜவகர் நேசன் எழுதிய ‘In search of education' புத்தக வெளியீட்டுக்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தவரை விகடனுக்காகச் சந்தித்தோம்.

2014-ம் ஆண்டு தொடங்கி, இந்திய அரசு கல்வித்துறையில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் குறித்த நீண்ட உரையாடலுக்கு இடையே, “கல்விக் கொள்கை வரைவு வழியாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சிகளுக்குப் பொதுமக்களின் பணத்தை அரசு செலவிட இருக்கிறது. இது உங்களுக்குத் தெரியுமா?” என்றார்.

அது தொடர்பாக, வரைவு கல்விக் கொள்கையில் நாம் கவனிக்கத் தவறிய சில பக்கங்களில், குறிப்பிடப்பட்டிருக்கும் சில திட்டங்களின் பின்னணியை விளக்கத் தொடங்கினார்.

”கல்விக்கொள்கை வரைவின் அத்தனை பகுதிகளும் நிறைவடைந்த பின், அதன் பிற்சேர்க்கைப் பகுதியில் சில தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதில், புதிய கல்விக் கொள்கைக்கான பொருளாதாரத் தேவை பற்றி விவாதிக்கப்படுகிறது. கல்விக்காக இந்தியா 2.7 சதவிகித உள்நாட்டு உற்பத்தியைத்தான் செலவிடுகிறது. பூடான் போன்ற சிறிய நாடுகள்கூட நம்மைவிட அதிகம் செலவிடுகின்றன. அதனால், கோத்தாரி கமிஷன் சொன்னதுபோல, வரும் காலத்தில் கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதத்தைச் செலவிட வேண்டும்.

பேராசிரியர் அனில் சட்கோபால்
பேராசிரியர் அனில் சட்கோபால்

கொள்கை வரையறை செய்யும்போது, மக்களிடம் அவர்கள் கலந்து ஆலோசிக்கவில்லை. ஆனால், 'நாங்கள் மக்களிடம் கேட்டே இந்த கல்விக் கொள்கையை வரையறை செய்கிறோம்' என்று கொள்கை வரைவின் தொடக்கத்தில் இதே கோத்தாரி கமிஷனைத்தான் குற்றம் சாட்டியிருந்தார்கள். கல்விக்கான ஒதுக்கீட்டு நிதி சதவிகிதத்தை அதிகரிப்பதற்காக தனியார் நிதிக் கொடைகளை ஊக்குவிக்க வேண்டும். அரசின் எந்த வித சட்டதிட்டமும் அந்த நிதிக்கொடைகளைப் பாதிக்காது என்று கூடுதலாக அந்தப் பகுதியில் சேர்க்கப்பட்டிருந்தது.

”இங்கு, பெரும்பாலான தனியார் கல்விக்கூடங்கள் இதுபோன்ற நிதிக் கொடைகளில்தான் ஏற்கெனவே இயங்குகின்றன என்னும் நிலையில், அரசின் கல்விக்கொள்கை வரைவு Public philanthropic partnership என்கிற திட்டத்தின் அடிப்படையில், அரசு கல்விக்கூடங்களிலும் செயல்படுத்தவேண்டிய அவசியம் என்ன? பள்ளிகளுக்குப் பதிலாகப் பள்ளி வளாகங்களைக் கொண்டு வருவது என்கிற திட்டத்தை முன்வைக்கும் புதிய கல்விக் கொள்கை, வளாகங்களில் பயிலும் மாணவர்களின் மேம்பாட்டுக்காக அரசு சாரா அமைப்புகள் மற்றும் சிறப்புப் பயிற்சிபெற்ற செயற்பாட்டாளர்கள் அதற்காகப் பணியில் அமர்த்தப்படுவார்கள்; அவர்களின் செயல்பாடுகளுக்காகவும் பயிற்சிக்காகவும் இந்த நிதிக் கொடைகள் செலவிடப்படும் என்று குறிப்பிடுகிறது.

குறிப்பாக, குழந்தைகளின் மூன்று வயதிலிருந்தே அவர்களுக்கான கல்வியை முக்கியத்துவப்படுத்தும் இந்தக் கொள்கை, அவர்களுக்கான கற்பித்தலுக்காக இந்த செயற்பாட்டாளர்களும் அரசு சாரா அமைப்புகளின் உறுப்பினர்களும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிடுகிறது.

`உரிமை பறிபோகும்; கல்வி சிதைந்துபோகும்!'- புதிய கல்விக் கொள்கை பற்றி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி

"ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், ஒரு கோடி தன்னார்வலர்களைச் சேர்ப்பதே தங்கள் அமைப்பின் நோக்கம் எனக் கடந்த 2014-ல் சொன்னதை இங்கு நினைவுபடுத்துகிறேன். ஆர்.எஸ்.எஸ் உருவாக்கும் தன்னார்வலர்களுக்கான பணியைத்தான் புதிய கல்விக் கொள்கை வரைவு குறிப்பிடுகிறது. அதன்மூலம், அந்த நிதிக் கொடை ஆர்.எஸ்.எஸ்ஸுக்குத்தான் செல்லும். இதை நான் காரணமில்லாமல் குறிப்பிடவில்லை.

பேராசிரியர் அனில் சட்கோபால் கல்வி
பேராசிரியர் அனில் சட்கோபால் கல்வி

அதன் முன்மாதிரியாக, நாக்பூரில் இருக்கும் பால்ஜகத் பள்ளியைக் குறிப்பிடலாம். அது, தொடங்கப்பட்ட காலம் தொட்டு இதே திட்டத்தைத்தான் செயல்படுத்திவருகிறது. பால் ஜகத் பள்ளி வளாகங்களை உருவாக்கிய நானா தேஷ்முக், பாரதிய ஜன சங்கத்தைச் சேர்ந்தவர். அந்தப் பள்ளி வளாகங்களில் குழந்தைகளின் சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு தூய்மை வாதத் திருமணங்கள் பற்றியும், சாதிகள் பற்றியும் மதச்சார்புச் சித்தாந்தங்களும் தன்னார்வலர்களாலும், செயற்பாட்டாளர்களாலும் கற்பிக்கப்படுகின்றன. அது தவிர, நன்கொடை பெறுவது பற்றியும் அதிகாரபூர்வமாக அவர்களது வலைதளத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள். இதையே, அரசும் தற்போது தனது திட்டமாகச் செயல்படுத்த இருக்கிறது" என்றார்.

பின் செல்ல